நுபுர் ஷர்மா: ``நீதிமன்றத்தின் கருத்துகள் நீதித்துறையின் எல்லையை மீறிய செயல்" - 117 பேர் கூட்டறிக்கை

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த பா.ஜ.க-வின் செய்தித்தொடர்பாளராக இருந்த நுபுர் ஷர்மா-வின் கருத்துக்கு, இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதிலுமுள்ள இஸ்லாமியர்களிடமிருந்தும் பெரும் கண்டனங்கள் வந்தது.

அதைத் தொடர்ந்து, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன. இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், நுபுர் ஷர்மாவின் கருத்துக்கு ஆதரவாக பேஸ்புக்கில் டெய்லர் ஒருவர் வீடியோ வெளியிட்டதாக, அந்த நபரை இரண்டு பேர் தலை துண்டித்துக் கொலைசெய்தது தேசிய அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

நுபுர் ஷர்மா விவகாரம்

இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம், நுபுர் ஷர்மா-வுக்கு கண்டனம் தெரிவித்தது. அதில்.``மதம் சார்ந்த விஷயங்களில் மிகவும் கவனமாகச் செயல்படவேண்டிய ஒரு நிலையில், ஒரு தேசிய ஊடகத்தில் பேசக்கூடிய நபர் இப்படிப் பொறுப்பில்லாமல் நடந்துகொண்டதும், அதன்மூலம் ஏற்பட்ட விளைவும், ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கிவிட்டது.

ஒரு கட்சியின் செய்தித்தொடர்பாளராக இருப்பதால் எதையும் பேசிவிட முடியாது. உதய்பூரில் நடந்த படுகொலைக்கு இதுபோன்ற பொறுப்பற்ற செயல்களே காரணம். இதற்காக ஒட்டுமொத்த நாட்டு மக்களிடம் நுபுர் ஷர்மா மன்னிப்பு கேட்க வேண்டும்" என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

உச்ச நீதிமன்றம்

இந்த நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்த இந்த கருத்துக்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள், முன்னாள் ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 117 பேர் இணைந்து கூட்டாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், ``நுபுர் ஷர்மா வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்த கருத்துகள் துளியும் சம்மந்தமில்லாதவை. நீதிமன்றத்தின் இது போன்ற கருத்துக்கள் நீதித்துறை கண்ணியத்திற்கு எதிரானது.

நீதிமன்றத்தின் இந்த கருத்துகள், நீதித்துறையின் எல்லையை மீறிய செயல். நாட்டில் நடக்கும் கொந்தளிப்புக்கு நுபுர் ஷர்மா மட்டுமே பொறுப்பு என்பது போல அமைந்த நீதிபதிகளின் கருத்தில் எந்த நியாயமும் இல்லை. நீதித்துறையின் வரலாற்றில் இந்த கருத்துகள் அழிக்க முடியாத வடுவாகியுள்ளது" எனக் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.



from Latest News https://ift.tt/eqG6vS7

Post a Comment

0 Comments