திடீரென திறக்கப்பட்ட தண்ணீர்; செங்கல் சூளைகளை சூழ்ந்த வெள்ளம்: பொதுப்பணித்துறை அலட்சியமா?

வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வைகைஅணை நிரம்பி உபரி தண்ணீர் திண்டுக்கல்,தேனி, சிவகங்கை, மதுரை, மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு திறந்து விடப்பட்டது.

இவ்வாறு திறந்து விடப்பட்ட தண்ணீர் ராமநாதபுரம் மாவட்டத்தை கடந்த வாரம் வந்தடைந்தது. இதனால் 7அடி கொள்ளளவு கொண்ட ராமநாதபுரம் பெரிய கண்மாய் நிரம்பியுள்ளது. இதையடுத்து பெரிய கண்மாயிலிருந்து சக்கரக்கோட்டை கண்மாய், களரி கண்மாய் உட்பட பல்வேறு கண்மாய்களுக்கு தண்ணீர் பொதுப்பணித்துறை அதிகாரிகளால் திறந்து விடப்பட்டுள்ளது.

குடிசை வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளநீர்

இந்த நிலையில் திடீரென நள்ளிரவில் கூடுதலாக எந்த முன்னறிவிப்பின்றி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ராமநாதபுரத்தை அடுத்த புல்லங்குடி பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளை வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் செங்கல் சூளைகளில் பணிபுரிந்த தொழிலாளர்கள் கழுத்தளவு தண்ணீரில் கடும் சிரமத்துடன் செங்கல் சூளையை விட்டு வெளியேறினர். செங்கல் சூளை பணியாளர்களுக்காக அமைக்கப்பட்டு இருந்த குடிசைகளையும் தண்ணீர் சூழ்ந்ததால், குடிசையில் இருந்த பொருட்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.

திடீரென கூடுதலாக திறந்து விடப்பட்ட தண்ணீரால் செங்கல் சூளைகளில் வெள்ள நீர் புகுந்ததால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். செங்கல் சூளைகளிலும் பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக செங்கல் சூளை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கழுத்தளவு தண்ணீரில் நடந்து வரும் தொழிலாளர்கள்

ராமநாதபுரம் என்றாலே வறட்சி என்ற மாயத் தோற்றத்தை உண்டாக்கி விட்டனர். ஆனால் அப்படி கிடையாது. இங்கு மன்னர்கள் காலத்தில் ஆயிரக்கணக்கான கால்வாய்களும், கண்மாய்களும் வெட்டப்பட்டுள்ளன. அதனை காலப்போக்கில் ஆக்கிரமித்து காணாமல் ஆக்கிவிட்டனர். அதன் காரணமாகவே தண்ணீரை தேக்கி வைக்க வழிஇன்றி வைகை அணையில் இருந்து கிடைக்கும் தண்ணீரை கூட சேமிக்க முடியாமல் கடலில் கலக்கும் அவலம் தொடர்ந்து வருகிறது.

எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் வரத்து கால்வாய்கள், கண்மாய்களை தூர்வாரி, வைகை அணையிலிருந்து கிடைக்கும் தண்ணீரையாவது முறையாக சேமித்து வைத்தால் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தண்ணீர் பஞ்சமே இருக்காது என விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



from Latest News https://ift.tt/qROncm0

Post a Comment

0 Comments