அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானதைத் தொடர்ந்து மாவட்ட வாரியாக தொண்டர்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடந்த வரவேற்பு விழாவில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களையும் சந்தித்தார். அப்போது, ``தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அதிமுகவை வீழ்த்தி விடலாம் எனக் கனவு காணுகிறார். அதிமுக-வை வீழ்த்த ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அத்தனையுயையும் மக்கள் துணைகொண்டு வீழ்த்துவோம். அதிமுக தலைவர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு குடும்பம் கிடையாது, அவர்களுக்கு மக்கள்தான் குடும்பம் என வாழ்ந்து மறைந்தனர்.
ஆனால் திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அதிமுக-வில் சாதாரண தொண்டன் கூட முதலமைச்சராக வரமுடியும். சந்தர்ப்ப சூழ்நிலையால் இன்று ஸ்டாலின் முதல்வராக உள்ளார். மக்களின் குறைகளை தீர்க்கவே ஸ்டாலினை முதல்வராக அமர வைத்துள்ளார்களே ஒழிய, மக்களை பலிவாங்க அல்ல.
நீங்கள் மக்களை மறந்தால் மக்கள் உங்களை மறப்பார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். குடும்ப ஆட்சி நடைபெற்ற இலங்கையின் இன்றைய நிலையை மனதில் வைத்து கொண்டு ஸ்டாலின் ஆட்சி நடத்த வேண்டும். தனது குடும்பத்தின் அதிகார மையங்களை ஸ்டாலினால் கட்டுபடுத்த முடியவில்லை. இதேநிலை நீடித்தால் இலங்கையில் நடந்ததைப் போல தமிழ்நாட்டில் ஸ்டாலின் குடும்பத்திற்கும் நடக்கும்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாமல், கவலைபடாமல் ஸ்டாலின் போட்டோ சூட் நடத்தி கொண்டிருக்கிறார். ஆட்சிக்கு வந்து 14 மாதங்கள் ஆகியும் திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஸ்டாலின் இதுவரை என்ன செய்துள்ளார். அனைத்து துறைகளிலும் லஞ்சம். திமுக அமைச்சர்கள் காலை முதல் மாலை வரை லஞ்சம் வாங்கி கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுத்து பதவியை தக்க வைத்துக் கொண்டுள்ளார்கள்.
உலகின் பெரிய பணக்காரராக வருவதற்காக ஸ்டாலின் இந்த ஆட்சியை பயன்படுத்தி வருகிறார்.
மேட்டூர் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி மக்கள் வெள்ளத்தில் சிக்கியபோதும் யாருமே சென்று மக்களை பார்க்கவில்லை. அதிமுகவில் பிளவை ஏற்படுத்தி தொடர்ந்து ஆட்சியை தக்கவைக்க ஸ்டாலின் திட்டமிட்டார். அவருடன் இணைந்து அதிமுக-வின் இருபெரும் தலைவர்களுக்கும், அதிமுக-வுக்கும், அதிமுக தொண்டர்களுக்கும் ஓபிஎஸ் துரோகம் செய்தார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் திருட்டுத்தனமாக ஓபிஎஸ் தரப்பினர் எடுத்து சென்ற ஆவணங்களையும், பொருட்களையும் மீட்டுத்தரமுடியாத அரசு திமுக. பலம் பொருந்திய அதிமுக-வுக்கே இந்நிலை என்றால், சாதாரண மக்களின் நிலை என்ன. மக்கள் விரோத அரசு எப்போது போகும் என மக்கள் எதிர்பார்த்து உள்ளனர். 2024 நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வரும்” என்றார்.
நேற்று இரவு நடந்த கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இருந்து முன்னாள் அமைச்சர்கள் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஏற்பாட்டில் ஆயிரக்கணக்கானோர் திரட்டப்பட்டிருந்தனர். இன்று காலை முன்னாள் அமைச்சர்களுடன் சேர்ந்து பழநி அருள்மிகு தண்டாயுதபாணி கோயிலுக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி 2 முறை தரிசனம் செய்துவிட்டு புறப்பட்டுச் சென்றார்.
from Latest News https://ift.tt/HjdZnxY
0 Comments