மின் கம்பத்தை அகற்றாமல் வாறுகால் அமைப்பு! - புளியங்குடி நகராட்சியின் அலட்சியம்

அரசு ஒப்பந்தங்களை மேற்கொள்பவர்கள், தரம் குறித்தோ அல்லது மக்களின் நலன் பற்றியோ கவலைப்படாமல் லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு அலட்சியம் காட்டுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு காலம்காலமாக தொடர்கிறது. அதனால், சாலைகள் அமைக்கும்போது அதில் இருக்கும் வாகனங்களைக் கூட அகற்றாமல் அதைச் சுற்றிலும் சாலை அமைக்கும் அவலங்கள் நடக்கின்றன.

வேலூரில் அடிபம்பை அகற்றாமல் அதைச் சுற்றிலும் சாலை அமைத்த ஒப்பந்ததாரர் மீது குற்றச்சாட்டு எழுந்ததால் அவரின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதுடன், அவரையும் கைது செய்யும் நிலைமை உருவானது. ஆனாலும் பல்வேறு மாவட்டங்களிலும் அத்தகைய சம்பவங்கள் நடக்கவே செய்கின்றன.

தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சிக்கு உள்பட்ட பாம்புக்கோவில்சந்தை சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வாறுகாலில் நடுவே உள்ள மின் கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்காமல் அதே இடத்தில் வைத்த நிலையிலேயே வாறுகால் அமைக்கப்பட்டதாக புகார் எழுந்திருக்கிறது.

சமூக ஆர்வலர் ஆனந்தராஜ்

இது குறித்து புளியங்குடி நகராட்சியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆனந்தராஜ் நம்மிடம் பேசுகையில், ”பாம்பு கோயில்சந்தை சாலையின் இருபுறமும் புதிதாக வாறுகால் அமைத்து சாலை போடப்பட்டது. வாறுகால் அமைக்கும் இடத்தின் மத்தியில் மின் கம்பம் இருந்ததால் அந்த இடத்தில் மட்டும் தோண்டாமல் பிற இடங்களில் மட்டும் பணிகள் நடந்தது

அங்குள்ள வீட்டின் முன்பாக வாறுகால் நடுவில் மின்கம்பத்தை அகற்றாததால் அந்த ஒரு இடத்தில் மட்டும் பணி நடக்கவில்லை. இது பற்றி ஒப்பந்ததாரர் என்னிடம், ‘நடுவில் இருக்கும் மின்கம்பத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன் பின்னர் அந்த வீட்டுக்கு அருகில் வாறுகால் அமைப்போம்’ என்று சொன்னார்.

வாறுகால் நடுவில் மின்கம்பம்

ஆனால் வாறுகால் பணிகள் முழுமையாக முடித்த பின்னரும் மின்கம்பத்தை மாற்றவில்லை. அந்த இடத்தில் மட்டும் வாறுகால் அமைக்கவும் இல்லை. ஆனாலும் வாறுகால் பணிகளை ஆய்வு செய்வதற்கும் அதன் நீள அகலங்களை அளவிடவும் மேற்பார்வையாளர் வந்தார். அவரிடமும் இது பற்றிச் சொன்னதும் ’நகராட்சி அலுவலகத்தில் போய் சொல்லுங்கள்’ என்று தெரிவித்துவிட்டுப் போய்விட்டார்.

வாறுகால் நடுவில் இருந்த மின்கம்பத்தை அகற்றாத நிலையில், சாலை போடும் பணியையும் மேற்கொண்டார்கள். அதனால், நகராட்சி ஆணையாளர், நகராட்சி பொறியாளர் என அதிகாரிகளிடம் தொடர்ந்து பலமுறை முறையிட்டும் எந்த பலனும் கிடைக்கவில்லை. மனுக்களை மட்டும் வாங்கி வைத்துக் கொண்டார்களே தவிர நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டுவிட்டார்கள்.

அதனால் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு முறையிட்டேன். ஆட்சியரின் வாட்ஸ்-அப் எண்ணுக்கும் புகார் அனுப்பினேன். அதன் பின்னரும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குளறுபடிகள் தொடர்பாக நகராட்சி ஆணையர், பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வரின் தனிப் பிரிவுக்கும் மனு அனுப்பியிருக்கிறேன்” என்று வேதனையுடன் பேசினார்.

ஆனந்தராஜின் புகார் குறித்து புளியங்குடி நகராட்சி ஆணையர் குமார்சிங் கருத்தை அறிய அவரைத் தொடர்பு கொண்டோம். நம்மிடம் பேசியவர், “பாம்புக்கோயில் சந்தை சாலையில் வாறுகால் அமைக்கப்பட்டபோது நடுவில் மின்கம்பம் இருந்ததால் அதை அகற்ற முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக மின்சார வாரியத்துக்கு கடிதம் எழுதியிருக்கிறோம். அதோடு, நகராட்சி கூட்டத்தில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விரைவில் மின்கம்பத்தை அகற்றுவோம்” என்றார்.

அதிகாரிகள் அலட்சியம் காட்டும் மின்கம்பம்

வேலூரில் இதே போன்று வாறுகால் அமைக்கும் பணியின் போது அடிபம்பு மீது கான்கிரீட் போட்டதால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டுள்ளார். அதைக் கண்டுகொள்ளாத பொறியாளர் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதையெல்லாம் தெரிந்திருந்தும் புளியங்குடி நகராட்சி அதிகாரிகள் சாமானிய மக்களின் குரலுக்கு மதிப்பளிக்காமல் அலட்சியம் காட்டுவது சரிதானா?



from மாவட்ட செய்திகள் https://ift.tt/iMN0IfY

Post a Comment

0 Comments