தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே வீரப்பட்டியைச் சேர்ந்தவர் மாணிக்கராஜா. கடந்த 2 ஆண்டுகள் வெளிநாட்டில் வேலைப் பார்த்துவிட்டு தற்போது உள்ளூரில் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவர், அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்த உறவுக்காரப் பெண்ணான ரேஷ்மா என்பவரைக் காதலித்து வந்திருக்கிறார். இவரின் காதல் தெரியவரவே ரேஷ்மாவின் தந்தை முத்துக்குட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
கடந்த ஜூன் 29-ம் தேதி மாணிக்கராஜா, ரேஷ்மாவுடன் திருமணம் செய்துகொண்டு மதுரை மாவட்டம், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார். போலீஸார் விசாரணை நடத்தி, அவர்கள் இருவரும் மேஜர் என்பதால் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தினர்.
இதற்கிடையே, எட்டயபுரம் காவல் நிலையத்தில் தன் மகளைக் காணவில்லை என, ரேஷ்மாவின் தந்தை முத்துக்குட்டி புகார் அளித்திருந்தார். ரேஷ்மா காதலனுடன் திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தது தெரியவந்தவுடன், எட்டயபுரம் போலீஸார் அவர்களை வீரப்பட்டி வரவேண்டாம் என எச்சரித்தனர். உறவினர்களும் இங்கு நிலைமை சரியில்லை தற்போது வர வேண்டாம் எனக் கூறியிருக்கின்றனர்.
இந்த நிலையில், கடந்த வாரம் மாணிக்கராஜா தன் மனைவி ரேஷ்மாவுடன் சொந்த ஊரான வீரப்பட்டிக்கு வந்து தன் தாய் பேச்சியம்மாளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று பிற்பகலில் தம்பதி வீட்டில் தனியாக இருந்தனர். பேச்சியம்மாள் வழக்கம்போல 100 நாள் வேலைக்குச் சென்றுவிட்டு, மாலை 4 மணிக்கு வீடு திரும்பியிருக்கிறார். அப்போது மகனும், மருமகளும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்திருக்கின்றனர். பேச்சியம்மாளின் கதறல் சத்தம் கேட்டு அந்தப் பகுதியில் உள்ளவர்கள் திரண்டனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், காதல் ஜோடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த ரேஷ்மாவின் தந்தை முத்துகுட்டி இருவரையும் வெட்டிக் கொலைசெய்தது தெரியவந்தது.
போலீஸார் கொலைக்குப் பயன்படுத்திய அரிவாளை முத்துக்குட்டியின் வீட்டிலிருந்து கைப்பற்றியிருக்கின்றனர். இது குறித்து எட்டயபுரம் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவுசெய்து தலைமறைவான முத்துக்குட்டியைத் தேடி வருகிறார்கள்.
காதல் திருமணம் செய்து 25 நாள்களே ஆன நிலையில், தம்பதி கொலைசெய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/yZJljcv
0 Comments