அல் கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவரான அய்மன் அல்-ஜவாஹிரி (Ayman al-Zawahiri) கடந்த வார இறுதியில் அமெரிக்க அரசால் நடத்தப்பட்ட தாக்குதல் மூலம் கொல்லப்பட்டுள்ளார். கடந்த 2011 -ம் ஆண்டு அல் கொய்தாவின் தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பின் இவர் அந்த அமைப்பின் தலைவர் ஆனார். தற்போது இவர் கொல்லப்பட்டிருப்பது அந்த அமைப்பிற்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தியிருக்கும் என்கிறார்கள்.
ஜவாஹிரி கடந்த பல ஆண்டுகளாகவே தலைமறைவாகவே இருந்து வந்தார். இந்த நிலையில் இவரைத் திட்டமிட்டு கொன்றதற்கு அமெரிக்க தீவிரவாத ஒழிப்பு துறையின்(Counter terrorism and intelligence community - CIA) கவனமான மற்றும் தொடர் உழைப்பே காரணம் எனக் கூறப்படுகிறது. ஜவாஹிரி பாகிஸ்தான் வனப்பகுதிகளில் அல்லது ஆஃப்கானிஸ்தானில் ஏதாவது மறைவான இடத்தில் இருக்கலாம் என்றே நம்பப்பட்டு வந்தது.
இந்த தாக்குதல் திட்டம் எப்படி உருவாக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டது என பெயரை வெளியிடாமல் ஒரு உயர் அதிகாரி தெரிவித்தார், ``அமெரிக்க அரசு கடந்த பல ஆண்டுகளாகவே ஜவாஹிரி இருக்கும் இடங்கள் குறித்து தீவிரமாகக் கண்காணித்து வந்தது. அமெரிக்க படைகள் ஆஃப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய பின்பு அந்நாட்டில் அல் கொய்தாவின் நடமாட்டம் குறித்தும் கண்காணிக்கப்பட்டது. இந்த வருடம் ஜவாஹிரி அவருடைய மனைவி, அவருடைய மகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் காபூலில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருப்பது கண்டறியப்பட்டது. இன்னும் சில மாதங்கள் கண்காணிப்பிற்கு பிறகு அது ஜவாஹிரி தான் என்பது உறுதிசெய்யப்பட்டது.
ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் அவரின் இருப்பிடம் பற்றிய விவரங்கள் உயர் அதிகாரிகளுக்கு அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சுலைவன், நிலைமையை அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு எடுத்துரைத்தார். பல்வேறு நபர்கள் மூலம் கிடைக்கப்பட்ட தகவல்கள் மூலம் ஜவாஹிரியின் இருப்பிடம் உறுதி செய்யப்பட்டது. காபூலில் இருக்கும் வீட்டுக்கு வந்த பிறகு அவர் அந்த வீட்டை விட்டு எங்கும் செல்லவில்லை. அந்த வீட்டின் பால்கனியில் அவர் நின்றதை பலமுறை கவனித்துள்ளனர் அமெரிக்காவின் உளவு அமைப்பினர்.
அவர் மீது தாக்குதல் நடத்த திட்டமிடுவதற்கு முன்பு அந்த வீட்டின் தன்மை அதன் கட்டுமானம் முதலியவை ஆராயப்பட்டது. முடிந்த அளவு அந்த வீட்டுக்கு பெரிய சேதம் ஏற்படாமலும், மேலும் ஜவாஹிரியைத் தவிர அவர் குடும்பத்தில் உள்ள யாருக்கும் சேதம் ஏற்படாத வகையில் தாக்குதல் நடத்தவே திட்டமிடப்பட்டது. இந்த தாக்குதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பலவித ஆலோசனைகள் மேற்கொண்டார். `இதுவரை அறியப்பட்ட விவரங்கள் எப்படி அறியப்பட்டன, யார்யார் மூலம் அறியப்பட்டன?’ எனத் தெளிவாகக் கேட்டார். மேலும், `பருவநிலை, வீட்டின் கட்டுமானம் போன்ற பொருள்களால் இந்த திட்டத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதா?’ எனவும் கேட்டறிந்தார்.
அதன்பிறகு, அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவராக ஜவாஹிரி தொடர்ந்து பதவி வகுத்து வருவதால் அவரைக் கொல்வதில் சட்டரீதியாக தவறில்லை என சட்ட வல்லுநர்கள் உதவியுடன் முடிவெடுக்கப்பட்டது. ஜூலை 25 ஆம் தேதி ஜோ பைடனின் தலைமையில் ஜவாஹிரியை தாக்குவது தொடர்பாக இறுதி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அவரைக் கொல்வதால் அமெரிக்கா மற்றும் தலிபான்களுக்கு இடையிலான உறவில் ஏதேனும் மாற்றம் வருமா என விவாதிக்கப்பட்டது. இறுதியாக வான்வழியாக குறிபார்த்து அவரைத் தாக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. இதுவேறு யாருக்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்தாது என்ற காரணத்தால் இந்த திட்டம் செயல்படுத்த தயாரானது. ஜூலை 31 ஆம் தேதி ட்ரோன் மூலம் செலுத்தப்பட்ட ``Hellfire" என பெயரிடப்பட்ட இரு மிசைல்கள் மூலம் அல்கொய்தா வின் தலைவர் கொல்லப்பட்டார்." எனக் கூறினார்.
தாக்குதல் நடந்த அன்று, தனது வீட்டின் பால்கனியில் தனியாக வந்து நின்றார் ஜவாஹிரி. அந்தத் தருணத்துக்காக தயாராகக் காத்திருந்த அமெரிக்க டிரோன், இரண்டு ஹெல்ஃபயர் ஏவுகணைகளை வீசி அவரைக் கொன்றது. அந்த வீட்டின் கீழ்தளத்தில் இருந்த ஜவாஹிரி குடும்பத்தினருக்குக்கூட இந்தத் தாக்குதல் நடந்தது தெரியவில்லை. ஏனெனில், Hellfire R9X ஏவுகணை ஒரு வித்தியாசமான ஆயுதம். இலக்கைத் தாக்கும்போது இது வெடிக்காது. அதனால் குண்டுவெடிப்பு சத்தம் கேட்காது. அந்த இடத்தில் பேரழிவையும் இது ஏற்படுத்தாது. 'நிஞ்சா பாம்' என்று அழைக்கப்படும் இது உண்மையில் வெடிக்கும் ஏவுகணை இல்லை. ஒரு ஏவுகணையின் முனையில் கூர்மையான ஆறு கத்திகள் நீண்டிருப்பதைக் கற்பனை செய்யுங்கள். ஒரு விமானம் பறக்கும் வேகத்தில் இந்த ஏவுகணை பாய்ந்துவந்து தாக்கி, ஒருவரை துண்டு துண்டாக வெட்டிக் கொன்றுவிடும். இப்படி ஒரு மரணமே ஜவாஹிரிக்கு நிகழ்ந்தது. அவர் நின்றிருந்த இடத்துக்கு அருகிலிருந்த ஜன்னல் உடைந்ததைத் தவிர, அந்த வீட்டுக்கு வேறு சேதாரமும் இல்லை.
from Latest News https://ift.tt/zKrAx15
0 Comments