சென்னை: ரௌடிகளுக்குள் நடக்கும் வார்... மதுரை பாலாவை கொல்ல சிறையிலிருந்தே ஸ்கெட்ச்?!

சென்னை பல்லாவரம், தென்னேரி பகுதியைச் சேர்ந்தவர் மதுரை பாலா என்கிற பாலமுருகன். பிரபல ரௌடியான இவர்மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரின் சொந்த ஊர் மதுரை. பிழைப்புத் தேடி பாலாவின் குடும்பம், சென்னைக்கு வந்தது. இந்தநிலையில், பாலா, அரும்பாக்கத்தில் உள்ள பிரபல ரௌடி ஒருவரின் வலதுகரமாக மாறினான். அதனால் பாலாவின் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவாகின. இந்தநிலையில் சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் கடைக்காரர் ஒருவரை அரிவாளால் வெட்டி மாமூல் கேட்ட புகாரில் மதுரை பாலா கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். புழல் சிறையிலிருந்து பாதுகாப்பு உள்ளிட்ட சில காரணங்களுக்காக அவர் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.

அருண்

இதற்கிடையில் கடந்த 4.3.2021-ம் தேதி சென்னை அசோக்நகரில் மயிலாப்பூரைச் சேர்ந்த பிரபல ரௌடி சிவக்குமாரைக் கொலை செய்யப்பட்ட வழக்கிலும் மதுரை பாலா கைது செய்யப்பட்டார். அந்த வழக்கு விசாரணைக்காக வேலூர் சிறையிலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்துக்கு 5.9.2022-ம் தேதி மதுரை பாலா அழைத்து வரப்பட்டார். அன்றையதினம் மதியம் 3 மணியளவில் சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் மதுரை பாலாவும் அவரை அழைத்து வந்த ஆயுதப்படை போலீஸாரும் நின்றுக் கொண்டிருந்தனர்.

அப்போது நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைந்த 5 பேர் கொண்ட கும்பல் மதுரை பாலா, அவரின் பாதுகாப்புக்காக வந்திருந்த போலீஸார் மீது பெப்பர் ஸ்பீரே அடித்தனர். அதனால் போலீஸார் நிலைகுலைந்த சமயத்தில் கத்தியை எடுத்து மதுரை பாலாவை அந்தக் கும்பல் தாக்க முயன்றது. அதை பாதுகாப்பு பணியிலிருந்த பெண் காவலர் பாரதி தடுத்தார். இதில் அவரின் கையில் வெட்டு விழுந்தது. இதையடுத்து சக போலீஸார், மதுரை பாலாவை காப்பாற்றியதோடு அவரைக் கொலை செய்ய முயன்ற மூன்று பேரை மடக்கிப் பிடித்தனர். இந்தத் தகவல் கோட்டூரபுரம் காவல் நிலையத்துக்கு தெரியவந்ததும் மூன்று பேரை போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அப்துல் மாலிக்

விசாரணையில் அவர்களின் பெயர் சென்னை ஷெனாய்நகரைச் சேர்ந்த சக்திவேல், அருள்பிரசாத், குன்றத்தூரைச் சேர்ந்த அப்துல் மாலிக் என தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து கத்திகள், பெப்பர் ஸ்பீரே ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். மூன்று பேரிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து கோட்டூர்புரம் போலீஸார் கூறுகையில், ``மதுரை பாலாவின் தலைவனான அரும்பாக்கத்தைச் சேர்ந்த பிரபல ரௌடி ஒருவருக்கும் அவரின் டி.பி சத்திரத்தைச் சேர்ந்த எதிரணியினருக்கும் நீண்ட காலமாக முன்விரோதம் இருந்து வருகிறது. இந்தநிலையில் மதுரை பாலா தலைமையில் ஒரு புதிய டீம் உருவானது. அதற்கு அரும்பாக்கத்தைச் சேர்ந்த ரௌடியுடன் இருந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் அவர்கள் டி.பி.சத்திரத்தைச் சேர்ந்த எதிரணியினருடன் கூட்டணி அமைத்தனர்.

இந்த ரகசிய தகவல் சிறையிலிருக்கும் மதுரை பாலாவுக்கு தெரியவந்தது. உடனடியாக அவர், தன்னுடைய கூட்டாளிகள் மூலம் தனக்கு எதிராக செயல்படுவோரைத் தீர்த்துக் கட்ட திட்டமிட்டார். இந்தத் தகவல் மதுரை பாலாவின் எதிரணியினருக்கு தெரியவந்தது. அதனால் அவர்களும் மதுரை பாலாவை போட்டுத் தள்ள நேரம் பார்த்துக் கொண்டிருந்தனர். ரௌடி சிவக்குமார் கொலை வழக்கு விசாரணைக்காக மதுரை பாலா சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்கு வரும் தகவல் தெரிந்ததும் அங்கு வைத்து அவரைக் கொலை செய்ய எதிரணியினர் திட்டம் போட்டனர். அதன்படி நீதிமன்ற வளாகத்தில் அவர்கள் காத்திருந்தனர்.

மதுரை பாலா

நீதிமன்றத்துக்கு வந்த மதுரை பாலாவை சுற்றி போலீஸார் இருந்ததால் அவரை தனியாக அழைத்து கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்ததும் பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸார் மீது பெப்பர் ஸ்பீரேவை அடித்துவிட்டு மதுரை பாலாவைக் கொலை செய்ய முயன்றனர். ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்துள்ளது. மதுரை பாலாவைக் கொலை செய்ய முயன்ற வழக்கில் மூன்று பேரைக் கைது செய்துள்ளோம். முக்கிய குற்றவாளியான இரண்டு பேரைத் தேடிவருகிறோம்.

ஆரம்பத்தில் மதுரைபாலாவும் தலைமறைவாக இருக்கும் இரண்டு பேரும் நட்பாகத்தான் இருந்துள்ளனர். மதுரை பாலாவுக்கு அடுத்து யார் என்ற போட்டியில்தான் மதுரை பாலா தன்னுடைய வலதுகரமாக ஒருவரை வளர்த்து விடுகிறார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் தனியாக ஒரு டீமாக மாறி, மதுரை பாலாவுக்கு எதிரான வேலைகளைச் செய்துக் கொண்டிருக்கிறார்கள். மதுரை பாலாவின் வலதுகரமாக இருப்பவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும் இன்னொருவர் வெளியில் இருக்கிறார். அவர் மூலம் இன்னொரு சம்பவம் நடக்க வாய்ப்புள்ளதாக உளவுத்துறை மூலம் எங்களுக்கு தகவல் வந்துள்ளது. அதனால் அனைத்து பாதுகாப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்" என்றனர்.



from Latest News https://ift.tt/6vKR89n

Post a Comment

0 Comments