யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறைகளை தனியார்மயமாக்குவதற்கு முடிவெடுத்திருக்கும் மத்திய அரசு, அதற்கான பணிகளைத் துரிதப்படுத்திவருகிறது. புதுச்சேரியில் மின்துறை தனியார்மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த காங்கிரஸ் ஆட்சியில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதையடுத்து புதுச்சேரி மின்துறையில் பணியாற்றும் பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் சங்கத்தினர் ஒருங்கிணைந்து மின்துறை தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழுவை ஏற்படுத்தி, பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றனர். ஆனால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க கூட்டணி அரசு பொறுப்பேற்ற பிறகு மின்துறையை தனியார்மயமாக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அது தொடர்பாக நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, ஊழியர்களின் கருத்துகளையும் கேட்க முடிவு செய்யப்பட்டது.
ஆனால், போராட்டக்குழுவினர் அந்தக் கருத்துக்கேட்பு கூட்டத்தைப் புறக்கணித்தனர். இதற்கிடையே தனியார்மயம் தொடர்பான வரைவு அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. அதையடுத்து பிப்ரவரி மாதம் 1-ம் தேதி முதல் பணிகளைப் புறக்கணித்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர் போராட்டக்குழுவினர். அதேசமயம் போராட்டத்தைத் தடுப்பதற்காக மின்துறையை தொழிலாளர் தாவா சட்டத்தின் கீழ் அத்தியாவசியப் பணிகள் துறையாக அரசு அறிவித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக மின்துறைத் தலைவர் சண்முகம் ஊழியர்களுக்கு வெளியிட்ட எச்சரிக்கை செய்திக்குறிப்பில், ``அனைத்து யூனியன் பிரதேசங்களிலும் உள்ள மின்துறைகளின் செயல்திறன் மற்றும் நுகர்வோர் சேவையை மேம்படுத்த, மத்திய அரசு மின்துறைகளை தனியார்மயமாக்கும் கொள்கை முடிவை எடுத்துள்ளது. மின்துறை ஊழியர்கள் அறிவித்துள்ள போராட்டம், பணி விதிகளுக்கு எதிரானது. எனவே, மின் ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பணி நடத்தை விதிகளின்படி, போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள்மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். வேலை நிறுத்த காலம், பணி இடைமுறிவாகக் கருதப்படும்” என்று குறிப்பிட்டிருந்தார். ஆனாலும் மின்துறை ஊழியர்கள் தனியார்மயத்தைக் கண்டித்து பிப்ரவரி 1-ம் தேதி சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு, கேரளாவில் உள்ள மின்வாரிய தொழிற்சங்க நிர்வாகிகளும் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றிருந்தனர். அதையடுத்து அப்போது அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய முதல்வர் ரங்கசாமி, மின்துறை அமைச்சர் நமச்சிவாயம், மின்துறை ஊழியர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களின் கருத்துகளை கேட்டறிந்து அனைவரும் பாதிக்காத வகையில் அரசு நல்ல முடிவெடுக்கும் என்று உறுதியளித்தனர். அதை ஏற்றுக்கொண்ட போராட்டக்குழுவினர் வேலை நிறுத்தப் போராட்டத்தை அப்போது நிறுத்தினர்.
அதையடுத்து கடந்த மே மாதம் அரசு மின்துறையை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தகவல் வெளியானது. அதையடுத்து தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழுவினர் ஆலோசனை நடத்தினர். அந்த கூட்டத்தில், மீண்டும் போராட்டம் நடத்துவது என முடிவு செய்து, மே 23-ம் தேதி முதல் மீண்டும் போராட்டத்தை தொடங்கினர். அப்போதும் அரசு பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில், மின்துறை தனியார் மயமாக்குவதற்கான டெண்டர் அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதில் முன்மொழிவுக்கான கோரிக்கை செப்டம்பர் 30-ம் தேதி தொடங்கும் என்றும் நவம்பர் 25-ம் தேதி விண்ணப்பிக்க இறுதி நாள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால் மின் ஊழியர்கள் மீண்டும் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினர். புதுவை முழுவதும் மின்துறை அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து வம்பாகீரப்பாளையத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் திரண்டனர்.
