Doctor Vikatan: முகப்பருவைப் போக்க உதவுமா டூத் பேஸ்ட்?

Doctor Vikatan: டூத் பேஸ்ட்டை முகப்பருக்களின் மேல் தடவினால் அவை சீக்கிரம் காய்ந்துவிடும் என்கிறார்களே, அது உண்மையா? அதே போல சருமத்துக்கு வேறு எந்த க்ரீமும் உபயோகிக்க வேண்டாம், டூத் பேஸ்ட்டை தடவினால் அது ஆன்டி ஏஜிங் க்ரீம்போல செயல்படும் என்பதும் உண்மையா

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா.

சருமநல மருத்துவர் டாக்டர் பூர்ணிமா

இந்தக் கேள்வியைப் படிக்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. இப்படியொரு விஷயம் உங்கள் மனதில் எப்படித் தோன்றியிருக்கும் என்பதையே புரிந்துகொள்ள முடியவில்லை.

நம் மக்களுக்கு இப்படி எத்தனை தவறான தகவல்கள் போய்ச் சேர்கின்றன என்பதும், அவற்றை சரியா, தவறா என்று அலசி ஆராய்ந்து பார்க்கும் தன்மைகூட அவர்களில் பலருக்கு இல்லை என்பதும் வருத்தமாக இருக்கிறது.

எந்தவித அடிப்படை ஆதாரமும் உண்மையும் இல்லாத இதுபோன்ற தகவல்களை மக்கள் எப்படி கண்மூடித்தனமாக நம்பி, பின்பற்றுகிறார்கள் என்பதே ஆச்சர்யமாக இருக்கிறது. மக்களின் அறியாமையால்தான் இதுபோன்ற தவறான தகவல்கள் தொடர்ந்து பரப்பப்படுகின்றன. அப்படி உங்களுக்கு வரும் தகவல்கள் எல்லாவற்றையும் அப்படியே நம்பி, பின்பற்றுவது சரியானதல்ல.

டூத் பேஸ்ட் என்ற வார்த்தையிலேயே அதன் பயன்பாடு உணரப்படும். அது பற்களுக்கானது. பற்களைச் சுத்தப்படுத்தவும், வாயில் கிருமிகள் தொற்றாமலிருக்கவும் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுபவை டூத் பேஸ்ட்டுகள். நம்மைச் சுற்றி கோடிக்கணக்கான கிருமிகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொருவித தொற்றை ஏற்படுத்தும்.

டூத் பேஸ்ட்

பருக்கள் உருவாகும் காரணமே வேறு. அதற்கும் டூத் பேஸ்ட்டுக்கும் எந்தத் தொடர்புமே இல்லை. எதை, எதை, எந்தெந்த விஷயங்களுக்குப் பயன்படுத்த வேண்டுமோ அப்படிப் பயன்படுத்துங்கள். உடல்நலம் தொடர்பான எந்தப் பிரச்னைக்கும் எதையும் கண்மூடித்தனமாகப் பின்பற்றாமல் முதலில் சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் கலந்தாலோசியுங்கள்.

முகப்பருவிலேயே நான்கு வகைகள் உள்ளன. உங்களுக்கு வந்தது எந்த வகையானது என்று தெரிந்து அதற்கேற்ற சிகிச்சையை எடுப்பதுதான் சரியானது. அதே மாதிரி ஆன்டி ஏஜிங் என்பது தனி பிரச்னை. அதற்கான காரணங்களும் சிகிச்சைகளும் நிறைய உள்ளன. எனவே இப்படி கண்ட கண்ட ஃபார்வேர்டுகளை உண்மையென நம்பிப் பின்பற்றுவதைத் தவிருங்கள். டூத் பேஸ்ட்டை பற்களுக்கு மட்டும் பயன்படுத்துங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



from Latest News https://ift.tt/3T9jmHs

Post a Comment

0 Comments