பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை மையம் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சிமலையை ஒட்டியப் பகுதிகளில் அதிக மழைப்பொழிவு இருந்து வருகிறது.
அதன்படி, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நேற்று முந்தினம் இரவு முதல் விட்டுவிட்டு மழை மற்றும் சாரல் மழையானது தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் மலைப்பகுதியில் ஈரப்பதம் அதிகரித்து, ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து கொடை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சரக்கு உள்ளிட்ட வாகனப் போக்குவரத்தும் குறைவாக இருக்கிறது.
இந்நிலையில் கொடைக்கானல் அடுக்கம் கும்பக்கரை வழியாக பெரியகுளம் செல்லும் மலைச்சாலையில், நேற்று அதிகாலை திடீர் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக குருடிகாடு என்னும் இடத்தில் கடந்த ஒராண்டுக்கு முன்பாக சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு சாலையின் நடுவே பிளவு ஏற்பட்டு இருந்து சாலை சீரமைக்கப்பட்ட நிலையில் அந்த பகுதியில் மீண்டும் 3 இடங்களில் தற்போது மண்சரிவு ஏற்பட்டு சாலை சரிந்து முற்றிலும் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.
இதனால் தற்காலிகமாக இருசக்கர வாகனம் முதல் நான்கு சக்கர வாகனம் வரை இந்தப்பகுதியில் செல்வதற்கு நெடுஞ்சாலை துறையினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மண்சரிவினை சீரமைக்கும் பணியில் இரண்டு ஜேசிபி வாகனங்களும் பத்திற்கும் மேற்பட்ட நெடுஞ்சாலை துறை பணியாளர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து இப்பகுதியினை சுற்றியுள்ள அடுக்கம், பாலமலை, சாம்பக்காடு மலைக்கிராம மக்கள் இந்தச் சாலையை கடப்பதற்கு மிகவும் சிரமமடைந்து வருகின்றனர். இங்கு விளைவிக்கக் கூடிய விவசாய பொருள்களை சந்தைப்படுத்த இந்த வழியே எடுத்துச் செல்ல முடியாமல் பொருள்கள் தேக்கமடைந்தும் வீணாகியும் வருகிறது.
பெரியகுளம்-அடுக்கம் சாலை போடப்பட்டு 2 ஆண்டுகளே ஆன நிலையில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்பட்டு சாலை சேதமடைந்து வருகிறது. சாலையை ஒட்டி முறையாக தடுப்புகள் அமைக்கப்படாததே சரிவுக்கு காரணமாக இருப்பதால் நெடுச்சாலைத்துறையினர் தடுப்புகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் வாகன ஒட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
from Latest News https://ift.tt/czom9Sx
0 Comments