Doctor Vikatan: தினமும் வெயிட் மெஷினில் எடையைப் பரிசோதிப்பது சரியா?

Doctor Vikatan: எத்தனை நாள்களுக்கொரு முறை எடை சரிபார்க்க வேண்டும்? எந்த நேரத்தில் பார்க்க வேண்டும்? எப்போதெல்லாம் எடை பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்.

ஷீபா தேவராஜ்

காலையில் எழுந்து, காலைக்கடன்களை முடித்து, காபி, டீ குடித்த பிறகு நீங்கள் உங்கள் உடல் எடையைச் சரிபார்க்கலாம். அதுதான் உங்களுடைய சரியான எடையாக இருக்கும்.

எடைக்குறைப்பு முயற்சியில் இருக்கும் பலரும் தினமும் வெயிட் மெஷினில் ஏறிநின்று எடையைச் சரிபார்ப்பார்கள். இப்படிச் செய்ய வேண்டாம் என்பது நான் என் க்ளையன்ட்டுகளுக்கு சொல்லும் அறிவுரை. அதையேதான் உங்களுக்கும் சொல்வேன். எப்போதுமே இரண்டு வாரங்களுக்கு ஒருமுறையோ, மாதத்துக்கு ஒருமுறையோ எடையைச் சரிபார்த்தால் போதுமானது.

அப்படிப் பார்க்கும்போதுதான் உங்கள் எடையில் ஏற்ற, இறக்கங்கள் சரியாகத் தெரியும். ஏனெனில் சில நேரங்களில் உடல் உப்புசம் மற்றும் உடலில் நீர்கோத்திருப்பதன் காரணமாக எடை அதிகமாகக் காட்டலாம். உண்மையில் உங்கள் உடல் இஞ்சுகளில் குறைந்திருக்கும். அது வெயிட் மெஷினில் தெரியாது.

தினமுமோ, அடிக்கடியோ எடையைச் சரிபார்ப்பது உளவியல்ரீதியாகவும் சரியானதல்ல. ஏனெனில் முதல்நாள் 500 கிராம் குறைந்திருப்பதைக் காட்டும். அடுத்தநாள் 700 கிராம் ஏறியிருக்கலாம். அது உங்களை உளவியல்ரீதியாக வெகுவாக பாதிக்கும்.

வெயிட் லாஸ் டயட்

நீங்கள் சரியான உணவுப்பழக்கம் மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும் பட்சத்தில்தான் எடையைச் சரிபார்ப்பது என்பது சரியான விஷயமாக இருக்கும். அப்படி எதையுமே செய்யாமல் வெறுமனே எடையை மட்டும் சரிபார்ப்பதில் அர்த்தமே இல்லை.

பெண்கள் மாதவிலக்கு தொடங்குவதற்கு சில தினங்களுக்கு முன்போ, மாதவிடாயின்போதோ, அது முடிந்த அடுத்த சில தினங்களுக்கோ எடையை சரிபார்க்க பார்க்க வேண்டாம். அந்த நாள்களில் அவர்களது உடலில் நீர் கோத்திருக்கும் என்பதால் அப்போது வெயிட் மெஷின் காட்டும் எடை சரியானதாக இருக்காது.



from Latest News https://ift.tt/54QvTe6

Post a Comment

0 Comments