செத்துக் கிடந்த சிறுத்தை; மின்வேலியில் சிக்கியதா? - பேரணாம்பட்டு வனப்பகுதியில் தொடரும் அதிர்ச்சி

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு வனச்சரக காப்புக் காடுகளில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமிருக்கின்றன. கணக்கெடுப்பில் 10-க்கும் அதிகமான சிறுத்தை ஜோடிகள் குட்டிகளோடு சுற்றுவதாக வனத்துறை தெரிவிக்கிறது. வனப்பகுதியையொட்டி மேய்ச்சலுக்கு விடப்படும் ஆடு, மாடுகளை இந்த சிறுத்தைகள் கடித்து, வேட்டையாடுவதும் அவ்வபோது நிகழ்கின்றன. சில நேரங்களில், அருகிலிருக்கும் கிராமங்களுக்குள் புகுந்தும் பொதுமக்களை அச்சுறுத்துகின்றன. இந்த நிலையில், வனப்பகுதிக்கு அருகேயுள்ள சேராங்கல் கிராமத்தில் 4 வயதாகும் பெரிய சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் நேற்றிரவு இறந்து கிடந்தது. தகவலறிந்ததும், வனத்துறையினர் அங்கு விரைந்துச் சென்றனர். சிறுத்தை இறந்து கிடந்ததற்கு அருகில், விவசாயி வேணுமூர்த்தி என்பவரின் எலுமிச்சைத் தோட்டம் அமைந்திருக்கிறது. அதனைச் சுற்றி மின்வேலி ஏதும் அமைக்கப்பட்டிருந்ததா எனவும் அந்த விவசாயியிடம் விசாரணை நடத்தினர்.

உயிரிழந்த சிறுத்தை

ஆனாலும், சிறுத்தையின் உடலில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததற்கான காயங்களோ, சுறுக்கு கம்பி வலை அல்லது மின்வேலியில் சிக்கியதற்கான தடயங்களோ இல்லை. இதையடுத்து, இறப்புக்கான காரணத்தைக் கண்டறிய சிறுத்தையின் உடலை உடற்கூறாய்வுக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கோக்கலூர் வனப்பகுதியில் சுருக்கு கம்பியில் சிக்கிய சிறுத்தை ஒன்று, வனத்துறையினரால் மயக்க ஊசிப் போட்டு மீட்கப்பட்டது. பின்னர், அமிர்தி வனப்பூங்காவில் விடப்பட்ட அந்த சிறுத்தை பரிதாபகமாக உயிரிழந்தது. அதேபோல, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பேரணாம்பட்டு சாத்கர் மலையில், சிறுத்தைக் குட்டி ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இந்த நிலையில், மூன்றாவதாக மேலும் ஒரு சிறுத்தை உயிரிழந்திருப்பது, வனத்துறையினர் மற்றும் விலங்கின ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/hRiBS3a

Post a Comment

0 Comments