குறிவைக்கப்படும் சிதம்பரம் குடும்பம்... அதிரடித்த அமலாக்கத்துறை ரெய்டு!

தமிழ் சினிமா தயாரிப்பாளர்களைக் குறிவைத்து வருமானவரித்துறை ரெய்டு, ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்களைக் குறிவைத்து பொருளாதார குற்றப்பிரிவு ரெய்டு என தமிழ்நாட்டில் ரெய்டுகள் மழை போல பொழியும் நிலையில், ஆகஸ்ட் 5-ம் தேதி, சென்னையிலுள்ள 6 இடங்களில் அமலாக்கப்பிரிவும் அதிரடி ரெய்டு நடத்தியிருக்கிறது. அமலாக்கத்துறையின் இந்த ஆக்‌ஷனே, சிவகங்கை காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தைக் குறிவைத்து நடத்தப்படுவதுதான் என்கிறார்கள் விவரமறிந்த அதிகாரிகள்.

அமலாக்கத்துறை

கார்த்தி சிதம்பரத்தைக் குறிவைத்து, இரண்டு காரணங்களுக்காக இந்த ரெய்டு நடத்தப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள். நம்மிடம் பேசிய அந்தத் துறையின் உயரதிகாரிகள் சிலர், "மத்தியில் காங்கிரஸ் ஆட்சியிலிருந்தபோது, சில துறைகளில் கட்டமைப்பை வலுப்படுத்த வெளிநாட்டினருக்கு 'புராஜெக்ட் விசா' வழங்கும் நடைமுறையை அறிமுகப்படுத்தியிருந்தது. அதன் விதியின்படி, ஒருமுறைதான் விசா வழங்க முடியுமே தவிர, மறு விசா வழங்குவதற்கு சட்டத்தில் இடமில்லை. 2011-ல் பஞ்சாப் மாநிலம் மன்சாவில் மின்சார தொழிற்சாலையை கட்டிக் கொண்டிருந்த ஒரு நிறுவனம், அந்தப் பணிகளுக்காக சீனர்களை பணியமர்த்தியிருந்தது. பணிகள் முடிவடையும் முன்னரே, சீனர்களின் விசா காலம் முடிந்துவிட்டதால், மறு விசா பெறும் முயற்சியில் அந்த நிறுவனத்தினர் ஈடுபட்டனர். இதற்காக, கார்த்தி சிதம்பரத்துக்கு நெருக்கமான பாஸ்கரராமன் என்பவரை, அந்த நிறுவனத்தின் துணைத் தலைவர் விகாஸ் மஹாரியா அணுகியிருக்கிறார். 263 சீனர்களுக்கு மறு விசா வழங்குவதற்கு 50 லட்சம் ரூபாய் பணம் கைமாறியிருக்கிறது. இந்தப் பணம் கார்த்தி சிதம்பரத்திற்குச் சென்றதாக சி.பி.ஐ-யில் வழக்கும் பதிவானது. அமலாக்கத்துறையின் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. இந்த விசா வழக்கு தொடர்பாகத்தான், சென்னையிலுள்ள சில இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது.

அதேசமயம், சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகிலுள்ள துகார் பைனான்ஸ் நிறுவனத்திலும் சோதனை மேற்கொண்டோம். இந்த நிறுவனத்தின் உரிமையாளர் ரமேஷ் துகார், சிதம்பரம் குடும்பத்திற்கு நெருக்கமானவர். ஜூன் 2007-ல் சிதம்பரம் குடும்பத்தினரை வைத்து நிகழ்ச்சிகளையும் சென்னையில் நடத்தியிருக்கிறார். ரமேஷ் மூலமாக சிதம்பரம் குடும்பத்தின் கணக்கு வழக்குகள் கையாளப்பட்டதாக எங்களுக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. நுங்கம்பாக்கத்திலுள்ள ரமேஷின் வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அமலாக்கத்துறையின் இந்த சோதனைகளில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றின் அடிப்படையில் எங்களின் அடுத்தக்கட்ட விசாரணை தொடரும்" என்றனர் விரிவாக.

கார்த்தி சிதம்பரம்

காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு 'நேஷ்னல் ஹெரால்டு' வழக்கு நெருக்கடி ஆகியிருக்கும் நிலையில், சிதம்பரம் குடும்பத்தைக் குறிவைத்து பாய்ந்திருக்கிறது அமலாக்கத்துறை ரெய்டு. "2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, காங்கிரஸ் தலைவர்களையெல்லாம் வழக்குகளால் வளைத்துவிட வேண்டுமென தீர்மானித்திருக்கிறது பா.ஜ.க மேலிடம். அதற்காகத்தான் இந்த ரெய்டுகள் நடத்தப்படுகின்றன" என்று கொதிக்கிறார்கள் கதர் கட்சிக்காரர்கள். டெல்லியின் கணக்கு எடுபடுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.



from Latest News https://ift.tt/nEbPMpr

Post a Comment

0 Comments