நீதிமன்றங்களில் எத்தனை வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன என்ற கேள்வி நமக்குள் எழும். நம்மில் சாதாரணமாய் எழும் இத்தகைய கேள்விக்கு, மத்திய அரசிடமிருந்தே பதில் கிடைத்திருக்கிறது.
கடந்த 2 வாரமாக நாடாளுமன்றத்தில் நடைபெற்றுவரும் மழைக்கால கூட்டத்தொடரில், உச்ச நீதிமன்றம் உட்பட பல நீதிமன்றங்களில் எத்தனை வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன என்ற கேள்விக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பதிலளித்திருக்கிறார்.
அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது எழுத்துப்பூர்வ பதிலில், ஆகஸ்ட் 2-ம் தேதி நிலவரப்படி உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் 71,411 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதில் 56,000 சிவில் வழக்குகளும், 15,000-க்கும் மேற்பட்ட குற்றவியல் வழக்குகளும் அடங்கும். மேலும் இந்த மொத்த வழக்குகளில், 10,491 வழக்குகள் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கின்றன" என்று கூறினார்.
மேலும் மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த கிரண் ரிஜிஜு, ``2016-ம் ஆண்டில் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் மொத்தம் 40,28,591 வழக்குகள் நிலுவையிலிருந்தன. அது தற்போது இந்த ஆண்டு ஜூலை 29-ம் தேதி நிலவரப்படி 59,55,907 வழக்குகளாக உயர்ந்திருக்கிறது. மேலும் இதே காலகட்டத்தில் மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களில் நிலுவையிலிருக்கும் வழக்குகளின் 50 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. அதாவது, 2016-ல் 2.82 கோடியாக நிலுவையிலிருந்து வழக்குகளின் எண்ணிக்கை, இந்தாண்டு ஜூலை 29-ன் படி 4.24 கோடியாக இருக்கிறது" என்று தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய கிரண் ரிஜிஜு, ``நீதிமன்றங்களில் நிலுவையிலிருக்கும் வழக்குகளைத் தீர்ப்பதென்பது நீதித்துறையின் எல்லைக்குள் இருக்கிறது. வெவ்வேறு நீதிமன்றங்களில் வழக்குகளைத் தாக்கல் செய்வதும், தீர்ப்பதும் ஒரு தொடர்ச்சியான செயலாக இருந்தாலும், நீதிமன்றங்களால் பல்வேறு வகையான வழக்குகளைத் தீர்ப்பதற்கான காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை" எனவும் கூறினார்.
from Latest News https://ift.tt/5XhHboy
0 Comments