சிவசேனா எம்.பி.சஞ்சய் ராவத் நில மோசடி தொடர்பாக கடந்த மாதம் 30-ம் தேதி அமலாக்கப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அன்று காலையில் சஞ்சய் ராவத் இல்லத்தில் ரெய்டு நடத்திவிட்டு விசாரணைக்கு அழைத்து சென்று இரவில் கைது செய்தனர். இரண்டு நாள்களுக்கு முன்பு சஞ்சய் ராவத் மனைவியிடமும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். 1,035 கோடி நில மோசடியில் சஞ்சய் ராவத் எப்படி அமலாக்கப்பிரிவிடம் சிக்கினார் என்பது குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.
மும்பை கோரேகாவ் பகுதியில் இருக்கும் பத்ரா சால் என்ற இடத்தில் இருக்கும் 672 குடியிருப்புக்களை இடித்துவிட்டு அந்த இடத்தில் புதிய குடியிருப்புக்களை கட்டும் ஒப்பந்தத்தை சஞ்சய் ராவத் தனக்கு நெருக்கமான பிரவின் ராவத்திற்கு பெற்றுக்கொடுத்தார்.
பிரவின் ராவத் அதனை மேம்படுத்த எச்டிஐஎல் நிறுவனத்தின் ராகேஷ், சரங்க் வாத்வான் சகோதரர்களுடன் கூட்டணி சேர்ந்தார். உடனே ராகேஷ், சரங்க் ரூ.100 கோடியை பிரவின் ராவத்திற்கு டிரான்ஸ்பர் செய்தார். தற்போது பிரவின் ராவத்தும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சஞ்சய் ராவத் மராத்தி பட பெண் இயக்குநர் ஸ்வப்னா பட்கர் பெயரில் சில சொத்துக்களை வாங்கி இருக்கிறார். ஸ்வப்னாவை பினாமியாக வைத்து ரொக்க பணம் கொடுத்து அதிகமான சொத்துக்களை சஞ்சய் ராவத் வாங்கி இருக்கிறார் எனக் கூறப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடற்கரையோர நகரமான அலிபாக்கில் 8 நிலத்தை சஞ்சய் ராவத் தனது மனைவி வர்ஷா மற்றும் ஸ்வப்னா பட்கர் ஆகியோர் பெயரில் வாங்கினார். ஆனால் அந்த சொத்தை தனது மனைவி பெயருக்கு மாற்றி எழுதிக்கொடுக்கும்படி கேட்டதால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
ஸ்வப்னா சொத்தை எழுதிக்கொடுக்க மறுத்தார். இதனால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து சஞ்சய் ராவத் தன்னை துன்புறுத்துவதாகவும், தன்னை பின் தொடர்வதாகவும் ஸ்வப்னா மும்பை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருக்கிறார். இம்மனு விசாரணையில் இருக்கிறது. சொத்தை திரும்ப கேட்டதால் ஸ்வப்னா அமலாக்கப்பிரிவு அதிகாரிகளிடம் சஞ்சய் ராவத்திற்கு எதிரான சாட்சியாக மாறியுள்ளார். சஞ்சய் ராவத் எப்படி ரொக்கமாக பணம் கொடுத்து சொத்துக்களை வாங்கினார் என்பது குறித்து அமலாக்கப்பிரிவு அதிகாரிகளிடம் தெரிவித்தார். அதோடு சஞ்சய் ராவத்திற்கு எதிராக ஆதாரங்களை திரட்டவும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகளுக்கு உதவினார் எனச் சொல்லப்படுகிறது.
இதற்கிடையே சஞ்சய் ராவத் சிறையில் இருந்து கொண்டு சாம்னா பத்திரிகையில் வாராந்திர கட்டுரை எழுதி இருப்பது அமலாக்கப்பிரிவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சிறையில் இருக்கும் போது அனுமதி வாங்கித்தான் எதையும் எழுத முடியும். ஆனால் சஞ்சய் ராவத் அது போன்ற அனுமதி எதையும் பெறவில்லை. எனவே எப்படி எழுதினார் என்பது குறித்து அமலாக்கப்பிரிவு விசாரித்து வருகிறது. உண்மையிலேயே அவர்தான் எழுதினாரா அல்லது அவர் பெயர் மட்டும் பயன்படுத்தப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர். சஞ்சய் ராவத் தனது தலையங்க கட்டுரையில் மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பகத்சிங் கோஷாரியாவை கடுமையாக விமர்சித்து இருந்தார். அதோடு மராத்தியர்களுக்கு சொந்தமான சர்க்கரை ஆலைகள், டெக்ஸ்டைல் நிறுவனங்களை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் திட்டமிட்டு மூடி வருவதாகவும் குறிப்பிட்டு இருந்தார். அமலாக்கப்பிரிவின் இந்த நெருக்கடிகளுக்கு பயந்து சிவசேனாவை விட்டு விலக மாட்டோம் என்று சஞ்சய் ராவத்தின் சகோதரர் சுனில் ராவத் தெரிவித்துள்ளார்.
from Latest News https://ift.tt/0ZeXLgK
0 Comments