`மாக்சசே விருது பெறவேண்டாம்' - சி.பி.எம் முன்னாள் அமைச்சர் சைலஜாவை தடுத்தது யார்? | சர்ச்சை

கேரள மாநிலத்தில் பினராய் விஜயனின் முதலாவது ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் கே.கே.சைலஜா டீச்சர். அந்த சமயத்தில் நிபா வைரஸ், அதைத்தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவல் ஆகியவை சுகாதாரத்துறைக்கு பெரும் சவாலாக அமைந்தது. கொரோனா வைரஸ் இந்தியாவில் முதன் முதலாக கேரளாவில் பரவியதால் பரவலை கட்டுப்படுத்த 'பிரேக் தி செயின்' திட்டத்தை அறிமுகப்படுத்தி தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திறம்பட செயல்பட்டதால் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த கே.கே.சைலஜா டீச்சர் மிகவும் பாராட்டப்பட்டார். இரண்டாம் பினராயி விஜயன் ஆட்சியில் புதியவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஏற்கனவே அமைச்சராக இருந்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கவில்லை. இதையடுத்து கேரளா சுகாதாரத்துறை அமைச்சராக வீணா ஜார்ஜ் நியமிக்கப்பட்டார். இப்போது கே.கே. சைலஜா டீச்சர் எம்.எல்.ஏ-வாக மட்டுமே உள்ளார்.

சீதாராம் யெச்சூரி

இந்த நிலையில் கேரளா சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சமயத்தில் நிபா, கொரோனா வைரஸ்களை கட்டுபடுத்தும் விதமாக சிறப்பாக செயல்பட்டதாக கே.கே.சைலஜா டீச்சருக்கு ஆசியாவின் புகழ்பெற்ற விருதான மாக்சசே விருது வழங்க மாக்சசே பவுண்டேசன் தீர்மானித்து அறிவித்த்து. அதே சமயம் `மாக்சசே விருது தனக்கு தேவையில்லை’ என கே.கே.சைலஜா டீச்சர் அந்த பவுண்டேசனுக்கு பதில் அறிவிப்பு கொடுத்துள்ளார்.

இதுபற்றி கூறிய கே.கே.சைலஜா, "மாக்சசே விருதை பெற வேண்டாம் என கட்சி தலைமை கூறியதால் விருதை மறுத்துள்ளேன். சுகாதாரத்துறை அமைச்சர் என்ற நிலையில் சி.பி.எம் கட்சி கொடுத்த கடமையை மட்டுமே செய்தேன். நிபா, கொரோனா பரவலுக்கு எதிரான நடவடிக்கை கேரளா மாநிலத்தின் ஒட்டுமொத்த சுகாதாரத்துறையின் செயல்பாடாகும். எனவே தனிப்பட்ட முறையில் எனக்கு விருது வேண்டாம் என மாக்சசே பவுண்டேசனுக்கு பதிலளித்துள்ளேன்" என கே.கே.சைலஜா தெரிவித்தார்.

கே.கே.சைலஜா

இந்த நிலையில் விருது பெற வேண்டாம் என கட்சி தலைமை கூறவில்லை என்றும், அது கே.கே.சைலஜா எடுத்த முடிவு எனவும் சி.பி.எம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சீதாராம் யெச்சூரி, "சில காரணங்களால் விருது வேண்டாம் என கே.கே.சைலஜாதான் முடிவு செய்தார். சைலஜாவை யாரும் தடுக்கவில்லை. கட்சியில் முடிவு எடுக்கும் மத்தியகுழு உறுப்பினர் அவர். அந்த வகையில் அவர்தான் கட்சி" என்றார்.

கட்சி தலைமை முடிவல் விருது வாங்க மறுத்ததாக மத்திய குழு உறுபினர் கே.கே. சைலஜா கூறிய நிலையில் அதை பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மறுத்துள்ளது சி.பி.எம் கட்சியில் விவாதம் எழுந்துள்ளது.



from Latest News https://ift.tt/kLc46uA

Post a Comment

0 Comments