``என்.எல்.சி இனி தமிழ்நாட்டுக்கு தேவையில்லை” - ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி ராமதாஸ்

``கடலூர் மாவட்டத்தையும், அம்மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தையும் சீரழித்து வரும் என்.எல்.சி நிறுவனம் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும்” என்று வலியுறுத்தி நெய்வேலியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பா.ம.கவின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவித்திருந்தார். அதன்படி நேற்று காலை நெய்வேலி ஆர்ச் கேட் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அன்புமணி ராமதாஸ், "என்.எல்.சி நிறுவனம் 1956-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஒரு நிறுவனம் தொடங்கப்பட்டால் அதனால் ஏற்படும் வளர்ச்சி அப்பகுதி மக்களுக்கு பயன்பட வேண்டும். ஆனால் சுமார் 44 கிராம மக்களின் வாழ்வாதாரத்தை பறித்து, அவர்களின் வீடு மற்றும் நிலங்கள் கையகப்படுத்தி துவங்கப்பட்டதுதான் என்.எல்.சி நிறுவனம்.

ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி ராமதாஸ்

கடந்த 66 ஆண்டுகளாக என்.எல்.சி நிறுவனத்திற்கு வீட்டையும், நிலத்தையும் கொடுத்தவர்களுக்கு வேலைவாய்ப்பும், இழப்பீட்டுத் தொகையும் வழங்காமல் இன்று வரை அம்மக்களை அகதிகளாக வைத்திருக்கிறது இந்நிறுவனம். மேலும் இந்த மாவட்டத்தையே பாலைவனமாக மாற்றி வருகிறது. எனவே தமிழ்நாட்டு மக்களுக்கும், விவசாயிகளுக்கும் எதிராக செயல்படும் என்.எல்.சி நிர்வாகம் எங்களுக்கு தேவையில்லை. வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு நிரந்தர வேலையை வழங்காமல், ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலை வழங்கி குறைந்த ஊதியம் மட்டுமே வழங்கி வருகின்றனர். வீடு நிலம் கொடுத்த பொதுமக்களும், விவசாயிகளும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பிச்சை எடுக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் என்.எல்.சி பொறியாளர்களாக தேர்வு செய்யப்பட்ட 299 பேரில் ஒருவர் கூட தமிழர்கள் இல்லை. எனவே தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் எதிராக செயல்படும் என்.எல்.சி நிர்வாகம் எங்களுக்கு தேவையில்லை. என்.எல்.சி நிர்வாகத்திற்கு பூட்டு போடும் போராட்டத்தை விரைவில் நடத்துவோம். ராணுவத்தை கூட்டி வந்தாலும் எதிர்த்து நின்று எங்களது பணியை செய்வோம்” என்றார்.

அதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி, “கடந்த 66 ஆண்டுகாலமாக கடலூர் மாவட்ட மக்களை ஏமாற்றி பழுப்பு நிலக்கரியை எடுத்து வரும் என்.எல்.சி நிறுவனம், நிலத்தடி நீரை உறிஞ்சி மாவட்டத்தையே பாலவனமாக்கி வருகிறது. 40 ஆண்டுகளுக்கு முன்பு 8 அடி ஆழத்தில் இருந்த நிலத்தடி நீர், தற்போது 1,000 அடிக்கும் கீழே சென்றுவிட்டது. அதற்கு காரணம் என்.எல்.சிதான். ராட்சத பம்புகள் மூலம் நிலத்தடி நீரை உறிஞ்சி கடலுக்கு அனுப்பி வருகிறது என்.எல்.சி நிர்வாகம்.

66 ஆண்டுகளுக்கு முன்பு என்.எல்.சி தொடங்குவதற்காக நிலங்களை கொடுத்தவர்களுக்கு தற்போதுவரை வேலையும் இல்லை, வாழ்வாதாரமும் இல்லை. ஆனால் இன்னும் 27,000 ஏக்கர் நிலங்களை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துடன் பேசி வருகிறது என்.எல்.சி. இந்த நிறுவனத்தில் தமிழ்நாடு அரசுக்கு 4% பங்குகள் இருக்கின்றன. அப்படி இருந்தும் இந்த மக்களின் உரிமையை பாதுகாக்க தவறிவிட்டது அரசு. 39,000 ஏக்கர் நிலங்களை கொடுத்தவர்களுக்கே என்.எல்.சி நிர்வாகம் இன்னும் வேலை வழங்கவில்லை. மக்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைத்துவரும் என்.எல்.சி நிர்வாகம் இனி தமிழ்நாட்டுக்கு தேவையில்லை. என்.எல்.சி நிறுவனத்தை இழுத்து மூட வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. என்.எல்.சி நிறுவனத்திற்கு விரைவில் பூட்டு போடுவோம். இது வெறும் அடையாளப் போராட்டம்தான். விரைவில் மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்” என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/WyJLBp7

Post a Comment

0 Comments