சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர், கடந்த 8-ம் தேதி பூந்தமல்லி காவல் நிலையத்தில் பரபரப்பான புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், ``என்னுடைய அண்ணன் சேகர் (47) என் மனைவியின் 300 சவரன் தங்க நகைகளையும் என்னுடைய அம்மாவின் 200 சவரன் தங்க நகைகளையும் 100 கிராம் எடையுள்ள ஏழு தங்க கட்டிகளையும், லட்சக்கணக்கான பணத்தையும் திருடி, சுவாதி என்ற பெண்ணிடம் கொடுத்துள்ளார். அதனால் நகைகளை மீட்டு கொடுப்பதோடு நகைகளைத் திருடிய சேகர் மீதும், சுவாதி மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வள்ளி வழக்கு பதிவு செய்து சேகரையும், சுவாதியையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ராஜேஷ் கொடுத்த புகாரில் சுமார் 550 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார். ஆனால், போலீஸார் சுவாதியிடம் விசாரித்தபோது சேகரின் குடும்பத்தினர் கத்தியைக் காட்டி மிரட்டி என்னிடமிருந்து சேகர் கொடுத்த தங்க நகைகளைப் பறித்துக் கொண்டனர் என்று கூறியுள்ளார். மேலும் சேகர் வாங்கிக் கொடுத்த சொகுசு கார்களில் ஒன்றை மட்டும் போலீஸார் பறிமுதல் செய்தனர். மற்ற கார்கள் எங்கே என்று சுவாதியிடம் கேட்டதற்கு, என்னுடைய பாய் ஃப்ரெண்ட்ஸ்களுக்கு கிஃப்ட்டாக கொடுத்துவிட்டேன் என்று பதிலளித்துள்ளார். அதனால் தங்க நகைகளையும் கார்களையும் பறிமுதல் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த போலீஸாரிடம் கேட்டதற்கு, ``கைதான சேகரும், சுவாதியும் திருமணமணமானவர்கள். இந்த நிலையில் தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஒருவர் மூலம் சுவாதி, ஃபைனான்ஸியர் சேகருக்கு அறிமுகமாகியுள்ளார். அதன்பிறகு இருவரும் அடிக்கடி நட்சத்திர ஹோட்டல்களில் சந்தித்து பழகி வந்தனர். அப்போது, சுவாதிக்கு நகைகள், பணத்தை அன்பளிப்பாக கொடுத்துள்ளார். சுவாதிக்கு நகைகள், பணத்தைக் கொடுக்க சொந்த வீட்டிலேயே சேகர் திருடியுள்ளார்.
சேகர், சுவாதி ஆகியோரின் நட்பு அவர்களின் குடும்பத்தினருக்கு தெரிந்திருக்கிறது. ஆனால், யாரும் கண்டுக்கொள்ளவில்லை. நகைகள், பணம் அதிகளவில் காணாமல் போன பிறகே சேகரின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கின்றனர். அதற்கு முன் சேகரின் குடும்பத்தினர் சுவாதியைத் தொடர்பு கொண்டு சேகர் கொடுத்த பணம், தங்கத்தை திரும்ப தங்களிடம் கொடுத்துவிடும்படி மிரட்டியுள்ளனர். மேலும் சுவாதியை அவர்கள் வலுகட்டாயமாக கடத்தியுள்ளனர். தற்போது சுவாதி சிறையில் உள்ள நிலையில் அவரின் குடும்பத்தினர், சுவாதியைக் கடத்தி கொடுமைப்படுத்தியதாக சேகரின் குடும்பத்தினர் மீது புகாரளித்துள்ளனர். அதனால் சேகரின் குடும்பத்தினர் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றனர்.
இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம். ``ஃபைனான்ஸியர் சேகரும் சுவாதியும் ஊட்டி, கோவா என பல இடங்களுக்கு இன்ப சுற்றுலாவுக்குச் சென்றுள்ளனர். தற்போதுகூட தாய்லாந்துச் செல்ல இருவரும் டூரிஸ்ட் விசா எடுத்து வைத்துள்ளனர். இந்த வழக்கில் சிக்கவில்லை என்றால் இருவரும் தாய்லாந்து சென்றிருப்பார்கள். சுவாதியின் பின்னணி குறித்து விசாரித்தபோது அவருக்கு ஆண் நண்பர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. அதில் ஒரு நண்பராகத்தான் சேகர் இருந்துள்ளார்.
சேகரைச் சந்திக்கும்போதெல்லாம் பணம், தங்க நகைகளை சுவாதி வாங்கியிருக்கிறார். அதனால்தான் மற்றவர்களை விட சேகருடன் சுவாதி நெருங்கிப் பழகி வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் 20 வயதுக்கு மேல் வித்தியாசம் இருந்தாலும் சேகரிடமிருந்து போன் அழைப்பு வந்துவிட்டால் சுவாமி உடனடியாக அவரைச் சந்திக்க சென்று விடுவார். ஒரு தடவை சுவாதியும் சேகரும் கோவாவுக்குச் சென்றபோது அங்கு சுவாதியின் ஆண்நண்பர்கள் சிலர் வந்துள்ளனர். அவர்களைப் பார்த்த சேகர், கோபப்பட்டுள்ளார். இதையடுத்து அனைவரையும் சுவாதி சமாளித்து அந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
சேகரிடம் வாங்கிய தங்க நகைகள் குறித்து சுவாதியிடம் விசாரித்தபோது நான் தினமும் நட்சத்திர ஹோட்டல்களுக்கு நண்பர்களோடு செல்வேன். அதனால் நகைகளை விற்று செலவழித்துவிட்டேன் என்று கூலாக கூறியுள்ளார். அதனால் சுவாதி சொல்வது உண்மையா என்பதைக் கண்டறிய அவரின் நண்பர்கள் பட்டியலை சேகரித்துள்ளோம். மேலும் சில நகைகளை சுவாதி விற்றதாகக் கூறியுள்ளார். அவர் எங்கு யாரிடம் நகைகளை விற்றார் என்றும் விசாரித்து வருகிறோம். சுவாதிக்கு பல வகையில் அவரின் நெருங்கிய தோழி ஒருவர், இன்னும் சில பாய் ஃப்ரெண்ட்ஸ்கள் உதவி செய்துள்ளனர். அவர்களும் எங்களின் சந்தேக வளையத்தில் இருக்கிறார்கள். சுவாதிக்கும் அவரின் கணவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்வதாக தகவல் கிடைத்தது. அதற்கான காரணம் குறித்தும் விசாரணைநடந்துவருகிறது" என்றார்.
from Latest News https://ift.tt/V2CbRrL
0 Comments