அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆரைக் கண்டித்து பட்டியலின மக்கள் மறியல்; தடியடி நடத்திய போலீஸ்- என்ன நடந்தது?

குருவிக்காரர்கள், நரிக்குறவர்களை, பழங்குடியினர் பெயரில் குறவர் பட்டியலில் (ST) சேர்க்கும் தமிழக அரசின் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதைக் கண்டித்தும், குஜராத் மாநிலத்தை பூர்விகமாகக் கொண்ட அவர்களை, தமிழ்குடி குறவர் பட்டியலோடு சேர்க்கும் முடிவை கைவிட வலியுறுத்தியும் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள மலையடிப்பட்டியில் வன வேங்கை கட்சியினர் கடந்த ஒரு வாரக்காலமாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்தனர்.

மறியல்

இந்த நிலையில், பட்டியலின மக்களின் போராட்டத்தை அறிந்த தொகுதி தி.மு‌.க எம்.எல்.ஏ தங்கப்பாண்டியன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சந்தித்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வனவேங்கை கட்சி நிர்வாகிகளை அழைத்துச்சென்று, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்திக்கவைத்து கோரிக்கைகளை எடுத்துச்சொல்ல நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். இதன் தொடர்ச்சியாக கடந்த 23-ம் தேதி, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரனை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில்வைத்து வன வேங்கை கட்சித் தலைவர் இரணியன் மற்றும் மாநில நிர்வாகிகள் சந்தித்தனர். அப்போது, அலுவல்ரீதியாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரனைச் சந்திக்க தென்காசி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் தனுஷ்குமாரும் அங்கு வந்திருந்தார்.

அமைச்சருடன்‌ சந்திப்பு

இந்த நிலையில், வனவேங்கை கட்சியினரை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் அழைத்து பேசுகையில், தனுஷ்குமார் எம்.பி-யும் அவர்களுடன் இருந்திருக்கிறார். அப்போது பேசிய அமைச்சர், வன வேங்கை கட்சி நிர்வாகிகளையும், தனுஷ்குமார் எம்.பி-யையும் சாதிய வன்மத்தோடு நிற்கவைத்தே பேசி அவமானப்படுத்தியதாக சமூக வலைதளங்களில் சிலர் போட்டோ, வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். மேலும், மலையடிப்பட்டி வன வேங்கை கட்சியினர், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனைக் கண்டித்து ராஜபாளையத்தில் டிஜிட்டல் பேனர் வைத்துள்ளனர்.

இதை காவல்துறையினர் அகற்றியதாகத் தெரிகிறது. இதனால் கொதிப்படைந்த கட்சியினர் 300-க்கும் மேற்பட்ட பட்டியலின மக்களுடன் திரண்டு இரவில் திடீரென ராஜபாளையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புக்காக ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டு சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.

அப்போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் லேசான தடியடி நடத்தி காவல்துறையினர் போராட்டத்தை கட்டுப்படுத்தினர். இந்தச் சம்பவம் ராஜபாளையத்தில் நேற்று இரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அமைச்சரைக் கண்டித்தும், காவல்துறையினரின் அத்துமீறலை கண்டித்தும் தேனி, திண்டுக்கல், சிவகங்கை, திருப்பூர், கோயம்புத்தூர், சென்னை உள்ளிட்ட நகரங்களிலும் வன வேங்கை கட்சியைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



from Latest News https://ift.tt/FlwvDY3

Post a Comment

0 Comments