மகாராஷ்டிரா மாநிலம், பண்டாரா மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர், தன்னுடைய சகோதரி வீட்டில் கோபித்துக்கொண்டு கமர்காவ் என்ற இடத்திலிருக்கும் தன்னுடைய சகோதரன் வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தார். வழியில் ஸ்ரீராம் என்பவரை அந்தப் பெண் சந்தித்தார். அந்தப் பெண் தன்னுடைய சகோதரன் வீட்டிற்குச் செல்ல பாதுகாப்பாக வருவதாக ஸ்ரீராம் கூறினார். அந்தப் பெண்ணும் அதை நம்பி அந்த இளைஞருடன் சென்றிருக்கிறார். ஆனால், அந்த இளைஞரோ அந்தப் பெண்ணை பாலேஸ்காவ் என்ற இடத்திற்கு அழைத்துச் சென்று மிரட்டி வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். பின்னர் அருகிலிருந்த வனப்பகுதியின் நெடுஞ்சாலையோரம் அந்தப் பெண்ணை விட்டுவிட்டு சென்றுவிட்டார் ஸ்ரீராம்.
பாதிக்கப்பட்ட பெண் அங்கிருந்து தானாகவே கன்ஹல்மோ என்ற இடத்திற்கு வந்தார். அங்கு அசோக் சுர்வே என்ற நபர் அந்தப் பெண்ணிடம் நட்பாகப் பேசி உதவி செய்வதாக அழைத்துச் சென்று, தன் நண்பன் மொகமத் இஜாஸ் என்பவனுடன் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தார்.
பின்னர் இருவரும் அந்தப் பெண்ணை சாலையோரம் நிர்வாணமாக தூக்கிப்போட்டுவிட்டு சென்றுவிட்டனர். உள்ளூர் மக்கள் அவரைப் பார்த்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து அவரை மிகவும் ஆபத்தான நிலையில் மீட்டு உள்ளூர் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து நாக்பூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அந்தப் பெண்ணின் உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவுசெய்து குற்றவாளிகளில் 2 பேரை மட்டும் இதுவரை கைதுசெய்திருக்கின்றனர்.
ஒருவர் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர். இந்த வழக்கை பெண் ஐ.ஏ.எஸ் தலைமையிலான சிறப்பு விசாரணைக்குழு விசாரிக்க முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டிருக்கிறார். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு சிறப்பான சிகிச்சையளிக்கவும், வழக்கை விரைவு நீதிமன்றத்தில் நடத்தவும் முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். இந்தக் கொடூர சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
from Latest News https://ift.tt/AB7mKlN
0 Comments