நீதிமன்ற உத்தரவு; கருப்பசாமி கோயிலை அகற்றிய அதிகாரிகள் - பொதுமக்கள் எதிர்ப்பு; போலீஸ் குவிப்பு

கிருஷ்ணகிரி, கட்டிகானப்பள்ளி ஊராட்சிக்குஉட்பட்ட பெரிய மாரியம்மன் கோயில் அருகில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துக்குச் சொந்தமான காலி இடத்தில் கருப்பசாமி கோயில் அமைந்திருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் பக்தர்கள் சிலர், இக்கோயிலைக் கட்டி வழிபடத் தொடங்கினர். தொடர்ந்து, சுற்றுவட்டாரத்திலிருக்கும் 18 கிராம மக்களும் விழா எடுத்து கருப்பசாமிக்கு பூஜை செய்து வந்தனர். இந்த நிலையில், கோயில் அமைந்திருக்கும் 4,807 சதுரஅடி நிலத்தை 2017-ல் ஓசூரைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருக்கு வீட்டு வசதி வாரியம் ஏலம் மூலமாக விற்பனைச் செய்திருக்கிறது.

அப்புறப்படுத்தப்பட்ட கருப்பசாமி சிலை

ராமச்சந்திரன் ரூ.96 லட்சத்துக்கு இந்த இடத்தை வாங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. கருப்பசாமி கோயில் இருப்பதால், நிலத்தை கையகப்படுத்துவதில் ராமச்சந்திரனுக்கு சிரமம் இருந்து வந்தது. கோயிலை அப்புறப்படுத்த முயன்றபோது, பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து நிலத்தை தன் வசப்படுத்தக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் அவர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், கோயிலை அப்புறப்படுத்தி நிலத்தை ராமச்சந்திரனிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து, கிருஷ்ணகிரி எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் தலைமையிலான 100-க்கும் மேற்பட்ட போலீஸார், கோயில் அமைந்திருக்கும் பகுதியில் குவிந்தனர். வன்முறை நிகழாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் துரிதமாக செய்தனர். பதற்றத்தை தவிர்க்கும் வகையில், வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோயிலில் வழிபாடு நடத்தும் தரப்பினருக்கும், நில உரிமையாளர் ராமச்சந்திரன் தரப்பினருக்கும் அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது.

இடிக்கப்படும் கருப்பசாமி கோயில்

வழிபாடு நடத்தும் தரப்பினர், கோயிலை அப்புறப்படுத்தக் கூடாது என்று சொன்னதால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, கோயிலில் இருந்த சாமி சிலைகளை கடப்பாரையால் பெயர்த்தெடுத்து வாகனத்தில் ஏற்றினர். பின்னர், பொக்லைன் இயந்திரம் மற்றும் கிரேன் மூலம் ஷெட்டுகளையும் அகற்றி, கோயில் இருந்த இடத்தை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். இதனால், வழிபாடு நடத்தி வந்த 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், ஆத்திரமடைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் சமரசம் செய்து போராட்டத்தைக் கலைத்தனர். ஆனாலும், தொடர்ந்து அந்தப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/8RzAjo6

Post a Comment

0 Comments