கடலூர் மாவட்டம், புவனகிரியில் அமைந்திருக்கும் அரசு பெண்கள் மாதிரிப் பள்ளியில், சுமார் 1,000-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். செப்டம்பர் 1-ம் தேதி வழக்கமான பள்ளி இடைவேளை நேரத்தில் மாணவிகள் கழிவறைக்குச் சென்றனர். அப்போது கழிவறைக்கு அருகில் இருந்த முள் புதரில் எறும்புகள் சூழ பச்சிளம் ஆண் குழந்தையின் சடலம் ஒன்று கிடந்திருக்கிறது. அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவிகள் ஆசிரியர்களிடம் கூறியிருக்கின்றனர். தொடர்ந்து பள்ளி நிர்வாகம் புவனகிரி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தது. அதையடுத்து அங்கு விரைந்த போலீஸார், குழந்தையின் சடலத்தை கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பிறகு பள்ளியின் துணை தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீஸார், அந்த குழந்தை குறித்து விசாரணையை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில் அதே பள்ளியில் +1 படித்துவரும் மாணவிக்கு பிறந்த குழந்தைதான் என்பதும், அவர்தான் அந்த குழந்தையை புதரில் வீசினார் என்பதும் தெரிய வந்திருக்கிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய விசாரணை அதிகாரிகளில் ஒருவர், “16 வயதான அந்த மாணவி, பத்தாம் வகுப்பு படித்துவரும் தனது சித்தப்பா மகனுடன் நெருங்கி பழகி வந்திருக்கிறார். அடிக்கடி இவர்கள் தனிமையில் சந்தித்தாலும், அக்கா, தம்பி என்பதால் யாரும் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை. இவர்கள் நெருங்கிப் பழகியதன் விளைவாக அந்தச் சிறுமி கர்ப்பமாகியிருக்கிறார். தான் கர்ப்பமாக இருக்கிறோம் என்று தெரிந்தாலும், அதனை தனது வீட்டில் சொல்லாமல் மறைத்து வழக்கம்போல பள்ளிக்கு சென்று வந்திருக்கிறார். சம்பவம் நடைபெற்ற அன்று சோர்வாக இருந்த அந்த மாணவி, வகுப்பறையில் கடை பெஞ்சில் படுத்தே இருந்திருக்கிறார். அதன்பிறகுதான் கழிவறைக்குச் சென்று குழந்தையை அவரே பிரசவித்திருக்கிறார். அதன்பிறகுதான் அதனை அருகிலிருந்த முள் புதரில் வீசியெறிந்திருக்கிறார். மாணவியிடமும், அந்த சிறுவனிடமும் விசாரணை செய்து வருகிறோம். அந்த மாணவி மாற்றி மாற்றி வாக்குமூலம் கொடுத்து வருகிறார். விசாரணை முடிந்தவுடன்தான் அனைத்து கேள்விகளுக்கும் விடை தெரியவரும்” என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/srnG1Zk
0 Comments