‘‘டீசல் இனோவாவின் தயாரிப்பை நிறுத்தவில்லை...!’’ – டொயோட்டா சொல்ல வருவது என்னவென்றால்..?

‘இனிமேல் டீசல் இனோவா கிடையாது’ என்று நமது வலைதளத்தில் செய்தி வந்ததைத் தொடர்ந்து, ‘என்னது, டீசல் நின்னுடுச்சா!’ என்று இனோவா டீசலைப் பற்றி ஏகப்பட்ட நலவிசாரிப்புகள்.

இந்த நிலையில் ‘‘இனோவா டீசல் மாடலின் புக்கிங்கைத்தான் தற்காலிகமாக நிறுத்தியிருக்கிறோம். அதன் தயாரிப்பு தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்!’’ என்று ஓர் அறிக்கை அனுப்பியிருக்கிறது டொயோட்டா.

டொயோட்டா இப்படிச் சொன்னாலும், டீசல் வேரியன்ட்டின் மாடலை, தனது வலைதளத்தில் இருந்து நீக்கித்தான் வைத்திருக்கிறது.

இனோவா க்ரிஸ்ட்டாவில் பெட்ரோல்/டீசல் என இரண்டு இன்ஜின் மாடல்களும் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. இதில் டீசல் இன்ஜின் 2,400 சிசியும், 147bhp பவரும், 360Nm டார்க்கும் கொண்டது. பெட்ரோல் இன்ஜின் இதைவிடச் சக்தி வாய்ந்தது. என்ன இருந்தாலும் டீசல் இனோவாதான் மக்களின் மனம் கவர்ந்த எம்பிவி. 2.4 லிட்டரைவிட பவர்ஃபுல்லான 2,800 சிசி இனோவா டீசல் ஆட்டோமேட்டிக் மாடலும் வந்தது. என்ன இருந்தாலும், மக்களுக்கு 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மீதுதான் கண்! கூடவே, BS-6 நார்ம்ஸுக்கு அப்டேட் செய்ய முடியாமல், 2.8 லி இனோவா டீசலை 2020–லேயே நிறுத்தியிருந்தது டொயோட்டா.

டொயோட்டா

இரண்டாவது ஜெனரேஷன் மாடலான 2.4 லிட்டர் டொயோட்டா இனோவா க்ரிஸ்ட்டா, இதுவரை 1 மில்லியன் மாடல்களுக்கு நெருக்கமாக விற்றுத் தீர்ந்து விட்டது. இது வாடகை மற்றும் பிரைவேட் கார்கள் என எல்லாமே அடக்கம். எனவே, MUV (Multi Utility Vehicle) செக்மென்ட்டில், டொயோட்டா இனோவாதான் மிக முக்கியமான கார். இப்போது வரை ஒரு டொயோட்டா இனோவாகூட பிரேக்டவுன் ஆகி சாலையில் நிற்பதை யாரும் பார்த்திருக்க முடியாது. அந்தளவு, இனோவா டீசல் இன்ஜின் மக்கள் மத்தியில் மிகுந்த நம்பிக்கையைப் பெற்றிருக்கிறது. அப்படிப்பட்ட டீசல் இனோவாவின் புக்கிங்கை ஏன் டொயோட்டா திடீரென நிறுத்தியது?

அதிக புக்கிங் ஆனதுதான் இனோவா டீசலின் புக்கிங்கை நிறுத்தக் காரணம். ஏற்கெனவே கார்களுக்கு செமி கண்டக்டர் ஷிப் பற்றாக்குறைதான் பெரிய தலைவலியாக இருந்து வருகிறது. இதனால் டீசல் இனோவாவின் வெயிட்டிங் பீரியட் எகிறியது. கடந்த பிப்ரவரி மாதம் புக் செய்த ஒரு வாடிக்கையாளருக்கே இப்போதுதான் இனோவா கைக்குக் கிடைத்திருக்கிறதாம். இப்போதைக்கு இந்தியாவில் மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காருக்குத்தான் அதிகக் காத்திருப்புக் காலம். அதைத் தொடர்ந்து டீசல் இனோவாவின் வெயிட்டிங் பீரியடும் அதிகரிக்க… விழி பிதுங்கியது டொயோட்டா. இதனாலேயே டீசல் இனோவாவின் புக்கிங்கை நிறுத்தி விட்டிருக்கிறதாம். "சத்தியமாக வேறொன்றும் காரணம் இல்லை" என்று அடித்தும் சொல்லியிருக்கிறது டொயோட்டா.

இனோவா க்ரிஸ்ட்டா

‘‘நாங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தடையில்லாத சேவையைக் கொடுக்கவே விரும்புகிறோம். யாரும் காத்திருப்புக் காலத்தில் கஷ்டபடக் கூடாது! அதனால்தான் இந்த இடைக்கால நிறுத்திவைப்பு!’’ என்று டொயோட்டா கிர்லோஸ்கர் சார்பாக அறிக்கை விட்டிருக்கிறார்கள்.

அதாவது, இதன் மூலம் டொயோட்டா தெரிவிக்கும் செய்தி என்னன்னா… டீசல் இனோவா, திரும்பவும் கம்பேக் கொடுக்கும் என்பதுதான்.


from Latest News https://ift.tt/wM4WzcK

Post a Comment

0 Comments