என் வயது 40. தினமும் காலையில் சமையல் வேலையில் இருக்கும்போது ஒருமுறை தலைச்சுற்றல் வருகிறது. ஒரு நிமிடம் ஓய்வெடுத்தால் சரியாகிவிடுகிறது. லோ பிபியாக இருக்கும், ஏதேனும் இனிப்பாகச் சாப்பிட்டால் சரியாகிவிடும் என்று கேள்விப்பட்டதில் இருந்து, தலைச்சுற்றல் வரும்போதெல்லாம் இனிப்பு சாப்பிடுகிறேன். லோ பிபி ஏன் வருகிறது, அதற்கும் இனிப்புக்கும் என்ன தொடர்பு? இதை குணப்படுத்த முடியுமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்
நீங்கள் எதைவைத்து உங்களுக்கு லோ பிபி ( Low BP) இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள் என்பது தெரியவில்லை. பொதுவாக லோ பிபி என்பது ரத்த அழுத்தமானது 90/60-க்கு கீழே இருக்கும் நிலை.
பலரும் தனக்கு லோ பிபி இருப்பதாகச் சொல்வதுண்டு. அவர்கள் உணரும் அறிகுறிகளை வைத்து அப்படித் தவறாகப் புரிந்து கொள்கிறவர்கள்தான் அதிகம். ஆனால் முறைப்படி ரத்த அழுத்தத்தை டெஸ்ட் செய்து பார்த்து, அது 90/60-க்கு கீழே இருப்பது உறுதிசெய்யப்பட்டால்தான் அதை லோ பிளட் பிரஷர் என எடுத்துக்கொள்ள முடியும்.
சென்னை போன்ற நகரங்களில் நிலவும் வெப்பநிலை காரணமாக, உடலில் நீர்ச்சத்து குறைந்து இப்படி குறை ரத்தஅழுத்தம் வருவது மிகவும் சகஜம். போதுமான அளவு தண்ணீர் குடிக்காதவர்களுக்கு அவ்வப்போது ரத்த அழுத்தம் குறைய வாய்ப்புகள் உண்டு.
அனீமியா எனப்படும் ரத்தச்சோகை, தைராய்டு குறைபாடு போன்ற பாதிப்புகள் உள்ளவர்களுக்கும் ரத்த அழுத்த அளவு குறையலாம். சிலருக்கு அவர்கள் எடுத்துக்கொண்டிருக்கும் மருந்துகளின் பக்கவிளைவாகக் கூட ரத்த அழுத்த அளவு குறையலாம்.
எனவே, நீங்களாக உங்களுக்கு குறை ரத்த அழுத்தம் என நினைத்துக் கொண்டிருக்காமல் முறையான பரிசோதனையின் மூலம் அதை உறுதிசெய்ய வேண்டும். அதற்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிந்து, அதை குணப்படுத்த வேண்டும்.
குறை ரத்த அழுத்தத்துக்கும் ஸ்வீட் சாப்பிடுவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஒருவேளை உங்களுக்கு ரத்தச் சர்க்கரை அளவு குறைந்து, அதன் விளைவாக தலைச்சுற்றல் ஏற்பட்டிருக்கலாம். ரத்தச் சர்க்கரை அளவு குறைந்து, தலைச்சுற்றல் வருவோருக்கு இப்படி உடனே ஸ்வீட் கொடுப்பது நம்மூரில் பலரும் செய்யும் தவறு. இப்படி ஸ்வீட் சாப்பிடுவதால் லோ பிளட் பிரஷர் பாதிப்பை சரிசெய்ய முடியாது.
உடலில் நீர்ச்சத்து வறண்டு, அதன் விளைவாக ரத்த அழுத்தம் குறையும்போதுதான் இளநீர் குடிப்பது, ஓஆர்எஸ் கலந்த தண்ணீர் குடிப்பது போன்றவற்றைச் செய்யச் சொல்வார்கள். மற்றபடி இனிப்புக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்பதால் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுகி, உங்கள் தலைச்சுற்றலுக்கான காரணத்தைத் தெரிந்து சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
from Latest News https://ift.tt/eDO1swr
0 Comments