என்.எம்.சி மெம்பர் பதவிக்காக ரூ.70 லட்சத்தை இழந்த டாக்டர் - போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி சிக்கிய பின்னணி!

சென்னை ஈக்காட்டுத்தாங்கல், 2-வது அவென்யூ, டிபன்ஸ் காலனியில் குடியிருந்து வருபவர் டாக்டர் செல்வக்குமார். இவர் கடந்த 12.8.2022-ம் தேதி எஸ்.ஆர்.எம்.சி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, ``நான் எம்.பி.பி.எஸ் எம்.சி.ஹெச் நியூரோ படித்துவிட்டு சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 30 ஆண்டுகளாக மூளை மற்றும் நரம்பியல் துறையில் பேராசிரியராக வேலைப்பார்த்து வருகிறேன். எனது நண்பர்களான ஆல்வார், ராஜேஷ் ஆகிய இருவரையும் எனக்கு பல ஆண்டுகளாகத் தெரியும். கோவையில் உள்ள என்டனுடைய இடத்தை விற்பதற்கு நண்பர் ராஜேஷ் மிகவும் உதவியாக இருந்தார்.

மோசடி

இந்தநிலையில் என்னுடைய நண்பர்கள் ஆல்வார், ராஜேஷ் ஆகிய இருவரும் என்னிடம் டெல்லியில் உள்ள நேஷனல் மெடிக்கல் கமிஷனில் (National Medical Commission) மெம்பர் பதவிக்கான அனைத்து தகுதிகளும் எனக்கு உள்ளதாகக் கூறினர். அந்தப் பதவியைப் பெற பெரியளவில் சிபாரிசு தேவைப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து ஆல்வாரும் ராஜேஷும் தங்களுக்குத் தெரிந்த நண்பர் நட்ராஜ் என்பவர் மூலம் மத்திய அரசில் வேலைப்பார்க்கும் சசிகுமாரைச் சந்தித்து பேசினால் நிச்சயம் அந்தப் பதவியை பெறலாம் என்று ஆசைவார்த்தைகளைக் கூறினர். மேற்படி சசிகுமாருக்கு எம்.பி, மத்திய அமைச்சர்களைத் தெரியும் என்பதால் அவர் மூலம் மெம்பர் பதவியை எளிதில் பெறலாம் என்றும் தெரிவித்தனர். அதற்கு நானும் சம்மதித்தேன்.

பின்னர், விருகம்பாக்கம் மேற்கு நடேசன் நகரில் உள்ள தாய்சா அப்பாட்மென்ட் காம்பளஸில் சசிகுமாரின் வீடு உள்ளதாகவும் அவரிடம் அனுமதி பெற்று அவரைச் சந்திக்கலாம் என்றும் ஆல்வாரும் ராஜேஷூம் என்னிடம் தெரிவித்தனர். அதன்படி ஆல்வார், ராஜேஷ், நட்ராஜ் ஆகியோருடன் நான் கடந்த 12.12.2019-ல் சசிக்குமாரை வீட்டில் சந்தித்தோம். அப்போது அவர், எங்களிடம் அந்த மெம்பர் பதவியை வாங்கித் தர தன்னால் முடியும். என்றும் அதற்கு கோடி ரூபாய் மேல் தேவைப்படும் எனவும் தெரிவித்தார். நான் என்னுடைய தகுதியை வைத்து அந்தப் பதவியை வாங்கிக் கொடுங்கள். கிடைத்தால் கிடைக்கட்டும் இல்லையென்றால் தேவையில்லை என்று தெரிவித்தேன். அப்போது ஆல்வாரும், ராஜேஷூம் நட்ராஜ் சசிகுமார் ஆகியோர் மட்டும் கலந்து பேசிவிட்டு என்னிடம் முதலில் 50 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும். பின்னர் அந்தப் பதவி கிடைத்தப்பிறகு மீதி பணத்தைக் கொடுங்கள் என்று கூறினர்.

பணம்

இதையடுத்து நான் முதல் தவனையாக 17.12.2019-ம் தேதி 10 லட்சம் ரூபாயை நான் வேலை செய்யும் மருத்துவமனையின் கார் பார்க்கிங்கில் வைத்து ஆல்வார், ராஜேஷ், சசிகுமார், நட்ராஜ் ஆகியோரிடம் கொடுத்தேன். அப்போது பணத்தை பெற்றுக் கொண்ட சசிகுமார், அடுத்த வாரம் டெல்லிக்கு செல்கிறேன். கண்டிப்பாக உங்களுக்கு அந்த மெம்பர் பதவியை பெற்றுத் தருகிறேன் என்று உறுதியளித்தார். பின்னர் 24.12.2019-ம் தேதி 20 லட்சம் ரூபாயும் 31.12.2019-ம் தேதி 20 லட்சம் ரூபாயும் கொடுத்தேன். இவ்வாறு மெம்பர் பதவிக்காக இதுவரை என்னிடமிருந்து 70 லட்சம் ரூபாய் வரை நான்கு பேரும் பெற்றனர்.

