டெல்லியில் 2012-ம் ஆண்டு பேருந்தில், நிர்பயா எனும் மருத்துவ மாணவி, 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதுமே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு 2020-ல், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், கொலை சம்பவங்கள் அதிகரித்துவருவது குறித்து நிர்பயா வழக்கை அடிகோடிட்டு பேசியதற்கு, டெல்லி மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
அசோக் கெலாட் பேச்சு குறித்து தனியார் ஊடகத்திடம் பேசிய டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால், ``ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், பாலியல் வன்கொடுமையாளர்களின் தரப்பில் பேசுவதை நிறுத்த வேண்டும். அவர் நிர்பயாவை கேலி செய்த விதம், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தியிருக்கிறது.
சிறு குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமை செய்பவர்களைத் தூக்கிலிட சட்டம் கொண்டு வர நாங்கள் மிகவும் போராடினோம். எனவே இதுபோன்ற பயனற்ற கருத்துக்களைக் கூறுவதற்குப் பதிலாக, பல பாலியல் வன்கொடுமை நிகழும் ராஜஸ்தானில், கடுமையான சட்டத்தை அமல்படுத்துவது அசோக் கெலாட்டின் பொறுப்பு" என்று கூறினார்.
முன்னதாக கடந்த வெள்ளியன்று விலைவாசி உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில் அசோக் கெலாட் கலந்திருந்தார். அதில் பேசிய அசோக் கெலாட், ``நிர்பயா வழக்குக்குப் பிறகு, குற்றவாளிகளைத் தூக்கிலிட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று, பிறகு அந்த சட்டம் அமலுக்கு வந்தது. அதற்குப் பின்னர், பாலியல் வன்கொடுமைக்குக்குப் பின், பெண்களைக் கொல்லும் வழக்குகள் அதிகரித்து வருகின்றன" என்று கூறியிருந்தார்.
அசோக் கெலாட்டின் இத்தகைய கருத்துக்கு, டெல்லி மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாமல், நிர்பயாவின் தாயார் ஆஷா தேவியும் அசோக் கெலாட்டை ராஜினாமா செய்யக்கோரியிருக்கிறார்.
இதுதொடர்பாக ஏ.என்.ஐ ஊடகத்திடம் பேசிய ஆஷா தேவி, ``இது மிகவும் சங்கடமானது. அதிலும் குறிப்பாக, இத்தகைய கொடூரமான குற்றங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் சிறுமிகளுக்கு இது வேதனையளிக்கக்கூடியது. நிர்பயாவை அவர் கேலி செய்திருக்கிறார். இது குற்றவாளிகளை ஆதரிக்கும் அவரின் மனநிலையைக் காட்டுகிறது. எனவே அவர் மன்னிப்பு கேட்டு ராஜினாமா செய்ய வேண்டும்" என்று கூறினார்.
இந்த விவகாரம் சர்ச்சையாகவே உடனடியாக இதுகுறித்து, "நான் உண்மையை மட்டுமே பேசினேன். பாலியல் வன்கொடுமை செய்பவர் ஒரு குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்யும் போதெல்லாம், அவர்கள் அடையாளம் காணப்படுவார்கள் என்ற பயத்தில் அவர்களைக் கொல்கிறார்கள். இதற்கு முன்பு இவ்வளவு இறப்புகள் நடந்ததில்லை" என்று அசோக் கெலாட் விளக்கம் அளித்திருக்கிறார்.
from Latest News https://ift.tt/IXa17mL
0 Comments