FBI: ``எனது ஃபுளோரிடா வீட்டில் அதிரடி சோதனை; எந்த அதிபருக்கும் இப்படி நடந்ததில்லை” - ட்ரம்ப் வேதனை

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஃபுளோரிடாவில் உள்ள மார்-ஏ-லாகோவில் வசித்துவருகிறார். இந்த நிலையில் திடீரென ட்ரம்ப் வீட்டில் நுழைந்த விசாரணை அமைப்பான FBI (Federal Bureau of Investigation) அவரின் வீட்டைச் சோதனையிட்டு வருகிறது. திடீர் சோதனைக்கான காரணத்தை இதுவரை FBI வெளியிடவில்லை.

இந்த நிலையில், இது தொடர்பாக ட்ரம்ப் செய்தியாளர்களிடம், "எனது வீடு தற்போது முற்றுகையிடப்பட்டு, FBI முகவர்களின் ஒரு பெரிய குழுவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னால் அரசாட்சியிலிருந்த எந்த அமெரிக்க அதிபருக்கும் இதுபோன்று எதுவும் நடந்ததில்லை. தற்போது எனது வீட்டில் அறிவிக்கப்படாத சோதனை அவசியமுமில்லை.

சோதனையிடப்படும் ட்ரம்ப் வீடு

நீதி அமைப்பை ஆயுதமாக்கி என்மீது வழக்குத் தொடரும் தவறான நடவடிக்கை இது. 2024-ல் நான் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதை விரும்பாத தீவிர இடது ஜனநாயக கட்சியினரின் நேரடித் தாக்குதல். மூன்றாம் உலக நாடுகளில் மட்டுமே இது போன்ற தாக்குதல்கள் நடக்க முடியும். துரதிர்ஷ்டவசமாக, அமெரிக்கா இப்போது அந்த நாடுகளில் ஒன்றாக மாறிவிட்டது. இதுவரை கண்டிராத அளவில் ஊழல் செய்துவிட்ட ஆளும் அரசு, தற்போது எனது பாதுகாப்பையும் உடைத்துவிட்டது. ​​எனது அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளர்கள் எதிர்வரும் தேர்தலில் பெரும் வெற்றி பெறுவார்கள் என்ற எல்லா கருத்துக்கணிப்புகளையும் பார்த்து, ​​என்னையும், குடியரசுக் கட்சியையும் மீண்டும் ஒருமுறை தடுக்க முயற்சி செய்கிறார்கள். எனவே, இந்த சட்டவிரோத அரசியல் துன்புறுத்தல் அம்பலப்படுத்தப்பட வேண்டும்." எனத் தெரிவித்திருக்கிறார்.

ட்ரம்ப் ஆதரவாளர்கள் போராட்டம்

அமெரிக்க அரசியல் விமர்சகர்கள், அமெரிக்காவின் கடந்த கால அறிக்கைகளின்படி, அமெரிக்க ஜனாதிபதிகளுக்கு எதிராக வழக்குத் தொடருவதிலிருந்து முழுமையான விலக்கு உண்டு என ட்ரம்ப் நம்புகிறார். ஆனால் சில அரசியலமைப்பு அறிஞர்கள், அதிபர்கள் பதவியில் இருக்கும் காலத்தில் மட்டுமே அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரக்கூடாது என வரையறுக்கப்பட்டுள்ளது என்றும், ஜனாதிபதி பதவிக்கு முன்னும் பின்னும் வழக்கு தொடர்வது பற்றிய தெளிவு குறைவாக இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

மேலும் சில ஆய்வாளர்கள், முன்னாள் ஜனாதிபதிகள் மீது வழக்குத் தொடரக்கூடாது என்பது நீதித்துறையின் கொள்கை தானே தவிரச் சட்டமல்ல என்றும் தெரிவிக்கிறார்கள். சோதனைக்கு எதிராக ட்ரம்ப் ஆதரவாளர்கள் அரசை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.



from Latest News https://ift.tt/GXSHYEO

Post a Comment

0 Comments