மதபோதகர் பிரார்த்தனைக்காக அழைக்கப்பட்டு கேரளாவுக்கு கடத்தல்; விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

கன்னியாகுமரி மாவட்டம், ஆற்றூர் அருகே பள்ளிக்குழிவிளை பகுதியில் அசம்பிளீஸ் ஆஃப் காட் கிறிஸ்தவ தேவாலயம் செயல்பட்டு வருகிறது. இங்கு மதபோதகராக இருப்பவர் ஜோண் குட்டி (62). தேவாலயத்தின் அருகில் உள்ள வீட்டில் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். மார்த்தாண்டத்தைச் சேர்ந்த சிலர் ஜோண்குட்டியை பிரார்த்தனை செய்ய வருமாறு கடந்த 24-ம் தேதி மாலையில் அழைத்திருக்கின்றனர். ஜோண் குட்டி மனைவியிடம் கூறிவிட்டு பிரார்த்தனைக்காக ஆட்டோவில் மார்த்தாண்டத்துக்குச் சென்றிருக்கிறார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் அவரது செல்போனை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆஃப் என வந்திருக்கிறது. இதையடுத்து பல இடங்களில் தேடியும் ஜோண் குட்டியை கண்டுபிடிக்க முடியாததால் அவர் மகன் ஷெரின் ஜோண் திருவட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

கடத்தலுக்குப் பயன்படுத்திய கார்

திருவட்டார் போலீஸார் வழக்கு பதிவுசெய்து ஜோண் குட்டியை கண்டுபிடிப்பதற்காக திருவட்டாறு முதல் மார்த்தாண்டம் வரை சாலை ஓரங்களில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது மார்த்தாண்டத்தில் வைத்து சிலர் ஜோண் குட்டியை கேரள பதிவெண் கொண்ட காரில் கடத்திச்செல்வது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. அவரை யார் கடத்தியிருப்பார்கள் என்பதை அறிந்துகொள்ள குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். அதில் ஜோண் குட்டியிடம் கேரள மாநிலம், கோட்டயத்தைச் சேர்ந்த சிலர் போனில் பேசியதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இது குறித்து திருவட்டார் போலீஸார் கேரள போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். கேரள போலீஸ் உதவியுடன் கோட்டயத்தில் உள்ள ஒரு வீட்டிலிருந்து ஜோண் குட்டி மீட்கப்பட்டார். மதபோதகரை கடத்தியதாக கோட்டயம் மன்னார்காட்டுப் பகுதியைச் சேர்ந்த சுனில் (46) என்பவர் கைதுசெய்யப்பட்டார். கடத்தலுக்குப் பயன்படுத்திய காரையும் திருவட்டார் போலீஸார் பறிமுதல் செய்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் பிரார்த்தனைக்காக என அழைத்து ஜோண் குட்டியை சுனில் கடத்தியது தெரியவந்திருக்கிறது.

கைதுசெய்யப்பட்ட சுனில்

``ஜோண் குட்டியின் சொந்த ஊர் கேரள மாநிலம், கோட்டயம். அவர் பெயரைக் கூறி கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒருவர் சுனிலிடம் ஏழு லட்சம் ரூபாய் மோசடி செய்திருக்கிறார். இது குறித்து சுனில் கோட்டயம் போலீஸில் புகார் அளித்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். அதற்காக மதபோதகர் ஜோண் குட்டியை கோட்டயம் காவல் நிலையத்தில் ஒப்படைப்பதற்காக அவரை கடத்தியதாகத் தெரிவித்திருக்கிறார். சுனில் சொல்வது உண்மையா என்றும், மத போதகரை கடத்தியதற்கு வேறு காரணங்கள் உள்ளதா எனவும் விசாரணை நடத்தி வருகிறோம்" என்கின்றனர் போலீஸார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/jmlMYJH

Post a Comment

0 Comments