கொரோனா தொற்று காரணமாக லாக்டெளன் போடப்பட்டதால் டெல்லிக்குச் செல்ல முடியவில்லை என்றும் மெம்பர் பதவியை வாங்கித் தர முடியவில்லை என்றும் சசிகுமார் காரணம் கூறினார். லாக்டெளன் முடிந்த பிறகு சசிகுமாரை தொடர்பு கொண்ட போது அவரின் செல்போன் நம்பர் சுவிட்ச் ஆப் என பதில் வந்தது. இதையடுத்து ஆல்வார், ராஜேஷ் ஆகியோரிடம் மெம்பர் பதவியை வாங்கித் தரவில்லை என்றால் நான் கொடுத்த பணத்தை திரும்ப கொடுத்துவிடுங்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் இருவரும் சசிகுமாரின் அப்பா வீடு நாமக்கல்லில் உள்ளது. அங்குச் சென்று கேட்கலாம் என்று என்னிடம் தெரிவித்தனர். அதன்பிறகு நடராஜின் செல்போனும் சுவிட்ச் ஆப் ஆனது. இதனால் நானும் ஆல்வாரும் ராஜேஷும் நாமக்கல் சென்று சசிகுமாரின் அப்பாவிடம் விவரத்தைச் சொல்லி பணத்தைக் கேட்டோம். அப்போது சசிகுமாரின் அப்பா, அவன் (சசிகுமார்) நிறைய பேரிடம் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றி வருவதாகத் தெரிவித்தார். இதையடுத்து ராமநாதபுரத்தில் உள்ள நட்ராஜ் வீட்டைக் கண்டுபிடித்து சென்று பணத்தைக் கேட்டதற்கு அவரின் குடும்பத்தினர், கடந்த 5 ஆண்டுகளாக நட்ராஜ் வீட்டுக்கு வருவதில்லை என்று கூறினர். அதனால் சென்னைக்கு வந்தோம்.

நட்ராஜ்

இந்தச் சூழலில் நட்ராஜ் எனக்கு போன் செய்து, `என் வீட்டிற்கு நீங்கள் எப்படி செல்லலாம்?’ என்று என்னை மிரட்டினார். பின்னர் `நான் வாங்கிய 21 லட்சம் ரூபாயைக் கொடுத்து விடுகிறேன்’ என்று கூறினார். அதற்கு நான் 70 லட்சம் ரூபாய் கொடுத்தேன் என்று நட்ராஜிடம் கேட்டதற்கு, அவர் `என்னிடம் நீங்கள் 21 லட்சம் ரூபாய்தான் கொடுத்தீர்கள்’ என்று கூறினார். பின்னர் ஆல்வார் முன்னிலையில் பணத்தைக் கொடுக்க சம்மதித்த நட்ராஜ், எங்களை உயர் நீதிமன்றம் எதிரில் உள்ள ஒரு முகவரியைக் கூறினார். அங்கு ஆல்வார் வரவில்லை என்று என்னிடம் கூறிவிட்டார். அதுகுறித்து விசாரித்தபோதுதான், என்னையும் (செல்வக்குமார்) என்னுடன் வருபவர்களையும் நட்ராஜ் கொலை செய்யப் போவதாக புவனேஸ்வரி என்பவர் மூலம் எனக்கு தெரியவந்தது.

எனவே எனக்கு உயிர் பாதுகாப்பு இல்லை. மேலும் என்னைத் திட்டம் போட்டு ஏமாற்றியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு ஆதாரமாக ஆடியோ ரெக்கார்டு, வாட்ஸ்அப் மெசேஜ்களையும் டாக்டர் செல்வக்குமார் போலீஸாரிடம் கொடுத்தார். அதன்படி இன்ஸ்பெக்டர் ஜெகநாதன், 406, 420, 506 (11) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில் போரூர் உதவி கமிஷனர் ராஜூவ் பிரின்ஸ் ஆரோன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் நட்ராஜ், சசிகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதானவர்களிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

கைது

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கைதான சசிகுமார், பி.எஸ்.சி படித்துள்ளார். வழக்கறிஞராக இருப்பதாகக் அடையாள அட்டை ஒன்றை காண்பித்தார். அவர் வழக்கறிஞரா என்று விசாரித்து வருகிறோம். மேலும் சசிகுமார், தன்னை ஐ.ஏ.எஸ் அதிகாரி என்றே சொல்லிக் கொண்டு மோசடி வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த வழக்கில் கைதான நட்ராஜ், தேனிக்கரை காவல் நிலையத்தில் பணியாற்றியவர். மோசடி வழக்கு காரணமாக அவர் பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். தற்போது நட்ராஜ் சென்னையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். தன்னுடைய போலீஸ் வேலையை திரும்ப வாங்கி தரும்படி சசிகுமாரைச் சந்தித்துள்ளார். அதன்பிறகு சசிகுமாருடன் சேர்ந்து மோசடி வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார். கைதான சசிகுமார், சைரன் வைத்த இன்னொவா காரில் பந்தாவாக வலம் வருவார்.

அவரின் வீட்டில் மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பி-க்கள் ஆகியோருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இருந்தன. மேலும் அரசு முத்திரை தன்னுடைய செல்போனில் தொடங்கி அவர் பயன்படுத்தும் டைரி வரை பொறித்து வைத்துள்ளார். சசிகுமார் குடியிருக்கும் வீட்டின் செக்யூரிட்டியிடம் விசாரித்தால், ஐ.ஏ.எஸ் அதிகாரி அய்யா வீடா என்றுதான் சொல்லுமளவுக்கு அவர் தன்னை பிரபலப்படுத்தி வைத்திருக்கிறார். போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி சசிகுமார் மீது ஏற்கெனவே இதுபோன்ற மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் சசிகுமார், தன்னை பத்திரிக்கையாளர் என்றும் கூறி வருகிறார். தொடர்ந்து சசிகுமாரின் பின்னணி குறித்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.



from Latest News https://ift.tt/oElVOqs

Post a Comment

0 Comments