விமான நிலையத்தில் தரை இறங்க வேண்டிய விமானம், விமானிகள் தூங்கியதால் தரையிறங்காமல் 25 நிமிடங்கள் பறந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த திங்களன்று சூடானின் கார்ட்டூமிலிருந்து எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அப்பாபாவுக்கு, ET343 என்ற விமானம் பயணிகளுடன் சென்றிருக்கிறது. இந்த விமானத்தை இரண்டு எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானிகள் இயக்கியிருக்கிறார்கள்.
இந்த நிலையில், அடிஸ் அபாபா விமான நிலையத்தில் விமானம் தரையிறங்காமல் பறந்திருக்கிறது. அதையடுத்து, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு நிலையம் (ATC) தரையிறங்காத விமானத்தை அணுகி எச்சரித்திருக்கிறது. ஆனாலும் விமானிகளிடமிருந்து எந்த பதிலும் இல்லை... விமானம் தொடர்ந்து 37,000 அடி உயரத்தில் பறந்திருக்கிறது. விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு நிலையம் பலமுறை முயன்றும் விமானிகளைத் தொடர்புகொள்ள முடியவில்லை.
இந்த நிலையில், விமானம் தரையிறங்க வேண்டிய ஓடுபாதையைத் தாண்டிச் சென்றபோது, ஆட்டோ பைலட் துண்டிக்கப்பட்டு, அலாரம் ஒலித்திருக்கிறது. அதன் பின்பே விமானிகள் தூக்கம் களைந்து எழுந்திருக்கின்றனர். சுமார் 25 நிமிடங்களுக்குப் பின்னர் திரும்பவும் விமானம் அடிஸ் அபாபா விமான நிலையத்தில் தரையிறங்கியது. இதில் அதிஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
மேலும், விமான கண்காணிப்பு அமைப்பு ADS-B-ன் தரவு, விமானிகள் தூங்கியதை உறுதிசெய்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக விமான ஆய்வாளர் அலெக்ஸ் மச்செரஸும் தனது ட்விட்டரில், ``இது அதிக கவனம் செலுத்தவேண்டிய செய்தி. விமானியின் சோர்வுதான் இதற்குக் காரணம்" என்று பதிவிட்டிருக்கிறார்.
இதே போலக் கடந்த மே மாதம் நியூயார்க்கிலிருந்து ரோம் செல்லும் விமானம் 38,000 அடி உயரத்தில் பயணித்தபோது இரண்டு விமானிகள் தூங்கிய சம்பவம் பரபரப்பாகப் பேசப்பட்டது குறிப்பிடதக்கது.
from Latest News https://ift.tt/GmI9BaK
0 Comments