பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக கைது; 28 ஆண்டுகளுக்குப்பின் விடுதலை - அரசுக்கு இந்தியர் வைத்த கோரிக்கை

பாகிஸ்தானில் 28 ஆண்டுகளாகச் சிறைவாசம் அனுபவித்து வந்த நபர் ஒருவர், குஜராத்தில் தன் சகோதர, சகோதரிகளுடன் இணைந்த சம்பவம் குடும்பத்தினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. குல்தீப் யாதவ்(59) என அறியப்படும் இவர், பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக, 1994-ல் பாகிஸ்தான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அன்றிலிருந்து கடும் சிறைவாசம் அனுபவித்து வந்த குல்தீப் யாதவ், ஒருவழியாக 28 ஆண்டுகளுக்குப் பிறகு அகமதாபாத்தில் தன்னுடைய சகோதர, சகோதரிகளுடன் மீண்டும் இணைந்திருக்கிறார்.

சிறை

கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி விடுதலையான குல்தீப் யாதவ், ஆகஸ்ட் 25-ம் தேதி அகமதாபாத்தில் தன் குடும்பத்துடன் இணைந்தார். விடுதலையான குல்தீப் யாதவ், தன்னைப்போல் பாகிஸ்தான் சிறையில் வாடும் மற்ற நபர்களையும் மீட்பதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ளவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்

இதுகுறித்து தன்னுடைய சகோதரி வீட்டில் செய்தியாளர்களிடம் பேசிய குல்தீப் யாதவ், ``எங்களை விடுவிக்குமாறு பாகிஸ்தான் அரசிடமும், சிறை அதிகாரிகளிடமும் நாங்கள் கோரிக்கை விடுக்கும்போதெல்லாம், `இந்திய அரசு எங்களை ஏற்கவில்லை’ என்று ஒரே ஒரு விஷயத்தைத் தான் அவர்கள் சொல்வார்கள். இந்திய அரசு எங்களை ஏற்காதபோது, ​​விடுதலை என்பது எங்களுக்குக் கடினமாகிவிடும்.

இந்தியா - பாகிஸ்தான்

என்னைப்போலவே சிறையில் பலரும் சித்திரவதைக்குள்ளாகும்போது, ​​அவர்களின் வாழ்க்கையே வீணாகிறது. ஒருகட்டத்தில் அவர்களால் தங்களின் பெயர்களைக்கூட நினைவுகூர முடியவில்லை. அவர்கள், தங்களின் பெயர்களை வேண்டுமானால் மறந்திருக்கலாம், ஆனால் அவர்களும் இந்தியர்களே. இன்று என் குடும்பத்துடன் இணைந்தது மூலம் எனக்குக் கிடைத்த அதே மகிழ்ச்சி, அங்கு வாடிக்கொண்டிருக்கும் இந்தியக் கைதிகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதற்கு, பாகிஸ்தான் சிறையிலிருக்கும் இந்தியர்களுக்குப் பதில் இங்கு சிறையிலுள்ள பாகிஸ்தான் கைதிகளை இந்திய அரசு விடுவிக்க வேண்டும். மேலும், எவ்வளவு காலம் தான் நானும் என் சகோதர, சகோதரிகளைச் சார்ந்து இருப்பேன்? என் உடம்பில் இருக்கும் சட்டை கூட பாகிஸ்தானைச் சேர்ந்தது தான், எனக்குச் சொந்த உடை கூட இல்லை. எனவே என்னுடைய மறுவாழ்வுக்கும் உதவுமாறு அரசாங்கத்துக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன்" எனக் கூறினார்.



from Latest News https://ift.tt/atzeUVs

Post a Comment

0 Comments