`பொய் வழக்குப் போட்டு போலீஸார் மிரட்டினாங்க!' - கடிதம் எழுதிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட இளம்பெண்

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே உள்ள மேற்பனைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் நீலகண்டன். இவர் மனைவி கோகிலா. இவர் திடீரென வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவரின் உடலை மீட்ட கீரமங்கலம் போலீஸார், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதற்கிடையே கோகிலா, இறப்பதற்கு முன்பு அவர் எழுதி வைத்திருந்ததாகக் கிடைத்த ஒரு கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தக் கடிதத்தில், ``நான் கோகிலா, என் சாவுக்கு எம்.எம்.குமார், அவர் மனைவி புவனேஸ்வரி ஆகியோர்தான் காரணம். செய்யாத தவற்றுக்காக பொய் வழக்குப் போட்டு, கீரமங்கலம் ஸ்டேஷனில் என்னை மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டனர்.

போராட்டம்

என்னோடு, என் கணவரையும் மனஉளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளனர். அன்னைக்கு ஒரு நாள் அதிகாலையிலேயே ஸ்டேஷனுக்கு அழைத்துப் போய் என்னை மிரட்டினார்கள். போலீஸ் தொடர்ந்து எங்களை மிரட்டி வருகின்றனர். கடைசியாக போலீஸ் என்னை திருச்சி சிறையில் அடைப்பதாகக் கூறிவிட்டுச் சென்றனர். மனஉளைச்சலில் இந்த முடிவை எடுக்கிறேன்" என்று எழுதி வைத்திருக்கிறார். கடிதத்தைக் கைப்பற்றிய உறவினர்கள், காவல் நிலையம் முன் திரண்டனர். கடிதத்தை வைத்துக் கொண்டு, கோகிலா கூறியுள்ள சம்பந்தப்பட்ட புவனேஸ்வரி, குமார், பொய் வழக்கு பதிவுசெய்து மிரட்டிய காவலர்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலையில் மறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து பா.ஜ.க, நாம் தமிழர் உட்பட கட்சிகளைச் சேர்ந்தவர்களும் சேர்ந்து காவல் நிலையத்திற்குள் நுழைந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது, அங்கிருந்த போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து,  கோகிலாவின் கணவர் நீலகண்டன் புகாரின் பேரில், புவனேஸ்வரி, குமார் மற்றும் எஸ்.எஸ்.ஐ ஜெயக்குமார், காவலர் கிரேசி உட்பட 6 பேர்மீது சந்தேகத்தின் அடிப்படையில் வழக்கு பதிவுசெய்தனர். காவல்துறையினர் தவறு செய்திருந்தாலும், உரிய விசாரணை நடத்தி அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உறுதியளித்த நிலையில், போராட்டத்தைக் கைவிட்டனர்.

கோகிலா

இது குறித்து உறவினர்களிடம் கேட்டபோது, ``நீண்ட நாள்களாக கோகிலா குடும்பத்திற்கும் குமார்-புவனேஸ்வரி குடும்பத்திற்கும் இடையே பாதைப் பிரச்னை இருந்து வந்தது.
இதில், புவனேஸ்வரி காவல் நிலையத்தில் பணிபுரிவதால், தன்னுடைய செல்வாக்கை வைத்து, காவல்துறை அதிகாரிகள் துணையோடு கோகிலாவை மிரட்டியிருக்கிறார். குமார் தி.மு.க-வில் இருக்கிறார். கட்சி பவரால், காவலர்களும் குமார்-புவனேஸ்வரிக்கு துணை போய் மிரட்டியிருக்கின்றனர்.  பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்க வேண்டிய காவல்துறையே அலட்சியத்துடன்  ஒருதலைபட்சமாக நடந்துகொண்டதால், பரிதாபமாக கோகிலாவின் உயிரிழப்பு நடந்திருக்கிறது. உரிய நீதி கிடைக்கணும்" என்றனர்.

இது குறித்து மாவட்ட எஸ்.பி வந்திதா பாண்டே, ``போலீஸார்மீது தவறு இருந்தாலும், விசாரணை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/hK4Ifvu

Post a Comment

0 Comments