``ஆளுநரின் மக்கள் குறை கேட்பு, ஜனநாயக விரோதம்!” - ஆளுநர் தமிழிசையை தாக்கும் புதுச்சேரி அதிமுக

என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைப்பெற்று வரும் புதுச்சேரியில், தமிழிசை சௌந்தரராஜன் பொறுப்பு துணை நிலை ஆளுநராக இருக்கிறார். இரண்டு நாள்களுக்கு முன்பு ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், இனி ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாம் சனிக்கிழமைகளில் ’மக்கள் சந்திப்பு’ நடக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன் முன் பதிவுக்கான தொலைபேசி எண்களையும் வெளியிட்டிருந்தது புதுச்சேரி அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி கிழக்கு மாநில அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன், “புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் துணைநிலை ஆளுநரின் பங்களிப்பு நாளுக்கு நாள் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. மக்கள் நலன் மற்றும் நிர்வாகம் சார்ந்த துணைநிலை ஆளுநரின் தொடர்ச்சியான அறிவிப்புகள், புதுச்சேரி மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசுக்கு இணை அரசாங்கம் நடப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி வருகிறது.

புதுச்சேரி கிழக்கு மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன்

 மத்திய அரசின் அறிவிப்புக்கள், மத்திய அரசின் பல்வேறு சட்டங்கள், பிரதமருடைய திட்ட அறிவிப்புகள், மாநிலத்தின் வளர்ச்சி வருவாய் பெருக்கம், நிதிக்கசிவை தடுத்தல், மாநில உரிமைகளை பெற்றுத் தருதல் போன்றவற்றில்தான் துணைநிலை ஆளுநரின் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும். கடந்த தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் முதல்வராக இருந்த நாராயணசாமி அவர்கள், மலிவு விளம்பர அரசியலை மனதில் கொண்டு அப்போதைய துணை நிலை ஆளுநர் கிரண் பேடியுடன் மோதல் போக்கை திட்டமிட்டு ஏற்படுத்தி மாநில வளர்ச்சியை பின்னுக்குத் தள்ளினார். தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வராக உள்ள முதலமைச்சர் ரங்கசாமி, துணைநிலை ஆளுநரோடு  இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்தி மாநில வளர்ச்சியையும் மக்கள் நலனையும் மனதில் கொண்டு ஒரு நல்லாட்சியை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் துணைநிலை ஆளுநரிடம் மக்கள் தங்களை குறைகளை நேரடியாக தெரிவிக்கலாம் என்று துணைநிலை ஆளுநர் அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக ஆளுநரும் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிகிறார். இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசுக்கு பின்னடைவையும், அவமரியாதையும் ஏற்படுத்தக்கூடிய செயலாகும். ஆட்சியாளர்கள் செய்யும் தவறுகளை, பாதிக்கப்பட்டவர்கள் ஆளுநரிடம் முறையிடுவது மறைமுகமாக இருக்கும் ஒரு நிகழ்வாகும். அதையே பொது அறிவிப்பின் மூலம் என்னிடம் உங்கள் குறைகளை கூறுங்கள் என்று கூறி செயல்படுத்துவது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சிக்கு ஒரு இணைய அரசாங்கம் நடப்பது போன்ற ஒரு சூழ்நிலையை உருவாக்கும். ஏற்கனவே புதுச்சேரியில் துணைநிலை ஆளுநராக பணிபுரிந்த கிரண் பேடி அவர்கள், காவல்துறையின் அதிகாரியாக இருந்து துணைநிலை ஆளுநர் பதவிக்கு வந்தவர்.

அவருக்கு ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மதிப்பளிப்பது குறித்தோ, அரசின் நிர்வாகத்தில் தேவையற்ற குறுக்கீடுகள் செய்வது பற்றியோ தெரிய வாய்ப்பில்லை. ஆனால் நம்முடைய துணைநிலை ஆளுநர் அவர்கள் பாரம்பர்ய அரசியலில் குடும்பத்தில் பிறந்து தனது கட்சியின் தமிழகத்தின் மாநில தலைவராகவும், தேசிய அளவில் பல்வேறு பொறுப்புகளை வகித்து திறம்பட செயல்பட்டவர். அப்படிப்பட்டவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசுக்கு நெருடலை ஏற்படுத்துகின்ற விதத்தில், மக்கள் குறை கேட்பு என்ற பெயரில் இணை அரசாங்கத்தை நடத்துவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஆளுநரின் மக்கள் குறை கேட்பு ஜனநாயகத்திற்கு விரோதமானது” என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/hT4s57X

Post a Comment

0 Comments