'கேட்டது மா.செ பதவி; கிடைத்ததோ ஒ.செ' - நாமக்கல் திமுக மேற்கு மாவட்ட நிலவரம்

திமுக நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு வேட்புமனு செய்துவிட்டு காத்திருந்த திமுக புள்ளி ஒருவருக்கு, கட்சித் தலைமை ஒன்றிய செயலாளர் பதவி கொடுத்திருப்பது, அவரின் ஆதரவாளர்களை சோர்வடைய வைத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக-வில் நடப்பது என்ன என்பது குறித்து விசாரித்தோம்...

கே.எஸ்.மூர்த்தி

அ.தி.மு.கவினரோடு கைகோர்த்தது, மாவட்டச் செயலாளராக ஸ்திரமாக செயல்படாமல் கட்சியை மாவட்டத்தில் பலவிசயங்களில் கோட்டைவிட்டது உள்ளிட்டப் பல காரணங்களுக்காக, கே.எஸ்.மூர்த்திக்கு மறுபடியும் தி.மு.க தலைமை பதவி தர விரும்பவில்லை என்று தி.மு.கவினர் மத்தியில் பேசபட்டது. இந்நிலையில், பள்ளிப்பாளையம் முன்னாள் ஒன்றிய செயலாளரான வெப்படை ஜி.செல்வராஜ், மேற்கு மாவட்டச் செயலாளர் பதவிக்கு சீட் கேட்டு, மனுத்தாக்கல் செய்தார்.

அதோடு, திடீர் டிவிஸ்டாக, நாமக்கல் தொகுதி எம்.எல்.ஏவும், நாமக்கல் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளருமான ராமலிங்கம், மேற்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு வேட்புமனுதாக்கல் செய்ததாக பரபர டாக் ஓடியது. ஆனால் தி.மு.க தலைமை, 'நாமக்கல் தொகுதியில் பணி செவீங்களா, உங்களுக்கு சம்பந்தம் இல்லாத மேற்கு மாவட்டம் முழுக்க சென்று கட்சி பணி செய்வீங்களா?. உடனே, வேட்புமனுவை வாபஸ் வாங்குங்க' என்று கடிந்துகொண்டதாகவும் பரபர பேச்சு எழுந்தது. அதோடு, ராமலிங்கத்துக்கு எதிராக தலைமையிடம் வத்தி வைத்தது, அவரது அரசியல் எதிரியும், நாமக்கல் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார்தான் என்று ராமலிங்கம் தரப்பு குற்றம்சாட்டியது.

ராமலிங்கம்

இந்தநிலையில், எந்த கோஷ்டியிலும் சேராமல், நேராக மாவட்டச் செயலாளர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்த வெப்படை ஜி.செல்வராஜ், இந்த குடுமிபிடி சண்டையில் தலைமை தனக்கு பதவி கொடுத்தாலும் கொடுத்துவிடும் என்று மலைபோல நம்பியிருந்தாராம். ஆனால், பள்ளிப்பாளையம் ஒன்றியச் செயலாளர் பதவியை கொடுத்து, மாவட்டச் செயலாளர் ரேஸில் இருந்து அவருக்கு 'கல்தா' கொடுத்திருக்கிறதாம் தி.மு.க தலைமை.

இதனால், சோர்வடைந்துள்ள அவரின் ஆதரவாளர்கள் சிலரிடம் பேசினோம். "இப்போது மாவட்டச் செயலாளராக இருக்கும் கே.எஸ்.மூர்த்தியும் சரி, இதன்பிறகு மாவட்டச் செயலாளராக வர இருப்பதாகச் சொல்லப்படும் 'மதுரா' செந்திலும் சரி, கட்சிக்காக எதுவும் பண்ணமாட்டாங்க. ஆனால், ஒன்றிய செயலாளர், மாநில செயற்குழு உறுப்பினர் பதவிகளை தவிர வேறெந்த பெரிய பதவிகளையும் வகிக்காத வெப்படை ஜி.செல்வராஜ், கட்சிக்காரர்களுக்காக, கட்சிக்காக உயிரையும் கொடுப்பார். தொழிலதிபரான செல்வராஜ், சினிமாவெல்லாம் எடுத்திருக்கிறார்.

வெப்படை செல்வராஜ்

கட்சிக்காரர்களுக்கு எதுவும் பிரச்னை என்றால், உடனே களத்துக்கு வந்துவிடுவார். அல்லது அவரால் வரமுடியாத சூழல் இருந்தால், ஆட்களை அனுப்பி, பிரச்னையை தீர்க்க வைப்பார். இவர் மாவட்டச் செயலாளராக வந்தால், நன்றாக இருக்கும்னு எல்லோரும் நினைச்சோம். கட்சி இப்போ மேற்கு மாவட்டத்துல இருக்கிற இருப்புக்கு, இவர்போல் உண்மையாக களநிலவரம் தெரிஞ்ச, நேரம் காலம் பார்க்காம உழைக்குறவங்க வந்தாதான் நல்லது. ஆனால், வெப்படை செல்வராஜ், பெரிய பதவி கிடைகுற அளவுக்கு ராசியில்லாத ஆள்.

ஏற்கனவே, ஒட்டுமொத்த நாமக்கல் மாவட்டச் செயலாளராக முன்னாள் மத்திய இணை அமைச்சர் காந்திச்செல்வன் இருந்தப்ப, பத்து வருஷத்துக்கு முன்பு அவருக்கு 'செக்' வைக்க நாமக்கல்லை மேற்கு, கிழக்குனு இரண்டாக பிரிச்சாங்க. ஆனா, மேற்கு மாவட்டமும் தன் கன்ட்ரோலில் இருக்க வேண்டும் என்பதற்காக, தனது ஆதரவாளரான கே.எஸ்.மூர்த்தியை மேற்குமாவட்டச் செயலாளர் பதவிக்கு முன்னிறுத்தினார். ஆனால், அப்போது அவரை எதிர்த்து வெப்படை செல்வராஜ் வேட்புமனுத்தாக்கல் பண்ணினார். ஒரே ஒரு வாக்கில் கே.எஸ்.மூர்த்தியிடம் வெப்படை செல்வராஜ் தோற்று, மாவட்டச் செயலாளர் ஆகமுடியாமல் போனார்.

'மதுரா' செந்தில்

தொடர்ந்து, அவருக்கு கடந்த 2011 - ல் குமாரபாளையம் தொகுதியில் கட்சி வாய்ப்பு வழங்கியது. ஆனால், பலர் செய்த உள்ளடி அரசியலால், அவர் தோல்வியைத் தழுவினார். தற்போது, எப்படியும் தனக்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்கும்னு மலைபோல நம்பியிருந்தார். ஆனால், அவருக்கு பழையபடி, பள்ளிப்பாளையம் ஒன்றியச் செயலாளர் பதவி கொடுத்துட்டாங்க. 'நான் ஒரு ராசியில்லாத அரசியல்வாதி'னு எங்கண்ணன் புலம்பிகிட்டு இருக்கிறார். வரும் 30 ம் தேதி மாவட்டச் செயலாளர் பெயரை அறிவிச்சுடுவாங்க. 'மதுரா' செந்தில்தான் மேற்கு மாவட்டச் செயலாளர் என்ற தகவல் வருகிறது" என்றார்கள்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/fgKaw9A

Post a Comment

0 Comments