பரமத்திவேலூரில் ஆடிமாதத்தில் நடக்கும் மகாபாரதக்கதை நடைபெற்றது. 100 அடியில் உருவாக்கப்பட்ட மண்ணாலான துரியோதனன் சிலையை, பீமனாக வேடம் தரித்த இளைஞர்கள் வதம் செய்த மெய்சிலிர்க்க வைக்கும் காட்சியை, ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரில் ஆண்டுதோறும் ஆடிமாதம் பஞ்சபாண்டவர் கதையான மகாபாரதக்கதை நடைபெறுவது வழக்கம். இந்த வருடமும் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனையொட்டி, 50வது ஆண்டாக இந்த ஆடிமாதம் முதல் தேதியிலிருந்து ஆடி 18-ம் தேதி வரை மகாபாரதக்கதையில் துரியோதனனை பீமன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக, 100 அடியில் துரியோதனன் சிலை மண்ணினால் செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் இறுதி நாளில் தீமைகளின் மொத்த உருவமான துரியோதனனை வீழ்த்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பீமன், துரியோதனனைத் தொடையில் அடித்துக் கொன்றுவிடுவான். பின்னர், துரியோதனனது ரத்தத்தை எடுத்துத் தலையில் தடவிக் கூந்தலை முடிந்து பாஞ்சாலி தன் சபதத்தை முடிப்பாள் என இக்கதை முடிகிறது. பீமனாக வேடம் தரித்த இளைஞர்கள் ஆயுதங்களால் மண்ணாலான துரியோதனை அடித்துக்கொன்றனர். இந்த ஆன்மிக நிகழ்வை ஏராளமான பொதுமக்களும் பக்தர்களும் கண்டுகளித்தனர்.
இதுகுறித்துப் பொதுமக்கள் கூறுகையில், "மாதம் மும்மாரி மழை பெய்து விவசாயம் செழிப்படையவும், நாணயமும் பொறுமையும் மக்கள் மனதில் விதைக்கப்படவும், தர்மம் வெல்லும் அதர்மம் தோற்கும் என்பதனை உணர்த்தவும் இந்த மகாபாரதக்கதை விளங்குகிறது. அந்தக் கதை ஒவ்வொரு வருடமும் எங்கள் பகுதியில் அற்புதமாக நடித்துக் காட்டப்படுகிறது" என்று தெரிவித்தனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/WkQIdRj
0 Comments