தொடர் கனமழை... தண்ணீர் தேசமான பெங்களூரு..! - யார் காரணம்?!

கர்நாடகாவில் ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. அந்த மாதத்தில் மழை பொழிவு பெரியதாக இல்லாவிட்டாலும் ஜூலை மாதம் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. பின்னர் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. அதேபோல் கடந்த ஆகஸ்ட் மாதமும் மழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக மாநிலத்தில் அணைகள், ஏரி, குளங்கள் உள்பட நீர் நிலைகள் நிரம்பின.

கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் தேங்கியது. இதனால், ஐடி நிறுவனங்களுக்கு வரவேண்டிய ஊழியர்கள் பணிக்கு வர முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஊழியர்கள் பணிக்கு வராததால் ரூ.250 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாகவும், வெள்ளம் ஏற்படுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தங்கள் நிறுவனங்களை வேறு இடத்திற்கு மாற்றுவதை தவிர வேறு வழியில்லை என்றும் கூறுகிறார்கள்.

வெள்ளம் சூழந்த சாலைகள்

இந்தச்சூழலில், கடந்த 4-ம் தேதி இரவு மீண்டும் கனமழை கொட்டித்தீர்த்தது. அன்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பலத்த இடி-மின்னலுடன் மழை பெய்தது. ராமநகரில் பெய்த கனமழையால் 5-க்கும் மேற்பட்ட ஏரிகள் உடைந்து நகருக்குள் வெள்ளம் புகுந்தது. குடியிருப்புகள் நீரில் மூழ்கி வாகனங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் 6 அடிக்கும் மேல் மழைநீர் தேங்கியதால், பஸ்கள், கார்கள், லாரிகள் நீரில் மூழ்கின. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

பெரும்பாலான பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மகாதேவபுரா, பொம்மனஹள்ளியில் கனமழை வெளுத்து வாங்கியது. அன்றை தினம் 130 மில்லி மீட்டர் மழைப் பதிவாகியது. பொதுவாகப் பெங்களூருவில் ஒரு பகுதியில் மழை பெய்தால், மற்றொரு பகுதியில் மழை இருக்காது என்ற நிலை தான் ஏற்பட்டுள்ளது.

குடியிருப்புகளுக்குள் சூழ்ந்த வெள்ளம்

ஆனால், இந்த முறை அனைத்துப் பகுதிகளும் தண்ணீரில் மிதக்கிறது. பல இடங்களில் மழைநீருடன் சாக்கடை நீரும் சேர்ந்து அடுக்குமாடி கட்டிடங்களைச் சூழ்ந்தது. 75 ஆண்டுகளில் இல்லாத அளவு பெங்களூரில் மழை பெய்துள்ளது. சர்ஜாப்புரா சாலையில் உள்ள ரெயின்போ லே-அவுட்டில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மிதந்தது. வீடுகளில் சிக்கியுள்ள குடியிருப்பு வாசிகள் ரப்பர் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகிறார்கள். பல இடங்களில் ஜே.சி.பி இயந்திரங்கள் உதவியுடன் மக்கள் வேலைக்குச் சென்று வருகிறார்கள். எப்போது இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு நடந்த மழைவெள்ள பாதிப்புக்கு யார் காரணம் என்ற கேள்வி எழுந்தது. தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளைக் கட்டியதன் விளைவாகத்தான் பெங்களூரு தண்ணீரில் மூழ்கியுள்ளதாக ஆளும் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை

இதுகுறித்து, பெங்களூருவில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்த முதல்வர் பசவராஜ் பொம்மை, ``கர்நாடகத்தில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் ஏரி, குளங்கள், நீர் நிலைகள் மற்றும் அவற்றின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் கட்டடங்களைக் கட்ட அனுமதியளிக்கப்பட்டது. பெங்களூருவில் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்புக்குக் காங்கிரஸ் கட்சியே காரணம். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ஏரிகளை நிர்வகிக்கும் பணியை சவாலாக ஏற்று மேற்கொண்டு வருகிறோம். பெங்களூருவில் கடந்த 90 ஆண்டுகளில் இத்தகைய மழை பெய்யவில்லை. அனைத்து ஏரிகளும் நிரம்பியுள்ளன. சில ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகின்றது. மழையால் ஒட்டுமொத்த பெங்களூருவும் பாதிக்கப்பட்டுள்ளது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். அது தவறு. மகாதேவபுரா, சர்ஜாப்புரா பகுதிகள் தான் கனமழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. மகாதேவபுராவில் மட்டும் 69 ஏரிகள் உள்ளன. அந்த பகுதிகளில் இயல்பு நிலை திரும்ப அரசு நடவடிக்கை எடுத்துள்ளது" என்றார்.

இதேபோல், கடந்த ஆண்டு ஜூன் மாதம் பெங்களூரு மாவட்ட நிர்வாகம் சார்பில், நீராதாரங்களை மேம்படுத்தும் நடவடிக்கையாக ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது குறித்து முதற்கட்ட ஆய்வு நடந்தது. அப்போது, 837 ஏரிகளின் பரப்பளவு 22 ஆயிரத்து 810 ஏக்கர் எனக் கணக்கிடப்பட்டது. இதில், 4,500 ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. எனவே, நீர் நிலைகளை ஆக்கிரமித்து வீடுகள் கட்டயதும், அதை அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியதும் தான் பெங்களூருவின் இந்த நிலைக்குக் காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நீர் நிலைகளை மீட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றினாலே மழைவெள்ளம் தேங்காது என்கின்றனர்.



from Latest News https://ift.tt/tv3Znzh

Post a Comment

0 Comments