`படத்தில் ரஜினிகாந்த்-க்கு மகளாக நடிக்கும் வாய்ப்பு’ - இளம் பெண்ணிடம் ஆசைகாட்டி ரூ.10 லட்சம் மோசடி

பாலிவுட்டில் சாதிக்க வேண்டும் என்ற ஆசையில் தினமும் நாடு முழுவதும் இருந்து ஏராளமானோர் மும்பைக்கு வந்துகொண்டிருக்கின்றனர். அவர்களில் அதிகமானோர் படவாய்ப்புக்கள் கிடைக்காமல் கிடைத்த வேலையை செய்து பிழைப்பு நடத்தவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இது போன்ற பட வாய்ப்பு தேடி வருபவர்களிடம் சிலர் பணத்தை மோசடி செய்யும் சம்பங்களும் நடக்கிறது. நடிகர் ரஜினிகாந்த்துடன் நடிக்க ஆசைப்படாதவர்கள் யாரும் இருக்க முடியாது. மும்பையில் ரஜினிகாந்த்துடன் நடிக்கும் ஆசையில் இளம்பெண் ஒருவர் ரூ.10 லட்சத்தை இழந்துள்ளார்.

மும்பையை சேர்ந்த நிலேஷா(21) என்ற பெண்ணிடம் பியூஸ் ஜெயின், மந்தன் ருபேரல் என்ற பெயரில் இரண்டு பேர் அணுகி, `நாங்கள் ஐதராபாத்தை சேர்ந்த வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர்கள். நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து ஜெயிலர், ஆர்சி-15 ஆகிய படங்கள் தயாரிக்க இருக்கிறோம்.

இப்படத்தில் நடிக்க உங்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளனர். குறிப்பாக ரஜினி காந்த் மகள் வேடத்தில் அல்லது சைபர் ஹேக்கர் வேடத்தில் நடிக்க வாய்ப்பு கொடுப்பதாக தெரிவித்துள்ளனர். படத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக அப்பெண்ணிடம் போலி ஆவணங்களையும் கொடுத்துள்ளனர். ஆரம்பத்தில் இரண்டு பேரும் சம்பந்தப்பட்ட பெண்ணுடன் கடந்த ஜூலை மாதம் போன் மூலம் பேசினர். போனில் அப்பெண்ணிடம் பேசி படத்தில் நடிக்க வைக்க சம்மதம் வாங்கினர். அதோடு பாஸ்போர்ட் சரிபார்ப்பு, அரசு அனுமதி போன்ற சட்டரீதியான காரணங்களுக்காக சிறிது பணம் கொடுக்கவேண்டும் என்று கூறி அப்பெண்ணிடம் ரூ.10 லட்சத்தை வாங்கிவிட்டனர்.

பணம் கிடைத்தவுடன் இரண்டு பேரும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை அப்பெண்ணால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாதிக்கப்பட்ட பெண் மும்பை தகிசர் போலீஸில் புகார் செய்துள்ளார். போலீஸாரின் விசாரணையில் ஏற்கனவே இருக்கும் கம்பெனி பெயரை பயன்படுத்தி இரண்டு பேரும் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் படத்தயாரிப்பு கம்பெனி 2003ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டு பல தெலுங்குப் படங்களை தயாரித்து இருக்கிறது. இது குறித்து துணை போலீஸ் கமிஷனர் சோம்நாத் கூறுகையில், `புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம்’ என்று தெரிவித்தார்.



from Latest News https://ift.tt/WLFnKuP

Post a Comment

0 Comments