காங்கிரஸுக்கும், கோஷ்டி பூசலுக்கும் முடிவே கிடையாது போல. ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக உள்ள மக்கள் ராஜன், ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளர். இருப்பினும் இந்த மாவட்டத்தில் முன்னாள் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் ஆதரவாளர்களே அதிகம். இதனால் இருதரப்பினருக்கும் இடையே அவ்வப்போது மோதலும், சீண்டலும் ஏற்படுவது இயல்பாக உள்ளது.
அண்மையில் வட்டார அளவில் மாநில பொதுக்குழு உறுப்பினர்களின் நியமனம் நடைபெற்றது. பெரும்பாலும் அந்தந்த வட்டாரத்தைச் சேர்ந்தவர்களை மட்டுமே இந்த பொறுப்பில் மாவட்டத் தலைவர் நியமனம் செய்யப்படுவதாக கட்சியினர் கூறுகின்றனர். ஆனால் பெருந்துறை வட்டாரத்துக்கு, மொடக்குறிச்சி வட்டாரத்தைச் சேர்ந்த மக்கள் ராஜனின் ஆதரவாளருக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பை தாரை வார்த்து விட்டதாக மக்கள் ராஜனுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியிருக்கிறது ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தரப்பு.
இதுகுறித்து நல்லாம்பட்டி நடராஜன் நம்மிடம் கூறியதாவது, ``மொடக்குறிச்சி, கொடுமுடி, பெருந்துறை, ஊத்துக்குளி ஆகிய 4 வட்டாரங்களை உள்ளடக்கியது ஈரோடு தெற்கு மாவட்டம். பெருந்துறை வட்டாரத்துக்கு பொதுக்குழு உறுப்பினர் பதவியில் நியமிக்குமாறு நானும், முன்னாள் மாவட்டத் தலைவர் வக்கீல் காந்தியும் கேட்டிருந்தோம். ஆனால் இந்த தொகுதிக்கும், வட்டாரத்துக்கும் சம்பந்தமே இல்லாத மொடக்குறிச்சி வட்டாரத்தைச் சேர்ந்த எம்.முத்துகுமார் என்பவரை பெருந்துறை வட்டார பொதுக்குழு உறுப்பினராக, தெற்கு மாவட்டத் தலைவர் மக்கள் ராஜன் நியமனம் செய்துள்ளார். இந்த 4 வட்டாரங்களுக்கும் வெவ்வேறு வட்டாரத்தைச் சேர்ந்தவர்களையே மக்கள் ராஜன் நியமனம் செய்துள்ளார்.
பெருந்துறை வட்டாரத்தில் வக்கீல் காந்திக்கோ, எனக்கோ அல்லது இந்த வட்டாரத்தைச் சேர்ந்த யாருக்கு பதவி கொடுத்தாலும் ஏற்றுக் கொள்கிறோம்.
தனது ஆதரவாளர் என்பதற்காக வட்டாரத்துக்கு சம்பந்தமே இல்லாதவர்களுக்கு பொறுப்பை கொடுத்தால் எப்படி ஏற்றுக் கொள்வது?” என்றார் வருத்தத்துடன்.
இதுகுறித்து தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜனிடம் கேட்டபோது, ``மாநில பொதுக்குழு உறுப்பினர் பதவி என்பதால் வட்டாரத்தைச் சேர்ந்தவர்களைத்தான் நியமனம் செய்ய வேண்டும் என்று இல்லை. கட்சிக்கு அதிக அளவில் உறுப்பினர்களை சேர்ப்பவர்களையும், கட்சி சார்ந்த அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்பவர்களையே பரிந்துரை செய்யமுடியும்.
வட்டாரத்துக்கு ஒரு பொதுக்குழு உறுப்பினர் பதவி மட்டுமே உள்ளது. அதற்கு மாவட்டத் தலைவர் என்ற முறையில் நான் பரிந்துரை மட்டுமே செய்கிறேன். அவர்களுக்கு பொறுப்பு வழங்கும் அதிகாரம் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு மட்டுமே உள்ளது. தற்போது புகார் கூறுபவர்கள் கட்சியின் வளர்ச்சிக்காக எந்தப் பணியையும் செய்யாதவர்கள்.
பொறுப்பு வழங்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் கட்சி அறிவித்தபடி தீவிர உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டவர்கள் என்பதால் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஈவிகேஎஸ் அணியைச் சேர்ந்த ஒருவருக்கும் ஏற்கெனவே பொறுப்பு அளிக்கப்பட்டு விட்டது” என்று முடித்துக் கொண்டார் மக்கள் ராஜன். கட்சி வளருகிறதோ இல்லையோ, கோஷ்டி பூசல் மட்டும் செழித்து வளருகிறது என கலங்குகிறார்களாம் கட்சி தொண்டர்கள்!
from Latest News https://ift.tt/qWdCAzw
0 Comments