தென்காசி: கடன் தொல்லை.. மகன் பிரிவு - விடுதியில் விபரீத முடிவெடுத்த குடும்பம்!

தென்காசி மாவட்டம், குற்றாலம் மெயின் அருவி நுழைவு வாசல் எதிரே தனியார் விடுதியில் மதுரை மாவட்டம் திருநகர் பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் (55) என்பவர் தன் மனைவி காமாட்சி, மகள் தனபிரியா ஆகியோருடன் வந்து தங்கியுள்ளார். கடந்த 30-ம் தேதி வந்த அவர்கள் குற்றாலத்தைச் சுற்றிலும் உள்ள கோயில்கள் மற்றும் அருவிகளுக்குச் சென்று வந்திருக்கிறார்கள்.

அனைவருமே சோகம் அரும்பிய முகத்துடன் அந்தப் பகுதியில் வலம் வந்ததை அங்கிருந்தவர்கள் பார்த்துள்ளனர். ஆனாலும் அவர்கள் யாரிடமும் நெருக்கமாகப் பேசிக்கொள்ளவோ பழகவோ இல்லை என்றே விடுதியில் பணியாற்றுபவர்கள் தெரிவிக்கின்றனர். விடுதியில் இருந்து வெளியிடங்களுக்கு ஆட்டோவில் சென்றபோதிலும் அட்டோ ஓட்டுநரிடம்கூட அதிகம் பேசாமலே சென்றுள்ளனர்.

இந்த நிலையில், அவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து இன்று வெளியே வரவே இல்லை. நீண்ட நேரமாகக் கதவு திறக்கப்படாததுடன் அறையில் இருந்து ஏதோ மருந்து வாடை வீசியுள்ளது. அதனால் சந்தேகமடைந்த விடுதியின் பணியாளர்கள் கதவைத் தட்டியுள்ளனர். ஆனாலும் கதவு திறக்கப்படாததுடன் உள்ளே இருந்து முனகல் சத்தம் கேட்டுள்ளது.

உயிரிழந்த மகாலிங்க, தனபிரியா

அதனால் விடுதிப் பணியாளர்கள் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அப்போது மூவரும் விஷம் அருந்தியது தெரியவந்தது. மகாலிங்கமும் அவர் மகள் தனபிரியாவும் ஏற்கெனவே இறந்து கிடந்துள்ளனர். காமாட்சி மட்டும் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்திருக்கிறார். உடனடியாக அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. சம்பவம் பற்றி அறிந்ததும் குற்றாலம் போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். தென்காசி தடயவியல் அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். உயிரிழந்த மகாலிங்கம், தனபிரியா ஆகியோரின் உடல்கள் உடற்கூறு ஆய்வுக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

சடலமாக மீட்கப்பட்ட உடல்கள்

போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கடன் பிரச்னையால் மகாலிங்கம் தவித்துள்ளார். அத்துடன் நான்கு மாதங்களுக்கு முன்பு அவர் மகன் தற்கொலை செய்துள்ளார். அதனால் மிகுந்த சோகத்தில் ஒட்டுமொத்த குடும்பமும் இருந்துள்ளது. அந்த மனஅழுத்தம் காரணமாகவே இந்த சோகம் நடந்திருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/xmuoUq1

Post a Comment

0 Comments