நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே உள்ள மின்னாம்பள்ளி கொண்டப்பநாயக்கனூரைச் சேர்ந்தவர் சரவணன். இவர், நாமக்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் உதவியாளராகப் பணியாற்றி வந்தார். இவரின் மனைவி கீதா (22). இவர்களுக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இத்தம்பதியின் மகன் ரித்வின் யாதவ் (3).
கொரோனா நோய் சரவணனை பாதிக்க, கடந்த ஆண்டு சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், கீதா மனவேதனையில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. கணவர் வீட்டிலேயே இருந்து வந்தால், மனவேதனை இன்னும் அதிகரிக்கும் என்பதால், கீதா வளையப்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். வீட்டிலேயே இருப்பதால் கணவர் நினைப்பு அதிகமாக உள்ளதாகச் சொன்னதால், பெற்றோர் அவரை கல்வியியல் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சியில் சேர்த்து படிக்க வைத்துள்ளனர்.
இருந்தாலும், `என் கணவரை என்னால் மறக்கமுடியவில்லை. அவர் போன இடத்துக்கே போகபோகிறேன்' என்று சொல்லி வந்திருக்கிறார் கீதா. அவரின் பெற்றோரும், உறவினர்களும் கீதாவிடம் ஆறுதலாகப் பேசி, அவரது மனத்துயரத்தை குறைத்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கொண்டப்பநாயக்கனூருக்கு மகனுடன் சென்ற கீதா, அங்குள்ள விவசாய கிணற்றில் மகனை தூக்கிவீசி கொன்று விட்டு, தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
அந்த வழியாகச் சென்றவர்கள் இதனை பார்த்து, உடனடியாக சேந்தமங்கலம் காவல் நிலைய போலீஸார் மற்றும் நாமக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கிணற்றில் இறங்கினர். ஆனால் தாய், மகன் ஆகியோரை இறந்த நிலையில்தான் மீட்க முடிந்தது.
போலீஸார், இருவரின் உடல்களையும் கைப்பற்றி, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கொண்டப்பநாயக்கனூரில் பட்டாளம்மன் கோயில் பண்டிகை நடந்துள்ளது. இதனால் கீதாவின் மாமனார் ரங்கசாமி, வளையப்பட்டிக்கு சென்று மருமகள் கீதா, பேரனை கொண்டப்ப நாயக்கனூருக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது கீதா, கணவரின் நினைவில் வேதனையுடன் இருந்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து கீதா, தன் மகன் ரித்விக் யாதவை தூக்கிக் கொண்டு அண்ணா நகர் பகுதியில் உள்ள விவசாய கிணற்றுக்குச் சென்று, விபரீத முடிவை எடுத்துள்ளார். இச்சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒருவருக்குத் தன் உயிரை மாய்த்து தற்கொலை செய்து கொள்ளவே உரிமையில்லாத சூழலில், கீதா மூன்று வயதே ஆன தன் குழந்தையின் உயிரையும் சேர்த்து எடுத்துக்கொண்டது ஏற்றுக்கொள்ள முடியாதது. இழப்புகளும் துயரங்களும் பூமிக்கு புதிதல்ல. அனைத்தில் இருந்தும் மீண்டு வருவதே வாழ்க்கை. தற்கொலை எதற்குமே தீர்வல்ல!
தற்கொலைக்கு எதிரான இலவச ஆலோசனை மையங்கள்:
தற்கொலைத் தடுப்பு மையம் - 104
சிநேகா தற்கொலைத் தடுப்பு மையம் - 044 - 24640050, 28352345.
பெண்களுக்கான தீர்வு மையம் - 1091
from மாவட்ட செய்திகள் https://ift.tt/XYNZo3d
0 Comments