சங்ககால கொற்கை துறைமுகம் அடையாளம் காணல்; கடல்சார் முன்கள ஆய்வுப்பணிகள் தொடக்கம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூர், கொற்கை மற்றும் சிவகளை ஆகிய பகுதிகளில் மாநில தொல்லியல் துறையின் சார்பில் அகழாய்வுப் பணிகள் நடந்தது. இதில், கொற்கை 52 ஆண்டுகள் கழித்து கடந்த 2021-ம் ஆண்டு அகழாய்வுப் பணிகள் நடந்தது.

சங்க காலத்தில் இருந்து பாண்டிய மன்னனின் தலைநகராக விளங்கிய கொற்கையில், கடந்த 19-ம் நூற்றாண்டில் இருந்து பல கட்டமாக அகழாய்வு நடந்து வந்தாலும், தற்போது நடந்துள்ள அகழாய்வில் பல முக்கியப் பொருள்கள் கிடைத்துள்ளது. இதன் மூலம் கொற்கைக்கும் பல வெளிநாடுகளுக்கும் வணிகத் தொடர்பு இருந்தது உறுதியாகியுள்ளது.

முன்கள ஆய்வு குறித்து அதிகாரிகள் விளக்கம்

கொற்கையில் கடல்சார் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என தமிழக தொழில்துறை மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஏற்கெனவே கூறியிருந்தார். இந்த நிலையில், மாநில தொல்லியல் துறை, இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய கடல் சார்ந்த தொழில்நுட்ப நிறுவனம் அகியவை இணைந்து சங்க காலக் கொற்கைத் துறைமுகத்தினை அடையாளம் காணுவதற்கு கடல்சார் முன்கள ஆய்வுப் பணிகள் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இன்று துவங்கின.

தேசிய கடல் சார்ந்த தொழில்நுட்ப நிறுவனத்தின் 'சாகர் தாரா ஆய்வுக்கப்பல்’ இந்த ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உள்ளது. இந்தப் பணிகளை தமிழக தொழில்துறை மற்றும் தொல்லியல் துறையின் அமைச்சர் தங்கம் தென்னரசு , சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

அமைச்சர்கள் ஆய்வு

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, ”தமிழகத்தில் தமிழக தொல்லியல் துறையின் சார்பாக 7 இடங்களில் அகழ்வாராய்ச்சி நடந்து வருகிறது. இந்த அகழாய்வுப் பணிகளுக்காக தமிழக முதல்வர் ஸ்டாலின், ரூ. 15 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அந்த வகையில் கொற்கை துறைமுகம் இருந்த பகுதியாக உள்ள தூத்துக்குடி கடல் பகுதியில் அகழாய்வு செய்வதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.

இந்தப் பணிகள் 7 நாட்கள் நடைபெற உள்ளது. தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து திருச்செந்தூர் வரையிலான 13 கி.மீ கடல் பகுதியில், இந்த முன்கள அகழாய்வு நடைபெறும். இந்த அகழ்வாய்வில் கிடைக்கக்கூடிய ஆவணங்களைக் கொண்டு அடுத்த கட்ட அகழ்வாய்வுப் பணி நடைபெறும். கொற்கையில் ஏற்கெனவே அகழாய்வு மேற்கொண்டதில் கங்கை சமவெளிக்கு இங்கிருந்து வாணிபம் நடந்துள்ளது.

கடல்சார் முன்கள ஆய்வுப்பணி தொடக்கம்

ரோம் நாடு, இலங்கை ஆகிய நாடுகளுக்கு கொற்கையில் இருந்து வாணிபம் நடைபெற்றுள்ளது. கி.மு 8-ம் நூற்றாண்டிற்கு முன்னர் கொற்கை வாணிபம் நடந்துள்ளது. கொற்கை துறைமுகம் அமைந்துள்ள இடத்தை கண்டறிவதற்காக இந்த முன்கள ஆய்வு நடைபெறுகிறது. இந்த ஆய்வின் மூலம் கொற்கை நாகரீகத்தை வெளிகொண்டுவர இந்த ஆய்வு உதவும்” என்றார்.



from Latest News https://ift.tt/rGNd2Sz

Post a Comment

0 Comments