அங்கு அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் தலைமை அலுவலகத்தின் நுழைவு வாயில் கதவை மூடினர். மாநிலம் முழுவதும் ஒட்டு மொத்தமாக 2,000-க்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். அதனால் மின் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. மின் கட்டண வசூல் மையங்களும் மூடப்பட்டதால் கட்டணம் செலுத்த முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர். செய்தியாளர்களைச் சந்தித்த புதுவை மின்துறை போராட்டக் குழு தலைவர் அருள்மொழி, பொதுச்செயலாளர் வேல்முருகன், ”நாங்கள் பலகட்ட போராட்டங்கள் நடத்தியும், எங்களை அழைத்து பேசாமல் அரசு தனியார்மயமாக்க டெண்டர் கோரியுள்ளது. இதற்காக நாங்கள் காலவரையற்ற போராட்டத்தினை தொடங்கி உள்ளோம். மின்துறை தனியார்மயமானால் எங்களுக்கு மட்டும் பாதிப்பு இல்லை.
ஒட்டுமொத்த மக்களுக்கும் பாதிப்புதான். முதல்வர் ரங்கசாமி, பொதுமக்களை கலந்து ஆலோசிக்காமல் மின்துறை தனியார் மயமாக்கப்படாது என உறுதி அளித்திருந்தார். ஆனால் பொதுமக்களை கருத்து கேட்கவில்லை. இதுவரை பொதுமக்கள் பாதிக்காத வகையில் தான் நாங்கள் போராட்டம் நடத்தினோம். அதனால் எங்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. நாங்கள் மின்கட்டணத்தையும் வசூல் செய்ய மாட்டோம். எந்த பழுதாக இருந்தாலும் சீரமைக்க மாட்டோம். தனியார்மயமாக்கலை ரத்து செய்யும் வரையில் எங்களது போராட்டம் தொடரும்” என்றனர். அதன் எதிரொலியாக புதுச்சேரி, காரைக்காலில் பல பகுதிகளில் நேற்று மாலை முதல் மின்சாரம் தடை ஏற்பட்டது. போராட்டத்தினால் மின்துறை ஊழியர்கள் மின் தடையை சரி செய்ய வரவில்லை. மின் தடையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நகரிலும், கிராமங்களிலும் பல இடங்களில் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர். உயர் அதிகாரிகள் தரப்போ, அரசையும், முதல்வர், மின்துறை அமைச்சரை தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர். பல மணி நேரம் மின் தடை நீடிப்பதால் புதிய பேருந்து நிலையம் பகுதியில் சாலையின் இருபுறமும் மக்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக புதிய பேருந்து நிலையம், உருளையன்பேட்டை, பெரியார் நகர், சக்தி நகர் உட்பட பத்துக்கும் மேற்பட்ட மக்கள் மின்தடையை கண்டித்து மறியலில் ஈடுபட்டதால் உள்ளூர், வெளியூர் பஸ்கள் புதிய பஸ்நிலையத்துக்கு வரமுடியவில்லை. சுமார் இரண்டு கிலோமீட்டர் அளவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. அதனால் புதுச்சேரி முழுவதும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்து வருகிறது.
"மின் தடையால் இரவில் தூங்க முடியவில்லை. குளிக்கவோ, கழிவறை பயன்படுத்த முடியாமல் அவஸ்தை படுகிறோம். குளிக்காமல் வேலைக்குச் சென்று வருகிறோம்” என்றும், “மின்துறை தனியார்மயமாக்கல் விவகாரத்தால்தான் மின் துறையில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அரசு நிறுவனங்களை விற்கும் பணியை மத்திய அரசு புதுச்சேரியிலும் துவக்கிவிட்டது” என்றும் குமுறுகின்றனர். மின்துறை போராட்டத்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில் அதிகாரிகள் செல்போன் எடுப்பதை தவிர்த்து வருகின்றனர். மின்துறை அமைச்சர் நமச்சிவாயமோ குஜராத்தில் விளையாட்டு போட்டிகள் நிகழ்வில் பங்கேற்கச் சென்றுள்ளார். ஒட்டுமொத்தமாக அரசு எந்திரத்தின் அலட்சியத்தால் இருளில் மூழ்கிக் கிடக்கிறது புதுச்சேரி.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/YeX1Ebw
0 Comments