தைவானில் உள்ள நர்சிங் ஹோம் ஒன்றில், வயதான நோயாளிகள் முன்பு ஆடைகளைக் களைந்தபடி பெண்ணை நடனமாடச் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, நர்சிங் ஹோம் நிர்வாகம் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது.
தைவானில், அரசு சார்பில் நடத்தபப்டும் தயோயுவான் என்ற நர்சிங் ஹோம் உள்ளது. இது, ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகளுக்காக உருவாக்கப்பட்டது. இந்த இல்லத்தில், இலையுதிர்காலத்தைக் கொண்டாடுவதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்நிகழ்ச்சியில், வயதான நோயாளிகளை மகிழ்விக்க, நர்சிங் ஹோம் நிர்வாகம் தரப்பில் வித்தியாசமான ஏற்பாடு ஒன்றைச் செய்தனர். அதுவே, கடைசியில் அவர்களுக்கு வில்லங்கத்தை உண்டாக்கிவிட்டது. அதாவது, நர்சிங் ஹோம் நோயாளிகளை உற்சாகப்படுத்தும் வகையில், பெண் ஒருவரின் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதிலென்ன பிரச்னை என்கிறீர்களா?

நீங்கள் நினைப்பது போல் வெறுமனே டான்ஸ் நிகழ்ச்சியல்ல இது; அரைகுறை ஆடையுடன் தோன்றிய இளம்பெண், பாடியவாறே தனது உடையை கொஞ்சம் கொஞ்சமாகக் களைய வேண்டும். இந்த ஏற்பாட்டின்படி, கடந்த 7-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் நடன மங்கை ஒருவர் தனது உடலை நெளித்து வளைத்து நடனமாடியவாறே சர்க்கர நாற்காலியில் அமர்ந்துள்ள முதியவர்களைத் தொடுவதும், உரசுவதுமாக இருக்க, சில முதியவர்கள் இதை கைத்தட்டி ரசித்தனர். மற்றவர்களோ கூனிக்குறுகி அமர்ந்திருந்தனர். இது படம் பிடிக்கப்பட்டு, ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
இந்தக் காட்சிகள் சமூகவலைதளங்களில் டிரெண்ட் ஆக, நெட்டிசன்கள் பலரும், இந்தச் சம்பவத்துக்கு தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்தனர்.
இது முட்டாள்தனமானது மற்றும் அபத்தமானது என்றும், வயதானவர்களை கண்ணியமாக நடத்த வேண்டாமா என்றும் கருத்துகளைப் பகிர்ந்தனர். முதியோர்களை மகிழ்விக்க வேண்டியதுதான்; அதற்காக இப்படியா என்று பலரும் வசைபாடினார்.

இதையடுத்து, நர்சிங் ஹோம் நிர்வாகம் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது. இது குறித்து, அதன் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இந்த நிகழ்ச்சியின் நோக்கம், வயதானவர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே; அதேநேரம், இது உங்கள் மனதைப் புண்படுத்தி இருந்தால், அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். வருங்காலத்தில் நிகழ்ச்சி நடத்தும்போது மிகுந்த கவனமுடன் இருப்போம்” என்றார்.
கொரோனா தொற்றுப் பரவலால் கடந்த இரண்டு ஆண்டுகளாக, தயோயுவான் நர்சிங் ஹோம் பராமரிப்பு இல்லத்தில் எந்தக் கொண்டாட்டங்களும் நடைபெறாத நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புடன் நடந்த நிகழ்ச்சி சர்ச்சையில் சிக்கியது, ஏற்பாட்டாளர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்துள்ளது.
from Latest News https://ift.tt/vKslOup
0 Comments