மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் புதிய அரசு பதவியேற்று ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது. ஆனால் இன்னும் அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. இதனால் அரசுக்கு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டுள்ளது. அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் பதவியை பறிக்கவேண்டும் என்று கோரி சிவசேனா சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருக்கிறது. இவ்வழக்கு விசாரணை திங்கள்கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் பாதகமான தீர்ப்பு வந்தால் சிக்கலாகிவிடும் என்று கருதி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாமல் இருக்கிறது.
அமைச்சர்கள் இல்லாமல் அரசு நிர்வாகம் முடங்கி, எந்த ஒரு முக்கிய முடிவும் எடுக்கப்படாமல் இருக்கிறது. மற்றொரு புறம் அதிகப்படியான வேலை காரணமாக முதல்வர் ஷிண்டே உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அமைச்சர்கள் பட்டியலுடன் துணை முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் டெல்லி சென்றுள்ளார். ஓரிரு நாளில் ஏக்நாத் ஷிண்டேயும் டெல்லி செல்லவிருக்கிறார். தற்போது அரசு நிர்வாகம் பாதிக்கப்படாமல் இருக்கவேண்டும் என்பதற்காக அமைச்சர்களின் அதிகாரத்தை சம்பந்தப்பட்ட துறை செயலாளர்களிடம் முதல்வர் ஷிண்டே ஒப்படைத்திருக்கிறார். வருவாய், ஊரக வளர்ச்சி, பொது நிர்வாகம், கூட்டுறவு துறை உட்பட சில முக்கிய துறைகளில் அவசர பிரச்னைகளில் சம்பந்தப்பட்ட துறை செயலாளர்கள் முடிவெடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. முதல்வரின் இம்முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதற்கு விளக்கம் அளித்துள்ள முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ``சில அமைச்சரவை இலாகாக்கள் மட்டும் தற்காலிகமாக சம்பந்தப்பட்ட துறை செயலாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதுவும் நீதித்துறை உட்பட சில முடிவுகள் எடுக்க மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து அதிகாரங்களும் அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுவது தவறு. அனைத்து முடிவுகளையும் எடுக்க செயலாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அதுல் லோண்டே, ``அமைச்சர்கள் இல்லை என்பதற்காக அதிகாரிகளை கொண்டு நிர்வாகத்தை நடத்த ஷிண்டே-பட்நவிஸ் அரசு முடிவு செய்திருப்பது தவறு" என்று தெரிவித்துள்ளார்.
from Latest News https://ift.tt/8mqDVro
0 Comments