ஒன்றியக் குழு தேர்தல்; உச்சம் தொட்ட கோஷ்டிப்பூசல்! - அமைச்சரா, மாவட்டமா திமுக-வினர் மல்லுக்கட்டு!

ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் ஒரு அணியாகவும், மாவட்டப் பொருப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் ஒரு அணியாகவும் மல்லுக்கட்டி வருவதாக உடன்பிறப்புகள் முணுமுணுத்து வருகின்றனர். இந்த நிலையில், முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழு தேர்தலில் அமைச்சர் தரப்பு தி.மு.க ஒன்றிய பெண் கவுன்சிலர், மாவட்டப் பொருப்பாளர் ஆதரவுடன் களமிறங்கிய தி.மு.க கவுன்சிலரை எதிர்த்து போட்டியிட்ட நிலையில், தனக்குச் சாதகமாக தேர்தல் நடைபெறாவிட்டால் தேர்தலை சீர்குலைக்கும் வகையில் கையில் உஜாலா சொட்டுநீல பாட்டலுடன் வந்திருந்தது உட்கட்சிப் பூசலை வெட்டவெளிச்சமாக்கியிருக்கிறது.

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின், ஒன்றியக் குழுத் தலைவராக இருந்த தர்மர் அ.தி.மு.க சார்பில் மாநிலளங்களவை உறுப்பினர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதால் ஒன்றியக் குழுத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காலியாக இருந்த அந்தப் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது.

பறிமுதல் செய்த உஜாலா நீலத்தை கீழே கொட்டிய ஆய்வாளர்

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பதவிக்கு தி.மு.க மாவட்டப் பொருப்பாளரும், எம்.எல்.ஏ-வுமான காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தன்னுடைய ஆதரவாளரான 2-வது வார்டு கவுன்சிலர் சண்முகப்பிரியாவை போட்டியிட வைத்தார். அவருக்கு எதிராக அமைச்சர் ராஜகண்ணப்பன் தன்னுடைய ஆதரவாளரான 3-வது வார்டு தி.மு.க வேட்பாளர் நாகஜோதியை போட்டிக்கு நிறுத்தினார். இதில் யார் வெற்றி பெற்றாலும், தோல்வியுற்றாலும் இருதரப்பினரும் மோதிக்கொள்ளும் சூழல் இருந்துவந்தது.

இதையொட்டி, மாவட்ட எஸ்.பி தங்கதுரை உத்தரவின்பேரில், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் முதுகுளத்தூர் டி.எஸ்.பி சின்னக்கண்ணு தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். தீவிர சோதனைக்குப் பின்னரே போலீஸார் அனைத்து கவுன்சிலர்களையும் தேர்தல் நடத்தும் அறைக்குள் அனுப்பி வைத்தனர்.

தி.மு.க இருதரப்பினர் மோதல்

அப்போது அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆதரவாளரான தி.மு.க 3-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் நாகஜோதியை பெண் காவலர்கள் சோதனையிட்ட போது அவரது ஆடைக்குள் 50 மில்லி கொண்ட உஜாலா சொட்டு நீல பாட்டிலை (மை) மறைத்து வைத்து எடுத்து வந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரிடமிருந்து அந்த பாட்டிலை பறிமுதல் செய்து அதிலிருந்த சொட்டு நீலத்தை கீழே ஊற்றினர். தேர்தலில் தோல்வியைத் தழுவினால் வாக்குப்பதிவு சீட்டில் இதனை ஊற்றுவதற்காக எடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து அங்கு வந்த காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் 'உஜாலா' சொட்டு நீளத்தை மறைத்து எடுத்து வந்த தி.மு.க கவுன்சிலர்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவருடன் அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர்களும், போலீஸாரும் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி தேர்தல் அறையிலிருந்து வெளியே அனுப்பினர்.

வெற்றி பெற்ற பெண் கவுன்சிலருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது

அதைத் தொடர்ந்து, நடத்தப்பட்ட தேர்தலில் காதர் பாட்ஷா முத்துராமலிங்கத்தின் ஆதரவாளர் சண்முகப்பிரியா 8 வாக்குகள் பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட நாகஜோதி 5 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். இதனால் அ.தி.மு.க வசம் இருந்த ஒன்றியக் குழுத் தலைவர் பதவி தற்போது தி.மு.க வசம் சென்றுள்ளது.

தன்னுடைய கட்சி வேட்பாளரை தோற்கடிக்க அமைச்சரே தன் ஆதரவாளரை போட்டியிட வைப்பதும், தன் கட்சி கவுன்சிலர்மீது நடவடிக்கை எடுக்க மாவட்டப் பொறுப்பாளரே அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்வதுமென ராமநாதபுரம் திமுக-வில் உட்கட்சி மோதல் உச்சத்தில் இருக்கிறது என்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.



from Latest News https://ift.tt/ziWDmJs

Post a Comment

0 Comments