Doctor Vikatan: கொலாஜென் சப்ளிமென்ட் எடுத்துக்கொள்வதன் மூலம் சருமத்தை இளமையாக வைத்திருக்க முடியுமா? அது ஆன்டிஏஜிங் தன்மையைக் கொடுக்குமா? யாரெல்லாம் பயன்படுத்தலாம்?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா
எலும்புக்கூடானது நம் உடலுக்கு எப்படி ஒரு வடிவத்தைக் கொடுக்கிறதோ, அதே போன்றதுதான் சருமத்துக்கு கொலாஜென். சருமம் உறுதியாக, மிருதுவாக, எலாஸ்டிக் தன்மையோடு இருக்க கொலாஜென் மற்றும் எலாஸ்டின் ஆகிய இரண்டும் மிக அவசியம்.
வயதாக, ஆக சருமத்தில் சுருக்கங்கள் வரவும், சருமம் தொய்வடையவும் காரணம், கொலாஜென் குறைவதுதான். அது குறையும்போது சருமம் அதன் உறுதித்தன்மையை இழக்கத் தொடங்குகிறது. வயதாகும்போது எப்படி நமக்கு கூன் விழுகிறதோ, அப்படித்தான் கொலாஜென் குறையும்போது சருமத்தில் மாற்றங்கள் நிகழ்கின்றன. கொலாஜென் சப்ளிமென்ட் எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. அது மிகச் சிறந்த ஆன்டிஏஜிங் தன்மை கொண்டது.
நம்முடைய உணவுகளில் இருந்தே கொலாஜென் கிடைத்தால் மிகவும் சிறந்தது. மீன்கள், எலும்பு வேகவைத்த நீர் போன்றவற்றில் இயற்கையாகவே கொலாஜென் இருப்பதால் அவற்றை எடுத்துக் கொள்ளலாம். அப்படி முடியாதவர்கள் சப்ளிமென்ட்டாகவும் எடுத்துக்கொள்ளலாம்.
கொலாஜென் பவுடர்கள் சாஷே வடிவில் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனையோடு அவற்றை தினமும் சப்ளிமென்ட்டாக எடுத்துக் கொள்ளலாம். அது மட்டுமன்றி, புரதச்சத்தும் நார்ச்சத்தும் அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது, அவை கொலாஜென் அதிகரிக்க உதவும்.
மைக்ரோநீடிலிங் என்றொரு சிகிச்சையின் மூலம் செயற்கையாகவும் கொலாஜெனை அதிகரிக்கச் செய்யலாம். சருமம் முதுமையடைவதைத் தள்ளிப்போடுவதில் ரெட்டினாலுக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. ரெட்டினால் கலந்த க்ரீம்கள், கொலாஜெனை அதிகப்படுத்தக்கூடியவை.
இந்த க்ரீம்களை 20-களின் இறுதியிலிருந்தே உபயோகிக்கத் தொடங்கலாம். க்ளென்சர், மாயிஸ்ச்சரைசர், சன் ஸ்கிரீன் உள்ளிட்டவை சருமப் பராமரிப்புக்கு அடிப்படையானவை என்பதால் அவற்றை எப்போதும் பயன்படுத்த வேண்டும். வருமுன் தடுப்பதுதான் சருமப் பராமரிப்பிலும் சரி.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
from Latest News https://ift.tt/ermoPfi
0 Comments