காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் மறைவு: ஜனாதிபதி, பிரதமர் உட்பட தலைவர்கள் இரங்கல்!

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ(90) உடலநலக்குறைவால் உயிரிழந்தது, குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வெளிநாடு பயணம் மேற்கொண்டிருக்கும் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர், நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிச் சடங்கில் கலந்துகொண்டனர்.

சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ``சோனியா காந்தியின் தாயார், பாவ்லா மைனோ, கடந்த சனிக்கிழமையன்று இத்தாலியிலுள்ள அவரது வீட்டில் காலமானார். இறுதிச் சடங்குகள் 30-08-2022 அன்று நடைபெற்றன" என ட்விட்டரில் நேற்று தெரிவித்திருந்தார்.

திரௌபதி முர்மு

இந்த நிலையில், சோனியா காந்தியின் தாயார் மறைவுக்கு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து முர்மு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோவின் மறைவு குறித்து வருந்துகிறேன். சோனியா காந்திக்கும், அவரின் குடும்பத்தினருக்கும் என்னுடைய இதயப்பூர்வமான இரங்கல்கள்" என ட்வீட் செய்திருந்தார்.

பிரதமர் மோடி

அதைத்தொடர்ந்து பிரதமர் மோடியும், ``சோனியா காந்தியின் தாயார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். அவரின் ஆன்மா சாந்தியடையட்டும். இந்த துக்க நேரத்தில், என்னுடைய எண்ணங்கள் முழுதும் அவரின் குடும்பத்துடன் உள்ளன" என ட்விட்டரில் இரங்கல் தெரிவித்திருந்தார். மேலும், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா உட்பட பலரும் தங்களின் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில், காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அட்டவணை குறித்து கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற ஆன்லைன் மெய்நிகர் கூட்டத்தில், சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.



from Latest News https://ift.tt/myFPiMo

Post a Comment

0 Comments