Doctor Vikatan: என் வயது 67. அடிக்கடி உடல்நலமின்றி படுத்து விடுகிறேன். என்னைப் பரிசோதிக்கும் மருத்துவர் உடலில் நீர்ச்சத்து குறைந்திருப்பதாகவும் நுரையீரலில் சளி சேர்ந்திருப்பதாகவும் சொல்லி மருந்துகள் தருகிறார். சில நாள்களில் மீண்டும் அதே பிரச்னை வருகிறது. இது ஏன்? தவிர்க்க முடியுமா?
பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் சஃபி
நீர்ச்சத்துக் குறைபாடு என்பது சிறு குழந்தைகளையும் வயது முதிர்ந்தவர்களையும் பாதிக்கும். நம் உடலில் `இன்ட்ரா செல்லுலார் ஃப்ளூயிட்ஸ்', `எக்ஸ்ட்ரா செல்லுலார் ஃப்ளூயிட்ஸ்' என முக்கியமான இரண்டு இருக்கும்.
அதாவது செல்களுக்கு உள்ளே இருக்கக்கூடிய நீர்ச்சத்து மற்றும் செல்களுக்கு வெளியே இருக்கக்கூடிய நீர்ச்சத்து ஆகியவற்றைக் குறிப்பவை இவை. இவற்றில் மிக முக்கியமானது `இன்ட்ரா செல்லுலார் ஃப்ளூயிட்ஸ்'.
உடலில் நீர்ச்சத்து குறையும்போது அனைத்து உறுப்புகளிலும் அதன் தாக்கம் ஏற்படும். மிக முக்கியமாக மூளை, இதயம் மற்றும் சிறுநீரகங்களில் அந்தத் தாக்கம் பெரிதாகத் தெரியும்.
முதியோருக்கு நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்படக் காரணம் அவர்கள் பருகும் தண்ணீரின் அளவு மற்றும் அவர்கள் வெளியேற்றும் சிறுநீரின் அளவு. இந்த இரண்டும் சமமாக இருக்க வேண்டும். சர்க்கரைநோயாளிகளாக இருப்போருக்கு இந்தச் சமன்பாடு குறையும்போது நீர்ச்சத்துக் குறைபாடு பாதிக்கலாம்.
அடுத்து நம் உடலில் உள்ள சோடியம், பொட்டாசியம், பை கார்பனேட் உள்ளிட்ட உப்புகளின் அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள் இன்னொரு காரணம். நம் உடலின் வளர்சிதை மாற்றத்துக்கு இந்த உப்புகள் சீரான அளவில் இருக்க வேண்டும். இந்த உப்புகளின் சமநிலை மாறும்போது நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்படுகிறது.
வயதானவர்களுக்கு நுரையீரலின் சுருங்கி, விரியும் தன்மை குறையலாம். குறிப்பாக புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கும், நாள்பட்ட ஆஸ்துமா, நுரையீரல் அழற்சி பாதிப்புகள் உள்ளவர்களுக்கு இந்தப் பிரச்னை வரக்கூடும்.
60 வயதுக்கு மேலானவர்கள் இந்தப் பிரச்னை வராமல் தடுக்கும் தடுப்பூசிகளை மருத்துவரிடம் கேட்டுப் போட்டுக் கொள்ளலாம். அது தற்காப்பாகச் செயல்படும். தூசு, புகை போன்றவை உள்ள இடங்களுக்குச் செல்லாமலிருப்பது பாதுகாப்பானது.
கொரோனா காலத்தில் பழகியபடி மாஸ்க் அணிந்து கொள்வது மிகவும் நல்லது. ஏசி செய்யப்பட்ட இடத்தில் இருப்பது, ஏசி வசதியுள்ள வாகனங்களில் பயணிப்பது போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.
வயதானவர்களுக்கென்றே பிரத்யேக மருத்துவர்கள் இருக்கிறார்கள். அவர்களை அடிக்கடி சந்தித்து ஆலோசனை பெறுவதன் மூலம் முதுமை தொடர்பான பாதிப்புகளிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
from Latest News https://ift.tt/pOnxW0c
0 Comments