காரைக்காலைச் சேர்ந்த ராஜேந்திரன் - மாலதி தம்பதியின் இரண்டாவது மகன் பாலமணிகண்டன். நேரு நகரிலுள்ள தனியார்ப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.
பாலமணிகண்டன் படிப்பில் முதல் மாணவனாகவும், விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகளில் ஆர்வமுள்ள துடிப்பான மாணவனாக பள்ளியில் வலம் வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 -ம் தேதி, பள்ளியில் ஆண்டு விழா நடைபெற இருப்பதால் பாலமணிகண்டன் கலைநிகழ்ச்சி ஒத்திகையில் பங்கேற்று, பின்னர் வீடு திரும்பினார். வீட்டில் வாந்தி எடுத்து மயக்கமுற்றார். உடனே பெற்றோர் பதறிபோய், பாலமணிகண்டனைக் காரைக்கால் அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இரண்டு நாள்கள் தொடர் சிகிச்சையிலிருந்த பாலமணிகண்டன் சிகிச்சைப் பலனின்றி நேற்று முந்தினம் இறந்து விட்டார்.
இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் விசாரித்து, பின்னர் அங்குள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆராய்ந்தனர். அப்போது பாலமணிகண்டனுடன், வகுப்பில் படிக்கும் சக மாணவி ஒருவரின் தாய் சகாயராணி விக்டோரியா, வாட்ச்மேன் தேவதாஸ் என்பவரிடம் வெள்ளை நிற பையில் இரண்டு கூல்ட்ரிங்ஸ் பாட்டிலை வைத்து, பாலமணிகண்டனிடம் அவரின் உறவினர் கொடுக்க சொன்னதாகக் கூறி கொடுத்து, விஷம் கலந்த குளிர்பானத்தை குடிக்க வைத்துள்ளார் என்பது தெரியவந்தது.
பாலமணிகண்டனுக்கும், அந்த குறிப்பிட்ட மாணவிக்கும் 'வகுப்பில் முதலிடம் பெறுவது யார்?' என்பதில் போட்டி இருந்ததாகவும், இதனால் பாலமணிகண்டன் மீது அம்மாணவியின் தாய் சகாயராணி விக்டோரியா மோதல் போக்கை கடைப்பிடித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் நடைபெறவிருக்கும் கலை நிகழ்ச்சியில் பாலமணிகண்டன் பங்கேற்க கூடாது என எண்ணிய சகாயராணி விக்டோரியா, உறவினர் என்ற போர்வையில் கூல்டிரிங்ஸில் எலி மருந்தை கலந்து கொடுத்து கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து இறந்த மாணவனின் தாய் மாலதி கொடுத்த புகாரின் பேரில் சகாயராணி விக்டோரியா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் காரைக்கால் அரசு மருத்துவமனையில் பாலமணிகண்டனுக்கு மருத்துவர்கள் சரியான சிகிச்சை அளிக்கவில்லை என மாணவனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மருத்துவமனையின் கண்ணாடி, மேசைகள் மற்றும் குடிநீர் இயந்திரங்களை அடித்து நொறுக்கினர். மேலும் மருத்துவமனையின் அலட்சிய போக்கால்தான் பாலமணிகண்டன் இறந்ததாக உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக சென்னை - நாகை தேசிய நெடுஞ்சாலையில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ``உரிய விசாரணை நடைபெற வேண்டும். குற்றவாளிகளை சரியான முறையில் தண்டிக்கவேண்டும். பள்ளி நிர்வாகத்தை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர வேண்டும்" எனவும் கோரிக்கை வைத்தனர். பின்னர் காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியர் ஆதர்ஷ் தலைமையில் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து உறவினர்கள், பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
இதனையடுத்து பாலமணிகண்டனின் உடற்கூராய்வுக்கு அனுப்பப்பட்டதில் எலி மருந்து கலந்த குளிர்பானம் அருந்தியதால்தான் இறந்தது உறுதியானது. புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரபிரியங்கா மாணவனின் வீட்டிற்குச் சென்று பெற்றோரிடம் ஆறுதல் தெரிவித்தார்.
விஷம் கொடுத்து கொலை செய்ததாக கூறப்படும் சகாயராணி விக்டோரியா மீது கொலை வழக்கு பதிவு செய்து , அவரைக் காரைக்கால் முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். படிப்பில் போட்டியின் காரணமாக மாணவனுக்கு அங்கு படிக்கும் மாணவியின் தாய் விஷம் கொடுத்து கொலை செய்துள்ள சம்பவம் காரைக்காலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
from Latest News https://ift.tt/YirzdQ2
0 Comments