Doctor Vikatan: நைட் ஷிஃப்ட் வேலை... அதிகரிக்கும் உடல் பருமன்... உடற்பயிற்சி மட்டும்தான் தீர்வா?

என் வயது 48. ஐடி துறையில் வேலை பார்க்கிறேன். பகல் ஷிஃப்ட்டும், நைட் ஷிஃப்ட்டும் மாறி மாறி வருகிறது. எனக்கு மூன்று வேளையும் சோறு சாப்பிடும் பழக்கம் இருக்கிறது. இரவிலும் வேலைக்குச் செல்வதற்கு முன் சோறு சாப்பிட்டுவிட்டுப் போகிறேன். கடந்த சில மாதங்களில் அதிக எடை கூடிவிட்டேன். தினமும் சிறிது நேரம் ஓடும்படி நண்பர்கள் சொல்கிறார்கள். ஓடினால் எனக்கு இதயத்துடிப்பு அதிகரிக்கிறது. இத்தனை வயதுவரை எந்த உடற்பயிற்சியும் செய்யாத நிலையில், இப்போது திடீரென என்னால் எக்சர்சைஸ் செய்ய முடியவில்லை. இனிமேலும் எடை கூடாமலிருக்க நான் என்ன செய்ய வேண்டும்? உடற்பயிற்சி மட்டும்தான் தீர்வா?

ஐடி வேலை

பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்

ஷிஃப்ட் மாறி மாறி வேலை பார்ப்பவர்களுக்கு உடல்ரீதியான பிரச்னைகள் நிறைய வரும். முடி உதிர்வில் தொடங்கி சரும பாதிப்பு, உடல்பருமன் வரை பல பிரச்னைகள் அவர்களை பாதிக்கும்.

உடலியல் கடிகாரத்தில் ஏற்படும் குழப்பமே இதற்கெல்லாம் காரணம். பகல்நேர ஷிஃப்ட்டில் வேலை பார்க்கும்போது ஒரு மாதிரி சாப்பிடுவீர்கள். அதுவே இரவு ஷிஃப்ட்டில் வேலை பார்க்கும்போது நள்ளிரவுகூட சாப்பிட வேண்டியிருக்கும். அப்போதுதான் காலைவரை உங்களால் வேலை பார்க்க முடியும்.

ஸ்ரீமதி வெங்கட்ராமன்

மாலையில் ஆரம்பித்து மறுநாள் காலை வரை வேலை பார்க்க வேண்டியிருக்கும் சூழலில் தூக்கம் வராமலிருக்கவும் சிலர் எதையாவது கொறிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வார்கள்.

நம்முடைய பாரம்பர்ய உணவுப் பழக்கத்தில் கொஞ்சம் சாதம், பருப்பு, ரசம், காய்கறி, கூட்டு, தயிர் என எல்லாமே இருக்கும். இந்தக் காலத்தில் யாரும் அப்படிச் சாப்பிடுவதில்லை. எனவே மூன்றில் ஒரு பங்கு திரவ உணவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

இப்படிச் சாப்பிடுவதன் மூலம் நீங்கள் எடுத்துக்கொள்ளும் சாதத்தின் அளவு குறையும். அதன் விளைவாக எடை அதிகரிப்பதும் குறையும். எனவே உங்கள் உணவில் ஒரு பங்கு திரவ உணவுகள் (சூப், ரசம், நீர்மோர் போன்றவை) இருக்கட்டும். இன்னொரு பங்கு காய்கறிகள் இருக்கட்டும். கடைசி பங்கு மட்டும் சாதம் இருக்கும்படி பார்த்துக்கொண்டால் உங்கள் உணவும் பேலன்ஸ்டாக இருக்கும்.

உடல் பருமன்

உங்கள் உடலுக்கு எது சாத்த்தியமோ அந்தப் பயிற்சியை நீங்கள் செய்யலாம். இதுவரை உங்கள் வாழ்க்கையில் எந்த வொர்க் அவுட்டுமே செய்யாத நிலையில், இப்போது திடீரென அதில் தீவிரமாக ஈடுபடுவது சரியாக இருக்காது. படிப்படியாகத் தான் ஆரம்பித்து அதிகரிக்க வேண்டும். தினமும் சிறிது தூரம் நடைப்பயிற்சி செய்யலாம். தினமும் 2000 அடிகளில் தொடங்கி, 5000, 8000 என அதிகரித்துக்கொண்டே போகலாம். ஆனால் ஏதேனும் ஒரு உடற்பயிற்சி என்பது எல்லோருக்கும் வாழ்க்கையில் மிகவும் அவசியம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



from Latest News https://ift.tt/gFnGUxr

Post a Comment

0 Comments