நாமக்கல்: 'நாட்டுக்கோழி, கொள்ளை ரேட்டு போகும் சார்' - 3 மாதங்களில் 250 கோழிகளை திருடிய இளைஞர்கள்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகில் உள்ள கிராமங்களில் அதிக அளவில் விவசாயம் செய்யப்படுகிறது. அதோடு, அங்கு வசிக்கும் விவசாயிகள் விவசாயத்தோடு சேர்த்து, கோழி, ஆடு, மாடு போன்ற கால்நடைகளையும் வளர்த்து வருகின்றனர். அந்த வகையில், ராசிபுரம் அருகில் உள்ள மின்னக்கல் கிரமத்தில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் தங்கள் வீடுகளில் நாட்டுக்கோழிகளை வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களில் அங்குள்ள பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் விவசாய தோட்டத்தில் வளர்க்கும் 250 க்கும் மேற்பட்ட கோழிகள், மர்மமாக காணாமல் போயிருக்கிறது.

தேவராஜ்

இதனால் கவலையடைந்த விவசாயிகள், 'கீரிப்பிள்ளை, நாய் எதுவும் கோழிகளை பிடித்துப்போயிருக்குமோ?' என்று குழம்பினர். ஆனால், கோழிகள் காணாமல் போவது தொடரவே, சந்தேகமடைந்த விவசாயிகள், இதுகுறித்து வெண்ணந்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். விவசாயிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார், விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், மின்னக்கல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மாணிக்கம்(47) என்பவரது வீட்டின் அருகில் கோழி கூண்டில் இருந்த கோழிகள் இரவில் சத்தம் போட்டிருக்கிறது. இதனால், திடுக்கிட்டுப்போய் எழுந்த விவசாயி மாணிக்கம், டார்ச் லைட் சகிதம் கோழிகூண்டு அருகே விரைந்திருக்கிறார்.

டார்ச் லைட்டை அவர் அடிக்க, அந்த வெளிச்சத்தில் 2 நபர்கள் கோழிகளை பிடித்து இருசக்கர வாகனத்தில் இருந்த சாக்கு பையில் போட்டுக்கொண்டிருந்ததை பார்த்தார். உடனே மாணிக்கம், உரக்க சத்தம் போடவே, அவர் போட்ட சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மர்ம நபர்களை சுற்றி வளைத்து அவர்களை லாவகமாகப் பிடித்தனர். அதோடு, அவர்களை உடனடியாக வெண்ணந்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீஸார், 'கோழியை ஏண்டா திருடினீங்க?' என்று விசாரணை மேற்கொள்ள, 'நாட்டுக்கோழி கொள்ளை ரேட்டு போவுது சார். அதான், வருமானத்துக்காக கோழிகளை திருடினோம்' என்று சொல்லியுள்ளனர்.

கார்த்தி

போலீஸாரின் விசாரணையில், அவர்கள் இருவரும் சேலம் மாவட்டம் பாலம்பட்டியைச் சேர்ந்த கார்த்தி(27), தேவராஜ்(42) என்பது தெரியவந்தது. அதோடு, இவர்கள் திருடிய கோழிகளை மின்னக்கல் கோடி காட்டில் கோழிகடை நடத்திவரும் ராஜியிடம் விற்பனை செய்ததாக கூறியுள்ளனர். இதனால், போலீஸார் ராஜியிடமும் விசாரித்த போது, திருட்டு கோழிகளை வாங்கியதை ஒப்புகொண்டார். இதனால், கோழிதிருட்டில் ஈடுபட்ட கார்தி, தேவராஜ், மற்றும் திருட்டு கோழிகளை வாங்கிய ராஜி ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீஸார், அவர்களை சிறையில் அடைத்துள்ளனர். அதோடு, அவர்கள் கோழி திருட்டுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும், வெண்ணந்தூர் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/V7k5O9p

Post a Comment

0 Comments