பா.ஜ.க ஆளும் குஜராத்தில், இந்தாண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், ஏற்கெனவே டெல்லி, பஞ்சாப் என இரண்டு மாநிலங்களில் ஆட்சியிலிருக்கும் ஆம் ஆத்மி, மூன்றாவது மாநிலமாக குஜராத்திலும் ஆட்சியைப் பிடிக்க ஆயத்தமாகிவருகிறது. அதற்கான வேலைகளை ஏற்கெனவே தொடங்கிவிட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தொடர்ச்சியாக பா.ஜ.க-வை கடுமையாக சாடி வருகிறார். இந்த நிலையில், தற்போது பாஜக, காங்கிரஸ் இரண்டையும் ஒன்றாக சேர்த்து விமர்சித்திருக்கிறார்.
நேற்று செய்தியாளர்களிடையே பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், ``குஜராத் தேர்தல் என்பது ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ.க-வுக்கு இடையே நடைபெறும் தேர்தல். ஒருபக்கம் பா.ஜ.க-வின் 27 ஆண்டுகால தவறான ஆட்சி, மறுபக்கம் ஆம் ஆத்மி-யின் புதிய அரசியல். இந்த தேர்தலில், குஜராத் காங்கிரஸ் கட்சியானது குஜராத் பா.ஜ.க-வுடன் இணையப் போகிறது. பா.ஜ.க-வும், காங்கிரஸும் முடிவுக்கு வரும். குஜராத்தில் ஆம் ஆத்மி-யின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. எங்களின் முதல் வாக்குறுதி மின்சாரம் வழங்குவது. இங்கு அதிக மின்சார கட்டணத்தால், மக்கள் துயரத்தில் இருக்கின்றனர்.
டெல்லியில் நாங்கள் இலவச மின்சாரம் வழங்கினோம். பஞ்சாப்பில் சுமார் 25 லட்சம் வீடுகளுக்கு தற்போது பூஜ்ஜிய மின் கட்டணம் இருக்கிறது. அதுபோல, இங்கும் இலவசக் கல்வி, சுகாதாரம், மின்சாரம் வழங்கலாமா என்று மக்களிடம் கேட்டேன். 99 சதவிகிதம் மக்கள், இலவச கல்வி வேண்டும் என்று கூறியிருக்கின்றனர். மேலும், 97 சதவிகித மக்கள் இலவச சிகிச்சையையும், 91 சதவீதம் பேர் இலவச மின்சாரமும் இருக்க வேண்டும்" என்று தெரிவித்திருக்கின்றனர்" என்று கூறினார்.
இப்போதே வாக்குறுதிகளை அறிவிக்கத் தொடங்கிவிட்ட அரவிந்த் கெஜ்ரிவால், இந்த தேர்தலில் முதற்கட்டமாக கடந்த வாரம் 10 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
from Latest News https://ift.tt/HcnEswJ
0 Comments